Yahya

ரவூப் ஹக்கீம் இருக்கும் போது இனவாதிகளுக்கு என்ன பயம்....?


இந்த உண்மை தெளிவானது.கைப்புனுகுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது போல...கைப்பிடிச் சோற்றுக்குள்ளிருக்கும் பூசணிக்காயைப் பார்ப்பதற்குப் பூதக் கண்ணாடி அவசியமற்றது போல...நுரை கடலைப் பார்ப்பதற்கு நுணுக்குக்காட்டி அனாவசியமென்பது போல... முஸ்லிம்களுக்கெதிராக இந்த நல்லாட்சியில் நடைபெறும் அநியாயங்கள் அதிகரித்துக்கொண்டு போவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாடுதான் மிகப் பிரதான காரணமென்பது மிக மிகத் தெளிவானது.


ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரவூப் ஹக்கீமின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே (கவனிக்க: ரவூப் ஹக்கீமின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். மர்ஹூம் அஷ்ரப் அவர்களினுடையதல்ல) மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையேயுள்ள அந்நியோன்யங்கள், பரஸ்பரப் புரிந்துணர்வுகள், எழுதப்படாத இரகசிய ஒப்பந்தங்கள் என்பவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கானவை அல்ல என்பதும் மாறாக முஸ்லிம்களின் இருப்பையும் உரிமைகளையும் மார்க்க விழுமியங்களையும் நிம்மதியையும், நித்திரையையும் பலிபீடமேற்றுகின்றவையே என்பதும் படித்த, பகுத்தறிவுள்ள எவராலும் மறுதலிக்க முடியாத உண்மையாகும். 


ஆயினும் தமக்கான பதவிகள், வேலைவாய்ப்புகள், சலுகைகள் மற்றும் சில்லறை இலாபங்களுக்காக இந்தப் பேருண்மை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பலராலும் மனச்சாட்சியற்ற வகையில் ஒப்புக்கொள்ளப்படாமல், அம்பலப்படுத்தப்படாமல் ஆழக் குழி தோண்டித் தொடர்ச்சியாகப் புதைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.''ரணில் விக்கிரமசிங்க சாரதியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பஸ்ஸில் நான் ஒரு போதும் ஏற மாட்டேன்!'' என்று தனது சமூகத்தின் நலனுக்காகச் சபதம் செய்த மறைந்த மாதலைவர் அஷ்ரப் அவர்களின் மையித்தின் மீது தலைவனான ரவூப் ஹக்கீம், அன்னாரது சபதத்தையும் சூளுரையையும் ஒருசேரத் தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவுடன் பஸ்சிலேறி அதனை ஒரு காதல் வாகனமாக்கிக் காலமெல்லாம் தேனிலவு கொண்டாடுவது ஏன் என்று, உள்ளத் தூய்மையுடன் ஒவ்வொரு கலிமாச் சொன்ன முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமல்ல, இன்றைய பொல்லா ஆட்சியின் போஷகர்களுக்கும் ரவூப் ஹக்கீம் மிக்க விசுவாசமாகவே நடந்து கொள்கிறார். முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வளவுதான் இன்னல்களை ஏற்படுத்தினாலும் ரவூப் ஹக்கீம் நம்மைவிட்டுச் செல்ல மாட்டார் என்ற திடமான நம்பிக்கையைத் தனது பாசாங்குத்தனமான செயற்பாட்டின் மூலம் ரவூப் ஹக்கீம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.எந்த இனவாதத்துக்கெதிராக நமது முஸ்லிம் சமூகம் வீறுடன் எழுந்து ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்ததோ, அந்த இனவாதத்தைவிட அதிகளவு இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன்றைய ரணில்-மைத்திரி அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ முஸ்லிம் சமூகம் தங்களைத் தோற்கடித்துவிடுமேயென எண்ணாதிருக்குமா? ஆனாலும், அந்த எண்ணத்திலிருந்து, அந்தப் பயத்திலிருந்து இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது நிச்சயமாக ரவூப் ஹக்கீமே என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். 'நான் கைகாட்டும் இடத்தில் வாக்குப் புள்ளடியிட எனக்கென்றொரு முஸ்லிம் வாக்கு வங்கியுள்ளது. ஆகவே கவலை வேண்டாம்!' என்ற ஹக்கீமின் உறுதிமொழியும் நடவடிக்கைகளுமே இன்றைய அரசாங்கம் இனவாதிகளை அரவணைப்பதற்கும் முஸ்லிம்களின் கண்ணீரைக் கண்டு கொள்ளாதிருப்பதற்கும் பிரதான காரணமாகும்.இந்த அரசாங்கம் அடுத்த முறையும் ஆட்சிபீடமேறவேண்டுமானால் அவர்களுக்குக் கணிசமானளவு சிங்கள வாக்குகள் வேண்டும். மற்றொரு தேர்தலில் தான் எம். பி. ஆக வேண்டுமானால் ஹக்கீமுக்கும் சிங்கள வாக்குகள் போதியளவு கிடைக்க வேண்டும். இந்த இரு விடயங்களையும் கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் நாமின்று அனுபவிக்கும் இனவாதக் கொடுமைகளுக்கான காரணம் தெரிந்துவிடும்.


'எவ்வளவுதான் கொடுமைகள் இழைத்தாலும் தம்மைவிட்டும் பிரிந்து போகாத பெருந்தொகை வாக்குகளை முஸ்லிம்களிடமிருந்து பெற்றுத் தரும் கைங்கரியத்தைச் செய்வதற்கு ரவூப் ஹக்கீம் என்னும் விசுவாசமான நபர் இருக்கும் போது நமக்கென்ன கவலை?' என்ற ரீதியில் சிந்திக்கும் இந்த அரசாங்கம், 'ஆகவே நாம் சிங்கள இனவாதிகளைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெறுகின்ற செயற்பாட்டை மேற்கொள்வோமெ'ன்று தீர்மானித்தே இயங்கிக் கொண்டிருக்கிறதென்பதைச் சிறு பிள்ளை கூட அறியும்.


நமது சமூகத்தின் மீதான அக்கறையைவிட ஹக்கீமுக்குப் பிற சமூகங்களின் மீதான அக்கறை அதிகமென்பது 'காதலாற் கசிந்துருகி' அவர் வாழ்ந்த காலத்தால் மட்டுமல்ல, அதற்கு முன்னும் பின்னுமென நிறைய விடயங்களில் நிரூபணமாகியிருக்கிறது. 


பிரபாகரனுடனான ஒப்பந்தம் தொடங்கி, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது அசிங்கமான செயலென அறைகூவல் விடுத்ததில் தொடர்ந்து மிக அண்மையில் வடக்கு முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுப்போரையே பகிரங்க மேடையில் கண்டித்தும் கேலி செய்தும் பேசுகின்ற அவரது 'நயவஞ்சகத்தனம்' வரை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம். ஆயினும் அவரையே நமது சமூகத்தின் தானைத் தலைவனென இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.


ஹக்கீம் என்னும் ஒரு தனி மனிதன் தனது சொந்த இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக ஒரு சமூகத்தையே இவ்வாறு பலி கொடுத்துக் கொண்டிருப்பது மிக்க அநீதியானது மட்டுமல்ல நமது சமூகத்தின் எதிர்காலத்துக்கு மிக்க ஆபத்தானதும் கூட. இனியும் இந்த சமூகம் விழித்தெழவில்லையானால்......????
ரவூப் ஹக்கீம் இருக்கும் போது இனவாதிகளுக்கு என்ன பயம்....? ரவூப் ஹக்கீம் இருக்கும் போது இனவாதிகளுக்கு என்ன பயம்....? Reviewed by Madawala News on 7/15/2017 08:22:00 PM Rating: 5