Yahya

குதிரை ஓட ஆரம்பித்துள்ளது : மாகாணசபையில் மீண்டும் சாதிக்கும் : ஹுதா உமர்..


இலங்கையில் தேர்தல் அறிவித்தவுடன் அரசியல் களம் சூடுபிடிக்கும் மாவட்டம் என்றால் அது திகாமடுல்ல என்றழைக்கப்படும் அம்பாறை மாவட்டமே ! இந்த மாவட்டத்தில் அதிகமான முஸ்லிங்கள் செறிந்து வாழ்வதனால் இதனை முஸ்லிம் மக்களின் தாயகமாக நோக்கப்படுகின்றது.

இந்த மாவட்டம் கிழக்கில் யார் முதல்வர் என்பதை தீர்மானிக்கும் சக்தி பெற்ற முக்கிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் இருந்தே முஸ்லிங்களின் தேசிய தலைவராக நோக்கப்பட்ட மர்ஹூம் M.H.M.அஸ்ரப் அரசியலுக்கு வந்தார்.அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு முகவரியும் பெற்றுக்கொடுக்க பாடுபட்டார் எனலாம்.

ஆனால் இப்போது மு.காவில் இருந்து பிரிந்த மு.அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் ரிசாத், அமைச்சர் ஹக்கீம் ஆகியோரின் தலைமையில் இருக்கும் சகல காங்கிரஸ்களும் அம்பாறையில் பலத்த போட்டிக்கு தயாராகி வருகின்றனர். 

அந்தவகையில் நோக்கினால் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறையில் பலமான சக்தியாக இருந்தாலும் கொல்லிமலை சிலை விவகாரம், சாய்ந்தமருதில் இருந்த காரியாலயங்களின் இடமாற்றம், அபிவிருத்திகளை ஒலிவாங்கிகள் மூலம் மட்டுமே செய்துவருவது, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளின் போது அமைதி காப்பது என்பதாலும் கல்முனைக்கும் சம்மாந்துறைக்கும் எந்த அபிவிருத்தி திட்டத்தையும் செய்ய முடியாமல் தவிப்பதும் முஸ்லிம் காங்கிரசின் பலவீனமாக இருந்து வருவது மக்கள் மத்தியில் பாரிய கவலையை தொற்றுவித்துள்ளது. இதனால் வாக்குவங்கியில் பாரிய சரிவை எதிர்வரும் காலங்களில் மு.கா சந்திக்கும்.

அம்பாறைக்கு புதிதாக களமிறங்கியிருக்கும் மயில் கட்சி குறுகிய காலத்தில் பாரிய முன்னேற்றத்தை கண்டது உண்மையே. மு.காவின் மீது அதிருப்தியில் இருந்த மக்களுக்கு மயில் சரியான தெரிவாக தென்பட்டதால் மக்கள் மயிலை கடந்த பொதுத்தேர்தலில் 33000 க்கும் அதிகமான வாக்குகளை வழங்கி ஆதரித்தனர். ஆனால் மக்கள் காங்கிரசை மக்கள் ஆதரித்த நோக்கம் நிறைவேறாமல் தாமதமாகி வருவது மக்கள் மத்தியில் மயில் மீது நம்பிக்கை இழக்கவைத்துள்ளது. இறக்காம சிலை விவகாரத்தில் அமைச்சர் ரிசாத் மௌனம் காத்தமை பாரிய சந்தேகத்தை தொற்றுவித்துள்ளமையும் இங்கு கவனிப்படவேண்டியதே. 

அத்துடன் உட்கட்சி பூசல்களும், வேட்டுக்குத்துக்களும் அதிகரித்த கட்சியாக மாறிவருவது மயிலுக்கு சவாலாக அமையும். அமைச்சர் ரிசாத் சவூதி வீட்டுத்திட்டத்தை மீட்டு மக்களிடம் கையளிப்பேன் என பலதடவைகள் கூறியும் அது நடந்த பாடில்லை என்பதுடன் மயிலின் முயற்சியினால் பாரிய அபிவிருத்திகள் எதுவும் அம்பாறையில் நடைபெறவில்லை என்பதும் இங்கு அதிருப்திக்கான முக்கிய காரணம் (சில தனியார் கம்பனிகளும்,அரச சில்லறை கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.). மயில் கட்சியை அம்பாறைக்கு விஸ்தரித்த செயலாளர் நாயகம் வை.எல்.சாஹுல் ஹமீத், அன்வர் முஸ்தபா ,போன்ற சிலரின் அதிருப்தி பின்னாளில் மயிலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.ஏனெனில் இப்போது கட்சி முக்கியஸ்தர்களாக இருப்பவர்கள் கட்சிக்கு அர்பணித்ததை விட இவர்களின் அர்ப்பணிப்பே அதிகமாக உள்ளது. மயிலின் செல்வாக்கு பெருகியதன் பின்னரே இவர்கள் கட்சியில் இணைந்துகொண்டதை யாரும் மறுக்க முடியாது.

அடுத்ததாக குதிரை கட்சி. கிழக்கின் மன்னனாக இருந்துவந்த அமைச்சர் அதாவுல்லாஹ் கடந்த பொதுத்தேர்தலில் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இந்த தோல்வி அவரின் தோல்வி என்பதை விட அம்பாறை முஸ்லிங்களின் தோல்வி என்பதே பொருத்தம். அவரின் தோல்வியை தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருந்த சிலரும் கிளை தாவ அவர் அமைதியாக அரசியலை வேடிக்கை பார்த்தார். 

அம்பாறை அரசியலில் முஸ்லிங்களின் இருப்புக்கு பாரிய உறுதுணை இல்லாததை உணர்ந்த அவர் மீண்டும் தனது குதிரை சவாரியை ஆரம்பித்துள்ளர். இப்போது தான் விட்ட தவறுகளையும் உண்மையான விசுவாசிகளையும் அறிந்துகொண்ட அவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிகிறது.


மேற்சொன்ன மு.கா மற்றும் ம.கா பல அதிகாரங்கள் இருந்தும் செய்யாத சேவைகளை ஒரு மாகாண அமைச்சின் மூலமும் தேசிய அரசின் ஒரு அமைச்சின் மூலமும் கிழக்கில் எண்ணிலடங்காத சேவைகளை செய்துள்ள தே.காங்கிரஸ் அம்பாறைக்கு பாரிய சேவைகளை செய்துள்ளது. என்பதை யாரும் மறுக்கமுடியாது. மஹிந்தவுக்கு விசுவாசமாக இருந்ததாக கூறி தோற்கடிக்கப்பட்ட அதாவுல்லாஹ். இப்போது மீண்டும் தனது இன்னிங்சை ஆரம்பித்துள்ளது மற்றைய கட்சிகளுக்கு பாரிய அச்சத்தை தோற்றுவிக்காமளுமில்லை. தலைவர் அஸ்ரப் வழியில் இளம் தலைமுறையின் கையில் கட்சியை ஒப்படைத்து விட்டு வழிநடத்த முன்வந்திருப்பது குதிரையின் எழுச்சியை காட்டுகிறது. மக்கள் காங்கிரசின் அம்பாறையின் ஆரம்ப போராளியாக இருந்த அன்வர் முஸ்தபாவை கட்சியில் இணைக்க முற்பட்டிருப்பது குதிரைக்கு வலுச்சேர்க்கும் என்பது எனது எதிர்பார்ப்பு (மு.அமைச்சரையும் அன்வர் முஸ்தபாவையும் நன்றாக அறிந்த வகையில் எனது எதிர்பார்ப்பு.)அட்டாளைச்சேனை மக்களின் தேசிய பட்டியல் கனவை மாகாண அமைச்சின் மூலம் தீர்த்துவைத்து,மருதமுனை மக்களின் வாக்குகளுக்கு நன்றிகடனாக மாகாண சபை உறுப்பினரை வழங்கி,சம்மாந்துறை மக்களுக்காக பல அரசியல் அதிகாரங்களையும்,கல்முனை மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கடந்த முறை ஆரிப் சம்சுதினை மாகாண சபைக்கு அனுப்பி சகல மக்களுக்கும் தனது நன்றிகளை அதிகாரத்தின் மூலம் வழங்கிய அதாவுல்லாஹ் இம்முறையும் சிறந்த அரசியல் வியூகத்தை வகுத்து மண்குதிரை,முடக்குதிரை என்றவர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவார் என்பதில் நம்பிக்கை உள்ளது.


என்றாலும் தமக்கு அருகில் துரோகிகளையும்,விளையாட்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மு.அமைச்சர் திருத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் உரியவர்களுக்கு சரியான மதிப்பை வழங்கி கௌரவப்படுத்தி கட்சியின் முன்னேற்றத்தில் கரிசனை செலுத்த வேண்டும் அப்போதுதான் கட்சியின் மீள் எழுச்சி சாத்தியமாகும்.


மக்களின் மனங்களில் நல்ல எண்ணத்தில் வாழ்ந்துவரும் மு.அமைச்சரின் தேவையை உணரத்தொடங்கியிருக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆளுமையில்ல குதிரையின் தலைவர் இக்கட்டான நிலையில் இருந்து பாதுகாப்பு வலயத்துக்கு மாறியுள்ளார். பாதுகாப்பு வலயத்திலிருந்து வெற்றிக்கனியை பறிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனை சரியாக பயன்படுத்துவார்களா? மயில் மீண்டும் சீரான கட்டமைப்புடன் பறக்குமா ? மரம் தனது வாக்குவங்கியை தக்கவைக்குமா ? என்ற கேள்விகள் இருந்தாலும் குதிரை மாகாண சபை தேர்தலில் வேகமாக ஓடும்.என்பதுடன் கிழக்கு மாகாண சபையில் நான்கு அல்லது ஐந்து ஆசனத்தை கைப்பற்றும் என்பது எனது எதிர்பார்ப்பும் கூட..


அல்ஹாஜ். ஹுதா உமர் (மாளிகைக்காடு)

தலைவர்,அல்-மீஸான் பௌண்டசன்.

குதிரை ஓட ஆரம்பித்துள்ளது : மாகாணசபையில் மீண்டும் சாதிக்கும் : ஹுதா உமர்.. குதிரை ஓட ஆரம்பித்துள்ளது : மாகாணசபையில் மீண்டும் சாதிக்கும் : ஹுதா உமர்.. Reviewed by Madawala News on 7/19/2017 04:48:00 PM Rating: 5