Kidny

Kidny

தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன?


சுஐப் எம் காசிம் 

போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


பள்ளமடு-பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.


அமைச்சர் கூறியதாவது,


வங்குரோத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை காட்டவில்லை என இப்போது வசை பாடுகின்றனர்.


மனச்சாட்சியையும் மனிதாபிமானத்தையும் முன்னிலைப் படுத்தியதானலயே யுத்தத்தினால் நிர்க்கதியான தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை கொடுத்து உழைத்தேன்.


அகதி வாழ்வின் கொடூரங்களை அணு அணுவாக அனுபவித்து துன்பத்தில் உழன்றவன் என்றவகையில் தமிழ் மக்களின் பரிதாப நிலை வேதனையைத் தந்தது. அதனால் தான் அந்த வேளையில் அவர்களின் குடியேற்றத்துக்கு பாடுபட்டேன்.


நாங்கள் என்ன தான் இதய சுத்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றினாலும் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் குற்றசாட்டுக்களை அடுக்கி கொண்டே போகின்றனர்.


அரசியல் ரீதியில் இலகுவாக வீழ்த்துவதற்கான ஆயுதமாக ஊழல்,திருட்டு,கொள்ளை என்ற கடுஞ்சொற்களை என்மீது தொடர்ச்சியாக பிரயோகித்து மோசமாக தாக்குகின்றனர்.


நேர்மையான பணிகளில் ஈடுபட்டு இருக்கும் அமைச்சர் டெனீஸ்வரன் மீதும் இப்போது இதேவகையான குற்றசாட்டுக்களை அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் சுமத்திவருகின்றனர்.எடுத்த எடுப்பிலேயே ஓர் அரசியல்வாதியை மனம்போன போக்கில் குற்றம்சாட்டுவது பிற்போக்கு சக்திகளுக்கு கைவந்த கலையாக உள்ளபோதும் எமக்கு அது வேதனையானதே.


பெரியமடு –பள்ளமடு பாதையை புனரமைப்பதற்கான நிதி பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினோம் யுத்தத்தினால் வெளியேறிய மக்கள் மீளக் குடியேர்மல் விட்டதனாளேயே அபிவிருத்திட்டங்களில் இதனை உள்வாங்குவதில் கடினம் இருந்தது. எனினும் எத்தனையோ கஷ்டங்களின் மத்தியில் அதில் நாம் வெற்றிகண்டோம்.


விடத்தல்தீவு பள்ளமடுவில் இருந்து பாலம்பிட்டிவரை இந்த பாதையை செப்பனிட முயற்சித்த போதும் நிதிப்பற்றாக்குறையால் பெரியமடுவுடன் நிறுத்தப்பட்டது.


மத்திய அரசின் நிதியுதவியுடன் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனீன் பங்களிப்புடன் இந்த வீதியை புனரமைக்க முடிந்தது. இதற்கு ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபாவை 4மாவட்டங்களின் வீதி அபிவிருத்திக்கு ஒதுக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, அமைச்சர் டெனீஸ்வரன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பாதையின் முக்கியத்துவம்,தேவை குறித்து அவர் அறிந்திருந்ததனாலும் மாந்தை மண்ணில் பிறந்ததனாலும் நமக்கு சாதகமான முடிவையே மேற்கொண்டார்.


பெரியமடு பாதையின் பழைய நிலையை நீங்கள் மீட்டிப்பாருங்கள். பாதையில் பயணிக்கும் போது முகத்தில் தூசியும் உடைகளில் அழுக்கும் படிந்திருந்த ஒரு காலம் இருந்தது.வேதனையுடனும் வெறுப்புடனும் மணித்தியாலக்கணக்கில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கியம் இப்போது நீங்கி நிமிடக்கணக்கில் உரிய இடத்தை அடையும் சூழல் வந்துள்ளது.

மடு, கீரிசுட்டான் போன்ற அயற்கிராமங்களிலும் இன்னும் இதே அவல நிலையே தொடர்கிறது காலையில் பாடசாலை செல்லும் மாணவர்கள் மாலையில் வீடுவந்து சேர, படுகின்ற அவஸ்தைகள் ஏராளம். மன்னார் ஆயரின் அழைப்பை ஏற்று நான் அங்கு சென்றபோது அவர்கள் படுகின்ற பரிதவிப்புகளை கண்டேன். அந்தப் பாதைகளையும் புனரமைக்க திட்டமிட்டுளேன்.


பெரியமடு வளமான பிரதேசம். பழங்களையும் உற்பத்தி பொருட்களையும் விற்பனை செய்யமுடியாத அவலம் கடந்த காலத்தில் இருந்தது. பெரியமடுவில் உற்பத்தியாகும் ருசிமிக்க, சிறந்த பழங்களை பதனிட்டு பக்குவப்படுத்தி, விற்பனை செய்யும் தொழிலகம் ஒன்றை அமைத்துதர அமைச்சர் என்ற வகையில் நான் தயாராக உள்ளேன் .முறையான திட்டங்களை முன்வைக்குமாறு வேண்டுகின்றேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன? தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன? Reviewed by Madawala News on 7/02/2017 03:18:00 PM Rating: 5