Yahya

தொலைக்காட்சிகளின் அரசியல்.. Must Read


- முஜீப் இப்ராஹீம் -

முன்னொரு காலத்தில் ரூபவாஹினி, ITN கொஞ்சம் சிரமப்பட்டால் பொரிந்து கொண்டு TNL வரும்....

பிற்காலங்களில் உள்நாட்டிலும் பல தனியார் சனல்கள் உருவாகின.
அவற்றின் ஒட்டு மொத்த இலக்கு வணிகமாகவே இருந்தது ....இருக்கிறது!!
இடையிடையே மானே தேனே போட்டுக்கொள்வது போல வெள்ளம், மண் சரிவு வரும் போது நடக்கிற மனித நேயப்பணிகள் அனைத்தும் குறித்த தொலைக்காட்சி நிறுவுனர்களின் அரசியல் அட்டவணைகளின் பால் பட்டது!


சுப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், டான்ஸிங் ஸ்டார் என தனியார் தொலைக்காட்சிகள் களைகட்ட அரச தொலைக்காட்சிகளும் காலப்போக்கில் எல்லா நாம்பனும் ஓடுதென்று வயிற்று நாம்பனும் வாலைக்கிளப்பி ஓடிய கதையாக படை வீர வீராங்கனைகளுக்கே ஸ்டார் நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் அளவிற்கு நிலமை மாறியது.

கூடவே செய்மதி மற்றும் கேபிள் வழியாக வருகிற சனல்களோ ஏராளம் அதிலும் குறிப்பாக தென்னிந்திய சனல்களின் தாக்கம் நம்மத்தியில் வீரியமாக பரவி உள்ளது.

இங்கேயுள்ள நவீன பிரச்சினை என்னவென்றால் இந்த சனல்கள் அனைத்தும் விளம்பரங்களால் பணமீட்டும் பழைய முறையிலிருந்து முன்னேறி வாசகர்களாக இருந்த பொது ஜனங்களையே தங்களது சனல்களுக்காக சம்பளமின்றி உழைத்து பணமீட்டி கொடுக்கும் கூலியற்ற தொழிலாளர்களாக மாற்றியதுதான்....

உதாரணமாக சிரச சுப்பர் ஸ்டார் நிகழ்ச்சி மக்கள் வாக்களிக்கும் நிகழ்ச்சியாக ஜனரஞ்சகப்படுத்தப்படும் போது ஏதோவொரு சிங்கள குக்கிராமத்தின் மூலைகளிலும் கடைசி சுற்று போட்டியாளரின் கவர்ச்சி மிகு கட்அவுட்டினை கடை நிலை ஊழியனைப்போல அந்த பிரதேச மக்களே கட்டி மகிழ்கிற, அதற்கு வாக்குச்சேர்த்து நிகழ்ச்சியை ப்ரமோட் பண்ணுகிற போக்குகளை அவதானிக்கிறோம்.

அதுபோலதான் அண்மைய பிக் பொஸ் நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் மக்களால் எடுத்துச்செல்லப்படுகிறது.


குறித்த நிகழ்ச்சியை கலாய்ப்பதாய் உருவாக்கப்படும் ட்ரோல்கள் தொடக்கம் சமூக வலைத்தளங்களில் எழுதப்படுகிற கருத்துக்கள் வரை அந்த நிகழ்ச்சியை மென்மேலும் பரப்பிக்கொண்டே இருக்கின்றன!

நாம் இங்கே கூலி இல்லாத கடை நிலை ஊழியர்களாக விஜய் டீவியின் பெரு வணிகத்தில் பங்காற்றி கொண்டிருக்கிறோம்!

வாய்ப்பிழந்து வீட்டுக்குள் முடங்கி கிடந்த மூன்றாந்தர நடிக நடிகைகளின் வருமான வளர்ச்சிக்கு ஓசி சேவகம் செய்துகொண்டிருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியை ப்ரமோட் பண்ண குறித்த தொலைக்காட்சியே பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிற நிலையில், பொது மக்களை கொண்டே அதனை வியாபிக்கச்செய்யவும் குறித்த சனல் போடுகிற மலின திட்டங்களுக்குள் அப்பாவி இளைஞர்களும் அப்பாவின் வயதில் உள்ளவர்களும் அகப்பட்டு அலைவதை பார்க்கிற போது அசூசையாக இருக்கிறது!

இந்த நிகழ்ச்சியை அலசுவதால், ப்ரமோட் பண்ணுவதால் அல்லது கழுவி ஊற்றுவதால் நமது கல்லாவில் நாலு காசு தேறிவிடப்போகிறதா?
இல்லவே இல்லை....

இந்த தொலைக்காட்சி அரசியலுக்கு பின்னால் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் நம்மை அறியாமல் நாமே ப்ரமோட்டர்களாக பலியாகிக்கொண்டிருக்கிறோம்.

பிக் பொஸ் நிகழ்ச்சி போன்றவற்றை பொது வெளியில் அதிகமாக அலசுவதால் அந்தச்செயலானது அதனைப்பற்றி அதுவரை அறியாதவரும் தேடிப்பார்க்க தூண்டுகிறது....

ஈற்றில் அதனை பொது வெளியில் ப்ரொமோட் பண்ணிய கூலியற்ற ஊழியருக்கு ஒன்றும் தேறப்போவதில்லை!
ஆனால்.....

அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வோருக்கு பல லட்சங்களில் பைக்கற்றுகள் நிரம்பும்...

கமலஹாசருக்கு நன்றாகவே கல்லா கட்டும்.

ஆகவே நமது பொன்னான நேரத்தை கொஞ்சம் ஆரோக்கியமான எழுத்துகளின் பால் செலவளித்தால் அல்லது நமது சொந்த பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தினால்
இறந்த பின்னரும் யாருக்கோ அது பயன்தருமல்லவா?

இந்த பிக் பொஸ் என்ன தரப்போகிறது?
தொலைக்காட்சிகளின் அரசியல்.. Must Read தொலைக்காட்சிகளின் அரசியல்.. Must Read Reviewed by Madawala News on 7/24/2017 08:24:00 AM Rating: 5