Ad Space Available here

தமிழர்களின் பிரச்சினையில் லாபம் அடைந்தது யார்?


நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களவர்களின் ஆதிக்கமும், தமிழர்களின் மீதான அடக்குமுறைகளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு வந்தது.


அன்றிருந்த சிங்கள அரசாங்கங்கள் இது சிங்கள நாடு என்று நிரூபிக்கும் வண்ணம் பல சட்ட திட்டங்களை காலத்துக்கு காலம் அமுல்படுத்திக்கொண்டே வந்தார்கள்.

இதனை எதிர்த்துவந்த சிறுபாண்மை சமூகங்களை பல வழிகளிலும் சிங்கள ஆட்சியாளர்கள் நசுக்கியே வந்தார்கள் என்பது வரலாறாகும்.

இந்த அத்துமீறல்களை செய்யும் இலங்கை அரசாங்கத்தை எந்தநாடுகளும் அந்தநேரம் தட்டிக்கேட்க முன்வரவில்லை,அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளைத்தான், அன்று இலங்கை பிரதமராக இருந்த சிறிமாவோ அம்மையார் அவர்களும் பின்பற்றி வந்தார்கள்,அதன் காரணமாகவே அன்று இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா அவ்வளவு அக்கறைகாட்ட முன்வரவில்லை.

1977ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிக்கொண்ட ஐ.தே.கட்சியின் தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் மூடிய பொருளாதார கொள்கையை கைவிட்டு திறந்த பொருளாதார கொள்ளைகளை கொண்டுவரும் முகமாக அன்று இந்தியாவுக்கு எதிரிகளாக இருந்த அமெரிக்கா, சீனா, இஸ்ரவேல்,பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவுகளைப்பேண முயற்சித்து வந்தார்.

இலங்கையின் இந்த போக்குகள் இந்தியாவின் நலன்களுக்கு பேராபத்தாக வந்துவிடும் என்றுணர்ந்த இந்திய அரசு இலங்கை அரசின் மீது பல அழுத்தங்களை பிரயோகிக்க முன்வந்தது,இதன் காரணமாகவே நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலங்கை அரசை இந்தியாவின் காலடியில் விழவைக்கவேண்டும் என்ற என்னத்தின் காரணமாகவே,அன்று தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க இந்தியா முன்வந்தது.

இந்தியாவின் இந்த நாடகத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது,அவர்களின் உதவி தமிழ்மக்களின் மேல்கொண்ட அனுதாபத்தின் காரணமாகத்தான் கிடைக்கின்றது என்று நம்பிய தமிழ் இளைஞர்கள் அவர்களின் திட்டத்துக்கு பழியானார்கள் என்றே கூறவேண்டும்.

பிற்காலத்தில் தமிழ் இளைஞர்களின் தியாகத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தனது தவறை உணரத்தொடங்கியது,இந்தியாவை திருப்திபடுத்தினால் இந்த ஆயுதபோராட்டத்தை இந்தியா மூலம் முடிவுக்கு கொண்டுவரலாம் என்று உணர்ந்த ஜே.ஆர்.அவர்கள் இந்தியாவிடம் சரணடைந்தார்.

இதனை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த இந்தியா, தமிழர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன் தங்களது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இலங்கையின் எந்த நடவடிக்கைகளும் இந்தியாவுக்கு குந்தகமாக வந்துவிடக்கூடாது என்றும், இலங்கையின் வெளிநாட்டு கொள்கைகள் அனைத்தும் இந்தியாவின் பார்வைக்கு வந்தபின்பே நடைமுறைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனைகளையும், அதனோடு இன்னும் பல அனுகூலங்களையும் இந்தியா அந்த ஒப்பந்தத்தின் மூலம் அடைந்து கொண்டது.

அதன் பிற்பாடு இந்தியா இலங்கை தமிழர்கள் விடயத்தில் எப்படி நடந்து கொண்டது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.அதே இந்தியாதான் பின்நாளில் தமிழர்களுடன் யுத்தம் செய்தது என்பது மட்டுமல்ல பல அப்பாவி உயிர்கள் பலியாவதற்கும் காரணமாக இருந்தது.அதுமட்டுமல்ல இறுதி யுத்தத்திலும் முழு பங்களிப்பையும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கி இருந்ததையும் நாம் அறிவோம்.

ஆகவே, இந்தியாவின் சுய தேவைக்காகவே தமிழர்களுடைய பிரச்சினையை இந்தியா பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையாகும்,ஒருவேளை சிறிமாவோ அம்மையார் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களும் அன்று இந்தியாவின் பாதையில் சென்றிருந்தால் இவ்வளவு உயிர்களும் காவு கொள்ளப்பட்டிருக்கமாட்டாது என்பதே யதார்த்தமாகும்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், இலங்கை தமிழர்களின் மீது கொண்ட பரிதாபத்தின் காரணமாக இந்தியா தமழர்களுக்கு ஆயுதம் வழங்கவில்லை,மாறாக தங்களது சுய லாபத்துக்காகவே தமிழ் இளைஞர்களை பயன்படுத்தினார்கள் என்பதே ஆகும்.

இன்றும் தமிழர்களுடைய பிரச்சினையை உலகநாடுகள் தங்களுடைய நலனுக்காகவே பயன்படுத்திவருகின்றது என்பதை, எத்தனை பேர் அறிந்திருக்கின்றார்களோ தெரியாது என்பதே வேதனையான விடயமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

தமிழர்களின் பிரச்சினையில் லாபம் அடைந்தது யார்? தமிழர்களின் பிரச்சினையில் லாபம் அடைந்தது யார்? Reviewed by Madawala News on 7/29/2017 07:53:00 PM Rating: 5