Ad Space avaiable

கிண்ணியா பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு கிழக்கு மாகாண சபை மதிப்பளிக்கவில்லை


எம்.ஜே.எம்.சஜீத். 

கிண்ணியா தள வைத்தியசாலை தொடர்பாக கிண்ணியா பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு கிழக்கு மாகாண சபை மதிப்பளிக்கவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிண்ணியா தள வைத்தியசாலை தொடர்பாக கிண்ணியா பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு கிழக்கு மாகாண சபை மதிப்பளிக்கவில்லை என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு நேற்று (18) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

சுமார் ஒரு இலட்சம் சனத்தொகையினை கொண்ட கிண்ணியா பிரதேசத்திலுள்ள தள வைத்தியசாலையை அப்பிரதேச மக்களின் நலன் கருதி தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென கிண்ணியா பிரதேச மக்கள் தங்களின் உணர்வுகளை போராட்டங்களினூடாக வெளிப்படுத்தி வந்தனர்.

கிண்ணியா பிரதேசத்தின் சனத்தொகையினையும், அப்பிரதேசத்தில் ஏற்பட்ட டெங்கு அனர்த்தம் மற்றும் அப்பிரதேச மக்களது சுகாதார தேவைகளின் அவசியத்தினையும் கருத்திற்கொண்டு அவ்வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சுக்கு கையளிக்குமாறு கோரி நானும் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்திருந்தேன். அப்போது மாகாண சபையினுடைய அதிகாரத்தினை மத்திய அரசுக்கு தாரைவார்க்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் தெரிவித்து எனது தனிநபர் பிரேரணையை மாகாண சபை நிகழ்ச்சி நிரழிலிருந்து நீக்கினர்.

எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவ்வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டதுடன் அப்பிரதேச மக்களையும் சந்தித்து அவ்வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

கிழக்கு முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரின் கருத்தானது ஜனாதிபதியின் உறுதிமொழியினை மீறுவதாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும் கிண்ணியா பிரதேச மக்களின் உணர்வுளுக்கு கிழக்கு மாகாண சபை மதிப்பளிக்காமை குறித்தும் கவலையடைய வேண்டியுள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையினை தரமுயர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுசென்று அபிவிருத்தி செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும், கிண்ணியா மக்களின் உணர்வுகளுக்கு வெற்றி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு கிழக்கு மாகாண சபை மதிப்பளிக்கவில்லை கிண்ணியா பிரதேச மக்களின் உணர்வுகளுக்கு கிழக்கு மாகாண சபை மதிப்பளிக்கவில்லை Reviewed by Madawala News on 7/20/2017 07:01:00 PM Rating: 5