Ad Space Available here

ஏகாதிபத்திய ஆட்சிக்கு நாட்டில் மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி


2015 ஜனவரி மாதம் 08ம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு தான் முடிவுகட்டியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக்காட்டி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு சிலர் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர் என்று நேற்று முற்பகல் கல்கமுவ பிரதேச நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தின் நிருவாகக் கட்டட திறப்புவிழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 

தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்த ஒரு அரசாங்கம் என சுட்டிக்காட்டி, அபிவிருத்தி குறித்து போலியான பிம்பங்களை ஏற்படுத்தி வருகின்றவர்கள் அன்று அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொண்ட அனைத்து ஊழல், மோசடிகளையும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

2015 ஜனவரி 07ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய தினமான எந்தவொரு அரசாங்க நிறுவனமும் கடமையில் இல்லாத தினத்தில் ஜின், நில்வளா கங்கைத் திட்டத்திற்கு கோடிக்கணக்கில் காசோலைகளை வெளியிட்டமை குறித்த கூற்றுக்கு சவால்விட்டு, மோசடி இடம்பெற்றிருக்குமானால் அதனை தெளிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டபோதும் அந்த மோசடி தொடர்பிலான விடயங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி மக்கள் விரைவில் தெரிந்துகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

எந்தவிதமான சாத்தியவள ஆய்வுமின்றி அரசியல் தீர்மானங்களின்படி மோசடியாக ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகள் சாதாரணமானவையல்ல என்பதுடன் அது தொடர்பான சரியான தகவல்கள் தற்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் இருந்து தெரியவந்திருப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

 

மேலும் இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சித்துவரும் அதிகார வெறிபிடித்த அரசியல் சூழ்ச்சியைத் தோல்யடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவன்றி நாட்டையும் மக்களையும் வறுமையிலிருந்து விடுவிப்பதற்கும் கடந்த அரசாங்கம் விட்டுச் சென்ற கோடிக்கணக்கான கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

ஊடகங்கள் இன்று சுதந்திரமாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், விரும்பியவர்கள் சுதந்திரமாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் சுதந்திரத்தை வழங்கக்கிடைத்ததையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

 

வடமேல் மாகாணத்திற்குத் தேவையான நீர் தொடர்பில் கடந்த சில தசாப்தகாலமாக அரசியல் மேடைகளில் அனைத்து அரசியல்; கட்சிகளும் பேசிவந்தபோதும் இதற்கான தீர்வு தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்த மொரகஹகந்த திட்டத்தின் மூலமே கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்படும் வயம்ப கால்வாய் திட்டத்தின் மூலம் குருநாகலை மாவட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படுவதுடன், இதன் மூலம் மாவட்டத்தின் விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறையிலும் விவசாய சமூகத்தின் வாழ்க்கையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.


கல்கமுவ பிரதேச நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தின் நிருவாகக் கட்டடத்தினை திறந்து வைத்து, பயிற்சி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வை அடையாளப்படுத்தும்வகையில் இரண்டு மாணவர்களின் பதிவு நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வில் டிப்ளோமா பட்டதாரிகளுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டது.

 

அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொயிசாவினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச்சின்னம் இதன்போது வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயாசிறி ஜயசேக்கர, விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார, டி.பீ.ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர்களான தாரானாத் பஸ்நாயக்க, இந்திக பண்டாரநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவ, சாந்த பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏகாதிபத்திய ஆட்சிக்கு நாட்டில் மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி ஏகாதிபத்திய ஆட்சிக்கு நாட்டில் மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி Reviewed by Madawala News on 7/07/2017 12:06:00 PM Rating: 5