Kidny

Kidny

அமானிதம்..


எம்.எம்.ஏ.ஸமட் 

காற்று, நீர், நிலம், காடு என மனிதனின் பயன்பாட்டுக்காக இறைவன் அளித்த இயற்கையின் அத்தனை வளமும் மனிதன் மீது சுமத்தப்பட்ட அமானிதங்கள். அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பைச் சுமந்தவனாக மனிதன் அவற்றின் பயனோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

மாறாக, இயற்கைக்கு அநியாயம் இழைக்கின்றபோது, இயற்கையின் அமானிதத்தைக் காக்க மறக்கின்றபோது அந்த இயற்கையாலேயே அழிவையும் சந்திக்கின்றான். உலகளவில் நிகழும் பல இயற்கை அழிவுகளுக்கு மனித செயற்பாடுகளே காரணமாக அமைந்துவிடுகின்றன என்பது நிதர்சனமாகும்.

அவ்வாறுதான் தனிநபர் பெறும் பட்டமும், பதவியும் அவருக்கு அமானிதம். அவற்றைப் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டியது அப்பட்டத்தையும் பதவியையும் பெற்றவரின் பொறுப்பாகும். அதனை முறையாகப் பாதுகாக்காதபோது அந்தப் பதவியும, பட்டமும் குறித்த நபருக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

இவ்வாறான அமானிதங்களின் வரிசையில் ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களின் அரும்பெரும்பாக்கியமாகக் கிடைக்கபெற்ற பிள்ளைகள் பெரும் அமானிதமாகும். உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச் சிறந்த நம்பிக்கை, எதிர்காலம் பிள்ளைகள்தான். அப்பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவர்களாக பெற்றோர்கள் உட்பட யாராலெலாம் இருக்கிறார்களோ அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகும்போது அல்லது அதில் அலட்சியம் காட்டும்போது அப்பிள்ளைகள் ஆபத்துக்குள்ளாகிறார்கள்.

இத்தேசத்தில் பிள்ளைகள் அல்லது சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் ஆபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதற்கான காரணம் பிள்ளைகள் மீதான அமானித்தைச் சுமந்த பெற்றோர்கள் உட்பட பொறுப்புதாரிகள் விடும் தவறுகள் என்பதை நிராகரிக்க முடியாது.

சிறுவர்களும் சமகால ஆபத்துக்களும்

பிள்ளைகள் அல்லது சிறுவர்கள் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வாய்ப்புக்களைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்களும், வசதிகளும் ஆரோக்கியமாக வழங்கப்பட்டு முறையான வழிகாட்டலின் பிரகாரம் அவர்கள் வளர்க்கப்படுகின்றபோது அல்லது பராமரித்துக் கண்காணிக்கப்படுகின்றபோது அவர்களை ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கலாம்.

ஏனெனில், மேலத்தேய கலாசாரமும் தொழில்நுட்ப சாதனங்களின் பாவனையும்; சிறுவர்களை அடிமைப்படுத்தி அவர்கள் அவற்றினால் அள்ளுண்டு போவதற்கு வாய்ப்பளிக்கிறது. அதுமாத்திரமின்றி, இச்சிறுவர்கள் எத்தரப்புக்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்படுகிறார்களோ அத்தகையவர்கள் அவர்களது அமானிதத்தை அலட்சியம் செய்கின்றபோது அவையும் குறித்த சிறுவர்களின் உயிருக்குக் கூட ஆபத்தாக அமைந்து விடுவதை அன்றாடம் இடம் பெறும் சம்பவங்கள் புடம்போடுகின்றன.


மறுபுறம், அவரவர் சமூகத்திற்கான கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் புறக்கணித்து, ஒழுக்க நெறிகளை ஒதுக்கி வைத்து, வழிகாட்டல்களை அலட்சியம் செய்து வாழும்; மனப்பாங்கு சிறுவர்கள் மத்தியில் மேலோங்கி வருவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வறான செயற்பாடுகள் விளக்கில் வண்டு விழுவது போல அவர்களாகவே ஆபத்தில் விழுந்து விட வழிகோல்கிறது.


இக்கால கட்டத்தில், பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விடும் தவறுகளும், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மார்க்கக் கல்வி நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்கள் தங்களது பொறுப்பிலுள்ள பிள்ளைகள்; தொடர்பில் தங்களது பொறுப்பையும், அமானிதத்தையும் மறந்து செயற்படுவதும் அல்லது அவற்றில் தவறிழைப்பதும் பிள்ளைகள் ஆபத்தில் விழுந்து விடுவதற்கு ஏதுக்களாக அமைந்து விடுகின்றன.


தற்காலத்தில் நாட்டில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களைப் புரிகின்றவர்களின் சதவீதத்தில் கனிசமான எண்ணிக்கையினராக சிறுவர்கள் காணப்படுவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் தற்கொலை மற்றும் போதைவஸ்த்துப் பாவனை என்பன சிறுவர்கள் மத்தியில் அதிகரித்தும்; காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இவற்றின் பின்னணியில் குழந்தை வளர்ப்பில் விடப்படுகின்ற தவறுகளும் பிரதான சமூகமயமாக்கல் முகவர்களாகக் கருதப்படும் பெற்றோர்களினாலும் பாடசாலை மற்றும் ஆன்மீகத்தை வளர்க்கும் நிலைங்களின் ஆசிரியர்களினாலும் வழங்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனைகளில்; காணப்படுகின்ற பலவீனங்களும் தாக்கம் செலுத்துவதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஒரு சமூகம் அரசியல,; சமூக, பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைய வேண்டுமாயின், அச்சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டல்கள் இருப்பது இன்றியமையாதது. வழிகாட்டிகள் என சமூகம் நம்புகின்றவர்;களின் ஆரோக்கியமற்ற, பொடுபோக்கான செயற்பாடுகள் அல்லது வழிகாட்டல்கள் அச்சமூகத்தை வீழ்ச்சிப் பாதையில் நகர்த்துவதுடன் அச்சமூகத்தின் இருப்பு முதல் அத்தனையையும் கேள்விக்குறியாக்கும்;.


அவ்வாறுதான், ஒரு பிள்ளையின்; வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும் முறையான வழிகாட்டல்கள் அவசியம். பிள்ளையின் வழிகாட்டிகளான பெற்றோர்கள்,பாதுகாவளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்; பலவீனமடைகின்றபோது, பிள்ளைகளின் நடத்தை உட்பட அத்தனை செயற்பாடுகளும் ஆரோக்கிமற்றதாக அமைந்து விடுகின்றன. அவை ஆபத்துக்களை விலைகொடுத்து வாங்கச் செய்கின்றன.


சமகாலத்தில் சமூகச் சூழலில் மற்றும் குடும்ப மட்டங்களில் நடந்தேறுகின்ற ஒரு சில நிகழ்வுகளை நோக்குகின்றபோது, வழிகாட்டல்களிலுள்ள பலவீனங்களும் விழிப்புணர்வில் காணப்படும் வினைத்திறமின்மையுமே அவற்றுக்குக்கான காரணங்களாக என எண்ணத் தோன்றுகிறது.


முறையான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை விடயத்தில் பொறுப்பாளிகளினால் தவறுகள் நிகழ்வுமாயின் அத்தவறுகள் வீட்டுச் சூழலிலும் பாடசாலை மற்றும் ஆன்மீக கல்வி நிறுவனங்கள் மட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். தமது எத்தகைய செயற்பாடுகள் சமூகத்தையும் சமூகமயமாக்கல் முகவர்களையும் பாதிக்கும் என்றறியாது தவறு விளைவிக்கும் பிள்ளைகளினால் ஏற்படுகின்ற விபரீதங்கள் அப்பிள்ளைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு தாரிகளை மாத்திரமின்றி சகல தரப்புக்களினது மனங்களையும் நெகிழ வைக்கின்றன.


ஒரு சில பிரதேசங்களில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற துயரச் சம்பவங்கள் பிள்ளைகளின் பருவ வயதுப் பண்புகளினால் ஏற்பட்டவையாகக் கொள்வதா அல்லது அவர்களுக்கான வழிகாட்டல்; ஆலோசனை மற்றும் பொறுப்புக்களில் விடப்பட்ட தவறுகளா என்ற கேள்விகள் எழுகின்றன.


சிறுவர்களும் கட்டிளமைப் பருவத்தினரும் வேண்டத்தகாத நிகழ்வுகளுக்குள் சிக்கி தங்களது பொன்னான உயிரைத் துறப்பது அவர்களது குற்றமாக, இறைவனின் செயலாக கூறிவிட்டு பொறுப்புக்களிலிருந்து விலகிவிட முடியாது. எந்தவொரு நிகழ்வும் இறைவனின் நாட்டப்படியே நடந்தேறுகிறது என்பது நமது நம்பிக்கை. அதில் எவ்வித முரண்பாடுகளோ மாற்றுக்கருத்துக்களோ இருக்க முடியாது.


இருப்பினும், இறைவன் வழங்கியுள்ள பகுத்தறிவு மூலம் நாம் நமக்கு ஏற்படுகின்ற தீமைகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளமுடியும். முறையான வழிகாட்டல்களின் மூலம் தங்களது பொறுப்பின் கீழுள்ளவர்கள் ;வழிகாட்டல்களை பொறுப்புடன் கடைப்பிடிப்பதன் மூலமும்; வீணான விபரீதங்களினால் ஏற்படும் பரிதாபகரமான உயிர் இழப்புக்களையும் ஏனைய சேதங்களையும், சோதனைகளையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்களில் சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பதானது மனிதாபிமானம் கொண்டவர்களின் உள்ளங்களை வேதனையில் நனைத்து விடுகின்றன. கற்றல் நடவடிக்கைக்காக செல்கிறோம் என்று பெற்றோரிடம் கூறிவிட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்று நீரில் மூழ்குவது. சுற்றுலாச் சென்று கடலில் வள்ளம் கவிழ்ந்து மூழ்குவது. குளங்களில் குளிக்கச் சென்று உயிரிழப்பு, நீர்வீழ்;ச்சிகளில் நீராடச் சென்று உயிர் நீற்பது, ரயில் பாதைகளில் செல்வி எடுத்து ரயிலில் மோதுன்று உயிர் துறப்பது, என பல்வேறு சந்தர்ப்பங்களினால் எதிர்காலச் சிற்பிகளான சிறுவர்கள் பரிதாபகரமாக உயிர் இழக்கின்றனர்.


இது தவிர, காதல் தோல்வி, பரீட்சைத் தோல்வி, பெற்றோருடன் கொண்ட வெறுப்பு போன்ற காரணங்களுக்காக தற்கொலை செய்து உயிர் துறக்கின்றனர். மது, புகைத்தல் மற்றும் போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிமைப்படுவது, வன்முறைகளகள்;, துஷ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபவது அவற்றிற்கு உள்ளாகுவது போன்றவற்றினாலும் எதிர்கால வளமுள்ள சந்ததியினர் மாண்டு போகின்றனர்.


இவற்றின் தொடரில் இவ்வருடத்தின் முற்பகுதியில் இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக திஹாரியிலிருந்து மூதூருக்குச் சென்று மூதூர் ஹபிப் நகர் கடலில் குளிக்கச் சென்ற 16 வயதுக்கும் 17 வயதுக்குமிடைப்பட்ட மாணவர்கள் கடலலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் கடந்த சனிக்கிழமை குருநாகல், நாரம்மல அரக்கியா ரவ்ழத்துல் ஹாபிழீன் அரபிக் கல்லூரியைச் சேர்ந்த 11வயது மற்றும் 18 வயதை உடைய மாணவர்கள் பயணித்த தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவமும் மனிதாபிமானம் கொண்டவர்களை கவலை கொள்ளச் செய்துள்ளதுடன் பொறுப்புள்ளவர்களின் பொறுப்புக்கள் மீதும் சந்தேகத்தையும,; ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


இத்தகைய அங்கீகரிக்க முடியதாக நிகழ்வுக்களினால் மாண்டுபோகின்றவர்கள், பாதிப்புள்ளாகின்ற சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற வழிகாட்டலிலும,; விழிப்புணர்விலும் ஏற்படுகின்ற பலவீனங்கள் பலப்படுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு பொறுப்புதாரிகள் தங்களது அமானிதத்தை முறையாகப் பாதுகாக்க வேண்டும். அவற்றிலிருந்து தவறக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


தங்களது பொறுப்பில் ஒப்படைக்கப்படும் சிறுவர்கள் தொடர்பில் பொறுப்புதாரிகள் தங்களது பொறுப்;பை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதை மேற்படி சம்பங்கள் உறுதிப்படுத்துகின்றன. எல்லாம் இறைவன் நாட்டப்படியே நடந்தேறும் என்றால் அந்த இறைவன் நமக்குத் தந்துள்ள அறிவை நம்மையும் நமது பொறுப்பிலுள்ளவர்களையும் பாதுகாக்கப் பயன்படுத்தத் தேவையில்லையா என்ற கேள்வி எழுகிறது.


தமது பொறுப்பில்; ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை கல்விச் சுற்றுலா என்றும் கல்யாண வீடுகள் என்றும் அழைத்துச் செல்கின்ற பொறுப்புதாரிகள் பிள்ளைகளின் செயற்பாட்டிலும், பாதுகாப்பிலும் அவதானம் செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டுமே தவிர தங்களது தேவைகளிலும், பொழுதுபோக்குகளிலும் அக்கறை செலுத்துபவர்களாக மாறக் கூடாது.


ஒவ்வொரு பிள்ளையின் எதிர்காலம் தொடர்பில் தியாகம் செய்து வாழும் பெற்றோர்களுக்கே அப்பிள்ளைகளின் பெறுமதி விளங்கும். பிள்ளைகளைப் பறிகொடுத்து துயரத்திலுள்ளவர்களின் துன்பத்தில் நாம் பங்குகொண்டு ஆறுதல் சொன்னாலும் அல்லது நஷ்ட ஈடுகளை வழங்கினாலும் தமது பிள்ளைக்களுக்காக அப்பெற்றோர்கள் புரிந்த தியாகங்களுக்கு அவை நிகராக முடியாது என்பதை பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ள ஒவ்வொரு பொறுப்பு தாரிகளும் உணர்ந்து செயற்படுவது அவசியமாகும் என்பதை வலிறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.


பொறுப்புதாரிகளின் பொறுப்பு


இவ்வாறான சூழ்நிலை ஒருபுறமிருக்க, அதிகரித்துள்ள தேவைகள் பொழுதுபோக்குகள் என்பன பிள்ளைளின் பாதுகாப்பிலும் சில பெற்றோர்களை கவனம் செலுத்தச் தவறச் செய்கிறது. இதனால் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளைகள் அப்பெற்றோர்களின் கண்முன்னே பல்வேறு சம்பவங்களினால் உயிர்துறங்கின்றனர். ஆபாத்துக்களுக்குள்ளாகின்றனர். இவை மறக்கமுடியாத நினைவுகளை ஏற்படுத்தி நிற்கிறது. இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பில்; அக்கறை கொள்வதும், பாதுகாப்பான சூழல்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதும் பெற்றோர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.


வீட்டுக்குள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் பிள்ளைகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம். இந்த ஆபத்துக்கள் பல்வேறு காரணிகளினால், ஏற்படலாம். ஆதலால், பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக பொறுப்புக் கொள்ள வேண்டிய காலமிதுவென பெற்றோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஓயாது உழைப்பது மாத்திரம் நமது பொறுப்பு என்று செயற்படாது, பிள்ளைகளுடன் வெளியில் செல்லும்போது, கடைவீதிகளுக்குச் செல்லும்போது, வாகனத்தில்போகும் போது, பாடசாலைக்கு அனுப்பும்போது, மத்ரஸாக்களுக்கு அனுப்பி வைக்கும்போது, பிள்ளைகள் தனியாக வீட்டில் இருக்கும்போது, அயல் வீட்டுக்குச் செல்கின்ற வேளை, இணையப் பாவனையில் இடுபடுகின்றபோது, கடல், ஆறு, குளம், நீர்வீழ்ச்சி என நீராடும் இடம்களுக்குக் குளிக்கச் செல்கின்றபோது என பிள்ளைகளை அழைத்துச் செல்கி;ன்ற போதும் அல்லது அவர்களாகவே செல்கின்றபோதும், அவர்களை பொறுப்புதாரிகள் அழைத்துச் செல்லப்படுகின்ற போதும் கூட ஏற்படுகின்ற விபரீதங்கள், ஆபத்துக்கள் குறித்து பெற்றோர் அறிந்தும் தெரிந்தும் வைத்திருப்பதுடன் அவை தொடர்பில் பிள்ளைகளை அறிவூட்ட வேண்;டிய பொறுப்பும் பெற்றோர்களைச் சார்ந்ததே.


பிள்ளைகளை ஆபத்திற்குள்ளாக்கும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும்; அறிவைப் பெறுவதும், அவை தொடர்பில் பிள்ளைகளை விழிப்புணர்வுடன் செயற்படச் செய்வதும் பெற்றோரின் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறும் போது, அல்லது கவனயீனமாகச் செயற்படும்போது பிள்ளைகளுக்கு ஏற்படுகி;ன்ற ஆபத்துக்கள் பெற்றோர் மனங்களில் மாறாத ரணங்களை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் தொடர்பான எதிர்கால கனவுகள் கலைந்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளின் அந்த மாறா நினைவுகளோடு வாழ வேண்டிள்ளது.


ஆதலால், தாம் பெற்றெடுத்த பிள்ளகைள் எதிர்காலத்தில் வளம்பெற்று வாழ வேண்டும் என நினைத்து அதற்காக இரவு பகல் பாராது பணத்தை உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும், தத்தமது பிள்ளைகளின் பாதுகாப்பிலும் அக்கறை கொள்வதும் அதற்காக கால நேரங்களை ஏற்படுத்தி பிள்ளைகளை வழிப்புணர்வடைச் செய்வதும் இன்றியமையாததாகும்.


அத்தோடு, பதவிகளைப் பெற்றுள்ளவர்கள் தங்களது அமானிதமிக்க பதவிப் பொறுப்புக்களினூடக எதிர்காலச் சிறுவர்களை எவ்வாறு பாதுக்க முடியும், எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புரிய முடியும் எனச் திட்டமிட்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக நீராடுவதற்குரிய பாதுகாப்பான இடங்கள் அடையாளப்படுத்தப்படுவது அவசியமாகும். ஆனால் அந்த அடையாளப்படுத்தல்கள் பரவலாக மேற்கொள்ளப்படவில்லை. கடல்,குளம்,ஆறு, நீர் வீழ்ச்சிகள் என மக்கள் நீராடும் இடங்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் அறிவிப்புப் பதாகைகள் முறையாக பல இடங்களில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதோடு இவை தொடர்பில் பதவியில் உள்ளவர்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.


அத்தோடு, கட்டிளமைப் பருவ வயதுடையவர்கள் கல்வி கற்றும் அத்தனை நிறுவனங்களினதும் பொறுப்புதாரிகள் தங்களது அமானிதமிக்க பொறுப்பைப் பொறுப்புடன் நிறைவேற்றுவது காலத்தின் தேவையெனக் கருதிச் செயற்பட்டு விலைமதிக்க முடியாத பிள்ளைச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் யாரார்; மீது எந்தந்த அமானிதங்கள் சுமத்தப்பட்டுள்ளதோ அவற்றைக் பாதுகாத்தவர்களாக மாற முடியும்.


விடிவெள்ளி – 20.07.2017

அமானிதம்.. அமானிதம்.. Reviewed by Madawala News on 7/22/2017 12:05:00 AM Rating: 5