Yahya

இரண்டு தசாப்தங்கள் முடிவுற்ற நிலையிலும் இன்னும் முடிவுறா நிலையிலுள்ள நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்றப் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபம்...


ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் -

நிந்தவூர் சமாதான சதுக்கம் பிரதேசத்தில் கடந்த 1997ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை முடிவுறா நிலையில் காணப்படும் நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்றப் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபத்தின் அவல நிலையைக் கண்டு மக்கள் பெருந்துயர் அடைந்தள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் மனங்களில் இன்றும் நிறைந்திருக்கும் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்றப் அவர்கள் சமயப்பற்றும், சமூகப்பற்றும், தூரநோக்கும் கொண்ட ஒர் மாமனிதர் என்பதை இன்று கிழக்கு மாகாண மக்கள் மாத்திரமன்றி, இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் யாவரும் உணர்ந்துள்ளனர்.

 

அதன் வெளிப்பாடே ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு முக்கியமான சேவை நிலையங்களை அமைத்து மக்கள் என்றும் பயன்பெறும் விதத்தில் முன்மாதிரியாய்த் திகழ்ந்துள்ளார். உதாரணமாக ஒலுவில் துறைமுகம், தென் கிழக்குப் பல்கலைக் கழகம், அட்டாளைச்சேனை தேசியக் கல்வியற் கல்லூரி, நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையம், காரைதீவு முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் மணிமண்டபம், காரைதீவு பெரிய தபால் நிலையம், சாய்ந்தமருது படகுத் துறை, கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை தென் கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞான பீடம், மடவளை மதீனா மகா வித்தியாலய அஷ்றப் ஆராதனை மண்டபம் என்று ஒவ்வொரு பிரதேசத்திலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இவ்வாறான அபிவிருத்திப் பாதையின் போதே நிந்தவூர் மக்களின் எதிர்காலத் தேவைகளை நன்கு உணர்ந்த தலைவர் அஷ்றப் அவர்கள் ரூபாய் 80 இலட்சம் முதற்கட்ட நிதிஒதுக்கீடு செய்து, 'நிந்தவூர் காலாச்சார மண்டபம்' என்ற பெயரில் அதற்கான அடிக்கல்லையும் அஷ்றப் அவர்களே தனது கரங்களால் நாட்டி வைத்தார்.

 

பின்னர் 2000ம் ஆண்டில் மாமனிதர் அஷ்றப் அகால மரணமானதைத் தொடர்ந்து இன்றையத் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரானார். மறைந்த அஷ்றபின் மனைவியான

                      

பேரியல் அஷ்றப் நுஆ கட்சித் தலைவியும், அமைச்சருமானார். இணைப்பாளராகவிருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் 'அஷ்றப் காங்கிரஸ்', பின்னர் 'தேசியக் காங்கிரஸ்' தலைவரும், அமைச்சருமானார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த றிஷாட் பதியுதீன் 'மக்கள் காங்கிரஸ்' தலைவரும், அமைச்சருமானார்.

 

ஏன் அஷ்றப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் மூலம் முகவரி பெற்ற மேற்படி கட்சித் தலைவர்களோடும், அமைச்சர்களோடும், அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சேகு இஸ்ஸதீன், எம்.ரி.ஹசன் அலி, பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், யூ.எல்.எம்.முகையதீன், அமீர் அலி, தௌபீக், மருதூர்க்கனி, சல்மான் போன்றோர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் மாறி, பல கோடி ரூபாய்கள் செலவிட்டு, பாரிய அபிவிருத்திகளைச் செய்து, அவரவர் தாய் தந்தையர்களின் பெயர்களைச் சூட்டி, கட்டிடங்களைத் திறந்து வைத்துள்ளனர்.

 

ஆனால் இவை அத்தனைக்கும் வித்தாய், முத்தாய் அமைந்த வித்தகர் மாமனிதர் அஷ்றப் அவர்களின் பெயரில் அமைக்கப்பட்ட இந்த 'நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்றப் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபத்தினை' கட்டி முடித்து அழகு பார்க்க வேண்டுமென்று எந்தவொரு எம்பியாவது, அமைச்சராவது, அல்லது பிரதி அமைச்சராவது, மாகாண அமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்களாவது நினைத்துக் கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை.

 

அவ்வாறு அவர்கள் நினைத்திருந்தால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அத்திவாரத்தோடு நிறுத்தப்பட்ட கம்பிக் கூடுகள் துருப்பிடித்தும், கட்டிய சில பகுதிக் கட்டிடங்களில் பச்சை நிறப் பாசியும் படிந்திருக்காது. இந்த இடம் மாடுகளை மேய விடுகின்ற மேய்ச்சல் தரையாகவும், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் மறைவிடமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்காது.

 

இந்தக் கட்டிடத்தின் அவல நிலையை அறிந்த சிலர், முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, இந்நாள் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் ஆகியோரிடம் முறையிட்டதாகத் தெரிய வருகிறது.

 

ஆனால் மறைந்த மாமனிதரோடு கூடவே இருந்து முஸ்லிம் காங்கிரசை உருவாக்கி. செயற்பட்டபோது அஷ்றப் மீது கொண்ட தீராத காதலோ அல்லது நிந்தவூர் மீது கொண்ட பற்றோ தெரியவில்லை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் ஹசன் அலி அவர்கள் 'நிந்தவூர் கலாச்சார மண்டபம்' என்ற பெயரை 'ஆர்ஆ.அஷ்றப் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபம்' எனப் பெயர் மாற்றஞ் செய்து, இதனைக் கட்டி முடிப்பதற்கு பல முயற்சிகளைச் செய்தமையும், அவை வெற்றியளிக்காமையும் தெரியவந்தள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஹசன் அலியின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 10 இலட்சம் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்நிதி கிடைக்கவில்லை. இது மாத்திரமன்றி

 

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் விசேட நிதிஒதுக்கீடுகளில் உதவி கோரிய ஹசன் அலி அவர்களின் கோரிக்கைக் கடிதக் கோவைகள் அன்றையப் பலம் பொருந்திய அமைச்சர் பசீல் அவர்களினால் அம்பாரைக் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வைத்து தூக்கி வீசப்பட்ட கதைகள் பலவும் இதற்குள் மறைந்துள்ளதாகத் தெரிகின்றது.

 

இறுதியில் ஹசன் அலி அவர்களின் இடைவிடாத, அயராத முயற்சியினால் 2014ம் ஆண்டு ரூபாய் 250 இலட்சம் இக்கட்டிடத்திற்கு பெறப்பட்டு, புதைந்து போன இக்கட்டிடத்தின் பணிகள் மீண்டும் உயிர் பெறத் தொடங்கியது. துருப்பிடித்த கம்பிக் கூடுகள் மாற்றஞ் செய்யப்பட்டு, கொங்கிறீட் தூண்களாக மாறி, ஒரு கட்டிடத்திற்குரிய உருவ வடிவமைப்பு வரும் வேளையில் மீண்டும் இக்கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது மக்களை ஆத்திரத்திற்கும், ஆவேசத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

 

இதனால் நிந்தவூரின் கல்விப்புலத்திலுள்ளோர் முன்னாள் அமைச்சர் ஹசன் அலியின் அரசியல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிந்தவூரின் அபிவிருத்திப் பணிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

இவர்களின் கருத்துக்களை ஒலி, ஒளிப் பதிவு செய்து கொண்ட நான், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் எம்.ஜஃபரிடம் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்ட போது, 'இந்தக் கட்டிடம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. இதில் அரசியல்வாதிகளுக்கும், கொந்தராத்துக் காரர்களுக்குமே சம்பந்தமுள்ளது. இக்கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடித்த பின்னரே எமது சபையிடம் ஒப்படைப்பார்கள். எனவே தற்போது அவர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்' எனத் தெரிவித்தார்.(குரல் பதிவுக்கு மறுத்து விட்டார்).

 

இறுதியாக கல்முனைப் பிராந்திய கட்டிடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியிலாளர் ஏ.எம்.ஸாஹீர் அவர்களை அவரது கல்முனைக் காரியாலயத்தில் சந்தித்து இக்கட்டிடம் பற்றிக் கேட்டேன்.

 

'இது சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதென்றும், சுமார் 8 மில்லியன் நிதிஒதுக்கீட்டின் மூலம் மூன்று கட்டங்களாக இதன் ஆரம்பப் பணிகள் நடைபெற்றுள்ளன. பின்னர் பல வருடங்களாக துருப்பிடித்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கட்டிடத்தின் சில பகுதிகளும், துருப்பிடித்த இரும்புக் கம்பிகளும் கட்டிடத்தைத் தொடர்ந்து செய்வதற்கு பொருத்தமில்லாது போய் விட்டன. இது பற்றி மாகாணப் பொறியிலாளருக்கு அறிவித்து விட்டு, அவரது அனுமதி வரும்வரை கட்டிடப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு நான் உத்தரவிட்டிருந்தேன். இப்போது மாகாணப் பொறியிலாளரின் அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இக்கட்டிடப் பணிகளை ஆரம்பிக்க உத்தரவு பிறப்பிப்பேன். இருந்தும் எமக்கு வழங்கப்பட்டுள்ள 25 மில்லியனுக்குள்

 

இம்மண்டபத்தை முழுமையாகச் செய்து மக்கள் பாவனைக்கு வழங்க முடியாது. எனது கணிப்பின்படி இவ்வரவேற்பு மண்டபத்தை முழுமையாக முடிப்பதற்கு 100 மில்லியன்களாவது தரப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

 

· 100 மில்லியன் பணம் ஒதுக்கப்படுமா?

· இக்கட்டிடத்தை மக்கள் அனுபவிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?!!!???

· எம்பி பதவியோ, மந்திரிப் பதவியோ இல்லாமல் அதிகாரங்கள் எல்லாமே உறிஞ்சப்பட்ட செயலாளர் நாயகம் பதவியைக் கூட இன்று இழந்து நிற்கும் 'பொன்மனச் செம்மல்' ஹசன் அலியால் இன்னும் 100 மில்லியன் பணத்தை ஒதுக்க முடியுமா? இல்லை வேறு யாருடைய உதவிகள் மூலமாவது பெற முடியுமா?

· இல்லை சுகாதாரப் பிரதியமைச்சராக பவணிவரும் பைசால் காசீம் எம்பியின் கரங்கள் தான் நீழுமா?

· இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் மாமனிதர் அஷ்றபின் புகைப் படங்கள், அவர் ஏற்றிய கவிதைகள்,

பாடல்கள் போன்றவற்றைக் காட்டி தேர்தல் காலங்களில் வெற்றிவாகை சூடும் எம்பிக்கள், அமைச்சர்களால் இந்த அஷ்றப் வரவேற்பு மண்டபத்திற்கு மீதிப்பணம் ஒதுக்கப்படுமா?

· மறைந்த மாமனிதர் அஷ்றபோடும், முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியோடும் மிக நெருங்கிய உறவுகளைப் பேணி வாழ்வில் உயர்ந்து நிற்கும் நமது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களின் மூச்சுக் காற்று நிந்தவூர்ப் பக்கம் திரும்பாதோ?

· மறைந்த மாமனிதர் அஷ்றபின் (மு.கா) கட்சி வாகனத்தில் சொகுசாக பவணிவரும் அமைச்சர் ஹக்கீமின் கண் திறக்குமா? இனியாவது அஷ்றபின் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபத்திற்கு மீதிப்பணமாவது ஒதுக்குவாரா??????!!!!!

· மர்ஹும் அஷ்றபின் பாசறையில் வளர்ந்து, இன்று மக்கள் காங்கிரஸ் தேரேறி இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் இளைய தளபதியாக பவணி வந்து கொண்டிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கஜானாவிலிருந்து இக்கட்டிடத்திற்குக் காசு கிடைக்குமா?

· யார் குற்றியும் அரிசானால் சரி! (ஆனால் அஷ்றபிற்கு அரிசி குற்றிக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு மேற் சொல்லப்பட்ட எல்லோருக்கும் இருக்கிறது என்பதை அவரவர் உணர்ந்து கொண்டால் சரிதான்). எவர் குற்றியேனும்(உதவியேனும்) நிந்தவூர் அஷ்றப் ஞாபகர்த்த மண்டபம் நிறைவு பெறும் நாள் எந்நாளோ? என மக்கள் பல விதமான கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம், 'இலவு காத்த கிளி போல்!' காத்திருக்கின்றனர்.

 

( படங்கள்:- நமது விசேட நிருபர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இரண்டு தசாப்தங்கள் முடிவுற்ற நிலையிலும் இன்னும் முடிவுறா நிலையிலுள்ள நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்றப் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபம்... இரண்டு தசாப்தங்கள் முடிவுற்ற நிலையிலும் இன்னும் முடிவுறா நிலையிலுள்ள நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்றப் ஞாபகர்த்த வரவேற்பு மண்டபம்... Reviewed by Madawala News on 7/08/2017 05:03:00 PM Rating: 5