Ad Space Available here

முரண்பாடுகள் களையப்பட்டுமுஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்

"நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்"


இலங்கை முஸ்லிம்கள் சங்கைமிகு ரமழான் மாதத்தில் நோன்புநோற்று, மீண்டுமொரு நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.

முஸ்லிம்கள் ஷவ்வால் மாத தலைப்பிறையைப் பார்த்து நோன்புப் பெருநாள் கொண்டாடுகின்றனர். இம்முறை உலக நாடுகளில் ஒரே தினத்தில் ஆரம்பித்த ரமழான் மாதம், சில நாடுகளில் 29 நாட்களில் ஷவ்வால் பிறை தென்பட்டும், மேலும் சில நாடுகளில் ரமழான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்திவிட்டும் பெருநாளை கொண்டாடும் நிலையேற்பட்டது.

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பிறைக் கணக்கை அடிப்படையாக கொண்டதாகும். இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பமும் தலைபிறையை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படும். இலங்கையில் பலர் தேசிய பிறையை அடிப்படையாக வைத்தும், சிலர் சர்வதேச பிறை, நட்சத்திரக் கணிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டும் மாதங்களை கணக்கிடுகின்றனர்.

இவ்விடயத்தில் போதிய தெளிவு, கருத்தொற்றுமை இல்லாத காரணத்தினால் இலங்கை முஸ்லிம்கள் வருடா வருடம் ரமழான் மாதத்தை ஆரம்பிப்பது, நோன்புப் பெருநாள், ஹஜ் மாத அரபா தினம், ஹஜ் பெருநாள் போன்றவற்றில் முரண்பட்டு இயக்கச் சச்சரவுகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

ரமழான் மாதத்தைப் பற்றி இறைவன் அல்குர்ஆனில் கூறும்போது, ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது- என்கிறான்.    

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழக்கூடிய இந்நாட்டில், பல்வேறு சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்கின்ற இக்கால கட்டத்தில் சமூக ஒற்றுமை என்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும்.

முஸ்லிம்கள் பற்றி நிலவுகின்ற தப்பபிப்பிராயங்

களை களைதல், இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றி முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடையாளம் கண்டு தெளிவுபடுத்தல், சமூக நல்லிணக்கம் பற்றி, பிற சமயத்தவர்களோடு நல்லுறவோடு வாழ்வது பற்றி இஸ்லாம் சொல்கின்ற உடன்பாடான போதனைகளை பெரும்பான்மை சமூகத்திற்கு முன்வைத்தல் போன்ற முயற்சிகளை கொழும்பை மையமாகக்கொண்டியங்கிவரும் இஸ்லாமிய இயக்கங்கள், சமூக அமைப்புகள் இந்த ரமழான் மாதம் முழுவதும் முன்னெடுத்தன. இவ்விடயம் கிராம மட்டங்களிலும் நடைபெற்றன.

சங்கையான ரமழான் மாதத்தை இன்பமானதொரு பெருநாளாக வழியனுப்பிவைக்கவேண்டும். எனினும் இன்று இலங்கை முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. ரமழான் மாதம் வந்துவிட்டால் தொழுகையில் முரண்பாடு, பெருநாள் வந்துவிட்டால் எந்த தினம், தொழும் இடம் போன்றவற்றில் முரண்பாடு சச்சரவு என்ற நிலை ஊடகங்களிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன.

வவுனியா சூடுவெந்தபுலவில் திடல் தொழுகையை மேற்கொண்டவர்கள் மீது கொடூரமான முறையில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும். இன்னும் சில இடங்களில் நடைபெற்ற முரண்பாடுகள், சச்சரவுகளும் பிழையான முன்மாதிரிகளாகும்.

முஸ்லிம்களில் தீவிர போக்குடையவர்கள் இருக்கின்றார்கள் என்பதை இவ்வாறான செயற்பாடுகளை வைத்து முத்திரை குத்தக்கூடிய நிலையேற்படும். முஸ்லிம்களிடம் தீவிரவாதம் இல்லை என்று சமூக தளங்களில் பேசி, போராடி வருகின்றவர்களை இவை தலைகுனிய வைத்துள்ளன.

பிறைவிடயம், பெருநாள் தினங்கள், திடல் தொழுகை போன்றவற்றில் முஸ்லிம்களை மேலும் தெளிவுபடுத்துவது சமூக தலைமைகளின் பொறுப்பாகும். இது விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் மீது இனவாத, இனவெறுப்பு செயற்பாடுகள் சூடுபிடித்துள்ள

வேளையில், பொது எதிரி யார் என்பதை இனங்காணாது முஸ்லிம்கள் முரண்பட்டுக்கொள்வது கவலைக்கிடமாகும்.

இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்துகள், அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள் அனைத்திற்கு மத்தியிலும் பரஸ்பர புரிந்துணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும். அனைவரும் ஓர் அணியில் ஒரு தலைமைத்துவத்தின்கீழ் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.


முரண்பாடுகள் களையப்பட்டுமுஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் முரண்பாடுகள் களையப்பட்டுமுஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் Reviewed by Madawala News on 7/03/2017 12:34:00 PM Rating: 5