Kidny

Kidny

இன்றைய தேவை ஆளுநர் பதவியல்ல ; மக்களின் நிம்மதி !


2017.07.03 தினக்குரல் முதற்பக்கத்திலும் ஏனைய பத்திரிகைகள், மற்றும் முகநூலிலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவி தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவுக்கு? எனத் தெரிவிக்கப்பட்டிருந்த செய்தி தொடர்பில், தேசிய காங்கிரஸின் ஊடகப்பிரிவு அவசரமான ஒரு அறிக்கையை வெளியிட்டது. 


இன்றைய அரசியல் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நிர்க்கதியான வாழ்வியல் நிலைமைகளும் அரசியல் போராட்டங்களும் சுயாதீனமான அவர்களது வாழ்க்கையை நிச்சயப்படுத்தும் அரசியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும், நிலமீட்பு, மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை, வேலையற்றோர் பிரச்சினை, இனங்களுங்கெதிரான வன்முறை எனவும் மக்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவைகளை விடவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் எனும் பெயரில் வெளிநாட்டு சூழ்ச்சிக்காரர்களால் பின்னப்பட்ட சதிவலைக்குள் இந்த நாட்டையும் இந்நாட்டு முஸ்லிம்களையும் சிக்கவைத்து சின்னாபின்னப்படுத்தும் சூழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ஒரு ஆளுநர் பதவியுடன் தன்னை முடிச்சுப் போடுவது சிறுபிள்ளைத்தனமானதென்பதே அதாஉல்லா அவர்களின் நிலைப்பாடாகும். 


தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா அவர்களது அரசியற் பாதையில் சமூகம் சார்ந்த, தேசிய நலன் தொடர்பிலான தீர்மானங்களையும் முடிவுகளையுமே முன்னெடுக்கிறது. மக்களின் நலன்களைப் புறந்தள்ளி பதவிகளை முன்னிலைப்படுத்தும் ஒரு தலைவராக அவர் இருந்ததில்லை என்பது, யதார்த்தமானது. பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டிய அரசியல் வரலாறு அவருக்குண்டு. எனவே, ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி தார்மீகப் பொறுப்புடன் மக்கள் பணி புரிந்து கொண்டிருக்கும் ஒரு தலைவன் அதாஉல்லா தன்னைப் பதவிகளுக்குள் இழந்து விட மாட்டார் என்பதை நாடே அறியும். 


தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்தவரை சமத்துவமான நிலைப்பாட்டினையே அதாஉல்லா அவர்களின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில சாணக்கியமான அவரது அரசியல் நகர்வுகளை புரிந்து கொள்ள முடியாத சிலர், வித்தியாசமான ஒருவராக அவரைக் காண்பிப்பதில் அரசியல் அனுகூலங்கள் இருப்பதால் தமிழ், முஸ்லிம் தலைமைகள் சில, இனத்துவ சிந்தனைகளை இன்னுமே அரசியல் முதலீடுகளாக பாவிப்பது மிகவும் துரதிஸ்டமானது. ஒரு பதவியின் பொருட்டு தமிழன் ஒருவரையே நியமிக்க வேண்டுமெனவும் முஸ்லிம் ஒருவரையே நியமிக்க வேண்டுமெனவும் நாம் கொண்டிருக்கும் மனப்பாங்கும் தனது கண்கள் போனால் பரவாயில்லை, அது தனது எதிரிக்கு சகுனப்பிழையாக இருந்தால் போதுமானது என்ற நிலைப்பாடு நமக்குள் வியாபித்திருப்பதால் எதிலுமே எமக்கு வெற்றி; கிடைக்கவில்லை. இதனால் கிழக்கு தேசம் இழந்தவைகள் அதிகம் என்பதை இன்னுமே எம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இப்படியான மன எழுச்சி உள்ளவர்கள், புதிய பரிணாமத்தில் சிந்திக்க வேண்டும். ஆரோக்கியமான சிந்தனைகளை எமது மக்கள் மனங்களிலே விதைக்க வேண்டும். இல்லாமல், இன ஐக்கியம் பற்றிப் பேசுவதில் எதுவிதப் பயனுமே இல்லை. 


அரசாங்கமோ, அல்லது வேறு சக்திகளோ மிகச் சாதாரணமாக நினைத்து தேசிய காங்கிரஸின் தலைமையை பதவிகளால் மௌனிக்கச் செய்யும் ராஜதந்திர வலைக்குள் சிக்கக்கூடிய ஒருவராக அதாஉல்லா அவர்கள் இல்லை என்பதை அனைத்து மக்களுமே நன்கறிவர். பதவிகள் அவருக்கு அவசியமான ஒன்றானதாக இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை. 


எனவே, அரசியல் என்பது தன்னை எல்லா வழிகளிலும் வளர்த்துக் கொள்ளும் தொழில்முறையான செயற்பாடு அல்ல. அது, மக்களதும், சமூகங்களதும் இயல்பான வாழ்க்கையையும் ஜனநாயக நெறிமுறைகளையும் நிச்சயப்படுத்திக் கொள்ள சுமந்திருக்கும் மாபெரும் சமூகப் பொறுப்பாகும். 


தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஊடகப்பிரிவு

இன்றைய தேவை ஆளுநர் பதவியல்ல ; மக்களின் நிம்மதி ! இன்றைய  தேவை ஆளுநர் பதவியல்ல ; மக்களின் நிம்மதி ! Reviewed by Madawala News on 7/05/2017 02:09:00 AM Rating: 5