Yahya

தலைமைத்துவச் சங்கிலி..


ஒரு தேசத்தில் யுத்த நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, படையில் உள்ள தலைவர் அதாவது தளபதி மட்டுமன்றி கடைசி வரிசையில் நிற்கின்ற சாதாரண சிப்பாயும் கூட தனது இலக்கிலேயே குறியாய் இருப்பான். 

படைத் தளபதி மீது சிப்பாய்களுக்கு பூரண நம்பிக்கையிருக்கும். ஆனால் அவரது நகர்வுகளில் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் அவர்கள் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் தளபதி காயப்பட்டு, மேலும் நகர முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டால், அல்லது தளபதி உயிரிழக்க நேரிட்டால்.... மற்றைய படை வீரர்கள் அழுதுகொண்டோ புதினம் பார்த்துக் கொண்டே நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.


அந்த படையணியின் தலைவரான தளபதிக்கு அடுத்த படியாக இரண்டாம் நிலை தளபதிகள் ஏற்கனவே படையில் இருப்பார்கள். முதலாம் நிலைத் தளபதி நிலைகுலைகின்ற போது, இரண்டாம்நிலை தளபதி ஒருவர் படையை முன்கொண்டு செல்வார். 


இதுதான் பொதுவான வழக்கமாகும். சில படையணிகளில் தளபதி காயப்பட்டு விழுந்தால் அல்லது வழிதடுமாறினால் அவரை கருணைக் கொலை செய்துவிட்டு, அவருடைய ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு அடுத்த தலைவர்கள் அந்த படையை முன்னோக்கி நகர்த்தி சென்றதாகவும் வரலாறுகளில் படித்திருக்கின்றோம்.


அதைவிடுத்துவிட்டு, தலைமைத்துவத்திற்காக சண்டை பிடித்துக் கொண்டு நிற்பார்களே என்றால், முதலாமவர் அந்த அணியில் சரியான தலைமைத்துவச் சங்கிலியை உருவாக்கியிருக்கவில்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு தலைவர் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டால் அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அவர் அவ்விடத்தில் இல்லாமல் போனார் என்றால் அந்த வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதாவது தனக்குப் பிறகு இந்த தலைமைத்துவப் பொறுப்புக்கு வருவதற்கு யார் பொருத்தமானவர் என்பதை மிகச் சரியாக இனங்கண்டு அதை மற்றவர்களுக்கும் ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்தாலேயே அவர் சரியான தலைவருக்குரிய பண்புகளைச் கொண்டிருக்கின்றார் என்று சொல்ல முடியும்.


அவ்வாறில்லாமல், தான் இல்லாமல் போனதற்குப் பிறகு அல்லது தனக்கு இயலாத கட்டத்தில் கீழுள்ளவர்கள் ஆளுக்காள் தலைமைப் பதவிக்காக அடித்துக் கொள்வார்கள் என்றால் அன்றேல், தலைமைப் பதவிக்கு பொருத்தமான யாரையும் உடனடியாக தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவுமாக இருந்தால், முன்பிருந்த தலைவரின் தலைமைத்துவ பண்புகள் முழுமை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.


எதிர்காலத்திற்கான ஏற்பாடு

தலைமைத்துவ சங்கிலிகள் உருவாக்கப்படாத காரணத்தினால் அந்த கட்டமைப்பிற்குள் இருக்கின்ற அணியினரை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதும், முன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பிசகாமல் வழிநடாத்திச் செல்வதும் பெரும்பாடாக அமைந்து விடும். தலைமைத்துவ சங்கிலி சரியாக இல்லை என்றால், அரசியலில் மட்டுமன்றி, நாட்டின், சமூகத்தின், மதத்தின், இனத்தின், நிர்வாகத்தின் செயற்பாடுகளும் ஸ்தம்பித நிலைக்கு உட்படும் என்பதை உலக சரித்திரத்தை ஆய்ந்தறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.


ஒரு காலத்தில் இருக்கின்ற சில தலைவர்கள் தமக்குப் பின்னே இந்தக் கட்சியை, தமது மக்களை யார் தலைமை தாங்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பார்கள். 


அல்லது அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் காலமாகி விட்டாலோ அல்லது ஒதுங்கிக் கொண்டாலோ அந்த இயக்கத்தின் செயற்பாடு தங்கு தடையின்றி தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். அந்தச் சங்கிலியின் ஒரு வளையத்துடன் மற்றைய வளையம் இணைக்கப்பட்டிருப்பதால் பயணம் அறுந்து விடாமல் நீட்சி கொள்ளும்.

இன்னும் சில தலைமைத்துவங்கள் இருக்கின்றன அவர்கள் தமக்குப் பிறகு யாரையும் அடுத்த தலைவராக வளர்த்தெடுக்க மாட்டார்கள். அறிவித்திருக்கவும் மாட்டார்கள். ஆப்படியானவர்கள் உண்மையில் தாமே கடைசிவரையும் தலைவராக இருக்க வேண்டும் என்றும் இன்னுமொருவரை உருவாக்கினால் தமக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைப்பவர்கள். 


தமக்குப் பிறகு இந்த கட்சிக்கு, இயக்கத்திற்கு என்ன நடக்கும் என்று தூரநோக்காக சிந்திக்காத தலைமைத்துவங்கள் திடீரென ஏதாவது நடந்து அப்பதவியில் இல்லாமல் போய்விட்டால், அந்த கட்சியின் ஆயுட் காலமும் முடிவடைந்து விடும். இவ்வாறு தலைவரோடு சமாதியான எத்தனையோ கட்டமைப்புக்கள் இருக்கின்றன.

வேறுசில தலைவர்களின் கீழுள்ள யாருமே தலைமைத்துவத்துக்கு பொருத்தமற்றவர்களாக இருப்பதும் உண்டு. 


இப்படியான சந்தர்ப்பங்களின் தலைமைப் பதவி காலியாகின்ற போது கட்சியின், சமூகத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். சில தலைவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் அடுத்த தலைவரை வெளிப்படுத்தவோ வளர்க்கவோ மாட்டார்கள். தன்னைவிட வேறு யாரும் அப்பதவியில் அமர்ந்து, அவரை விட இவர் சிறந்த தலைவர் என்று மக்கள் சொல்லக் கூடாது என்ற ஒரு சிறுபிள்ளைத்தனம் அவர்களிடம் இருக்கும்.


பரந்துபட்ட அனுபவம்

உலக அரசியல் அரங்கில் மாத்திரமன்றி;, இலங்கையின் அரசியலிலும் பொதுவாகவும் முஸ்லிம்களின் அரசியல் பரப்பில் குறிப்பாகவும் இவ்வாறான பண்பை காண முடிகின்றது. உலக அரசியலில் நிகழ்தேறிய பல நிகழ்வுகள் இந்த வகைக்குள் அடங்குகின்றன. தென்கிழக்காசிய நாடுகளைப் பொறுத்தமட்டில் மிக அண்மைய சம்பவமாக ஜெயலலிதாவின் மரணத்தையும் அடுத்த தலைமைத்துவத்தை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட இழுபறிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.


இலங்கையின் நிலவரப்படி, இப்போது பிரதான பெருந்தேசியக் கட்சிகளிடையே ஒரு முறையான தலைமைத்துவச் சங்கிலி உருவாக்கப்படவில்லை என்றே அவதானிகள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகள் சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகின்ற போதும் சு.க.தலைவர் ஒருவர் ஆட்சியில் இல்லாத ஒரு காலப் பிரிவில் அப்பதவி வெற்றிடமாகும் ஒரு துரதிர்ஷ்ட நிலைமை ஏற்பட்டால், அல்லது இராஜினமாச் செய்தால் அக்கட்சியை யார் தலைமை தாங்குவார் என மக்களுக்கு இப்போது தெரியாது.


சு.க.கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற்கொண்டு பல முன்னணி அரசியல்வாதிகள் இருந்தபோதும், அடுத்த தலைவர் யாரென்று பகிரங்கமாக அறியப்படவில்லை. பண்டாரநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை, பெருந்தேசிய சக்திகளையும் கடும்போக்கு பௌத்தர்களையும் சிறுபான்மையினங்களையும் மிகக் கவனமாக வழிநடாத்துகின்ற அடுத்தடுத்த தலைமைகள் யார் என்பதை தெளிவாக மக்கள் அறிந்திலர்.


அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்த படியான தலைமைத்துவம் யாரென்பது வெளிப்படையாகத் தெரியவில்லை என்று அரசியல் அரங்கில் பேசப்படுவதுண்டு. அவர் விலகிக் கொண்டாலோ, ஓய்வுபெற்றாலோ வேறு வழியில் அப்பதவி காலியானாலோ அடுத்த தலைவராக வரக் கூடியவர் யாரென்று மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. கட்சிக்குள்ளாவது அந்த சங்கிலி உருவாக்கப் பட்டிருக்குமோ தெரியாது.


ஏனெனில், ஐ.தே.க.இன்றிருக்கின்ற நிலைமையில் வேறு யார் தலைவராக வந்தாலும் அக்கட்சிக்கு வாக்களிக்கும் பிரபல பெரிய குடும்பங்களை சமாளிப்பது தொடக்கம் கட்சி உறுப்பினர்களை ஆள்வதும் பாரிய சவாலாக இருக்கும் என ஊகிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையே பல சமூக அமைப்புக்களிலும் காணப்படுகின்றது என்றால் மிகையில்லை.


தமிழர் அரசியலில்

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது இந்தக் கட்டுரையில் 'தலைமைத்துவம்' என்று இங்கு கூறப்படுவது தலைமைத்துவத்திற்குரிய எவ்வித தகுதிகளும் பண்புகளையும் இல்லாமல் தலைவர் என்று அழைக்கப்படுகின்ற எந்தவொரு நபரும் அல்லர். அப்பதவிக்கு அருகதையற்றவராக இருந்த போதும் தம்மை தாமே தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் பேர்வழிகளும் அல்லர். மாறாக, இந்த தலைவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக, மக்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அதைவிடுத்து உப்புக்குச் சப்பாக அடுத்த தலைமைத்துவம் தீர்மானிக்கப்படுமாயின், ஒரு தலைமைத்துவ சங்கிலியில் இரும்பு வளையத்திற்குப் பதிலாக, இறப்பர் வளையம் போட்டது போலாகிவிடும்.

இதேவேளை, தமிழர் அரசியலில் பல சிறந்த தலைமைத்துவங்கள் தற்போது இருக்கின்றன. 


ஆனால் கணிசமானவர்கள் முன்னொரு காலத்தில் ஆயுத இயக்கத் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். பல தமிழ் அரசியல்வாதிகள், அவர்களது முன்னோடிகளைப் போல நல்ல பல தலைமைத்துவ பண்புகளை கொண்டிருந்த போதும் ஒரு சிலர் சில சந்தர்ப்பங்களில் பக்குவமற்றவர்களாக நடந்து கொள்வதையும் காண முடிகின்றது.


இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைத்துவங்கள் யாரென்ற கேள்விக்கு இப்போது தெளிவான விடையில்லை என்றே கூற வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இரா. சம்பந்தன், இன்று முஸ்லிம்களாலும் சிங்களவர்களாலும் கூட பெரிதாக மதிக்கப்படுபவர். தமிழர் அரசியலின் முதுசம் என்று கருதப்படுபவர்.


தமிழ் மக்களுக்கு எது தேவை என்பதை, சிங்கள தேசத்திற்கு நோகாத வண்ணம் பெற்றெடுக்கின்ற பக்குவம் நிகழ்காலத்தில் அவருக்கு மட்டுமே இருக்கின்றது எனலாம். இந்நிலையில், அவர் இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி சிந்திக்கவே முடியாதிருப்பதாக தமிழ் நண்பர்கள் கூறுவதுண்டு. சம்பந்தனுக்குப் பிறகு, கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்தி, தமிழ் மக்களின் அபிலாஷைக்கான இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் வல்லமையும் பக்குவமும் கொண்டவர் யாரென்பது ஊகங்களுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது.


த.தே.கூட்டமைப்பிற்குள் அடுத்த தலைமைத்துவம் உள்வாரியாக வளர்க்கப்பட்டிருக்கலாம். என்றாலும், எம்.எச்.எம்.அஷ்ரஃபுக்குப் பின்னரான முஸ்லிம்களின் நிலைபோல் சம்பந்தனுக்குப் பிறகான தமிழர் அரசியலின் நிலை ஆகிவிடாத வண்ணம் தலைமைத்துவச் சங்கிலி கட்டமைக்கப்படுவதுடன், அது மக்கள்மயப்படுத்தப்பட வேண்டியும் உள்ளது.


முஸ்லிம்களின் நிலை

இதேவேளை முஸ்லிம் சமூகத்தில் எல்லா விடங்களிலும் தலைமைத்துவச் சங்கிலி உருவாக்கப்படவில்லை என்பது ரகசியமல்ல. அரசியல் இதில் பிரதானமானது. முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் தலைமைத்துவச் சங்கிலி சரியாகக் கோர்க்கப்படவில்லை என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மரணித்த போது முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டனர். அந்த இடைவெளி சரியாக நிரப்படவில்லை என்பதை அவர்கள் கடந்த 17 வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சொல்ல முடியும்.


அஷ்ரஃப் மீதான சிற்சில விமர்சனங்களை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், ஒப்பீட்டளவில் அவர் சிறந்த தலைவராக திகழ்ந்தார். இன்று இத்தனை முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைத்துவங்களும் இருந்தும், முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் 'அஷ்ரஃப் இல்லாமல் போய்விட்டாரே' என்று அங்கலாய்த்து அவரது வெற்றிடத்தை உணர்கின்றார்கள் என்றால், அவர் ஒரு சிறந்த தலைவராக இருந்ததற்கான சான்றாகவே அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்தப் பின்னணியில் நோக்கினால் அஷ்ரஃப் கூட சரியான தலைமைத்துவச் சங்கிலியை உருவாக்க தவறிவிட்டாரோ என்ற சிந்தனை ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

ஒரு சமூகத்தை, கட்சியை ஓரளவுக்கேனும் தலைமைதாங்கி நடாத்தக் கூடிய பல அரசியல்வாதிகளை அஷ்ரஃ;ப் தனது பாசறையில் வளர்த்தெடுத்தார் என்றாலும், தனது மரணம் பற்றி அதிகமதிகம் பேசினார் என்ற போதும், மு.கா.வுக்கான அடுத்த தலைவர் இவர்தான் என்று அவர் மக்கள் சாட்சியாக அடையாளப்படுத்தியிருக்கவில்லை. 


கட்சிக்குள் சாடை மாடையாக சொல்லியிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும், அதற்குப் பிறகு தலைவரை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இழுபறியைப் பார்க்கின்றபோது அந்த தகவல்களின் உண்மைத்தன்மை கேள்விக் குறியாகின்றது.

எதிர்பாராத விதமாக அஷ்ரஃப் மரணித்ததைத் தொடர்ந்து, உடனடியாக அக்கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் தலைமைத்துவச் சங்கிலியில் ஏற்பட்ட குறைபாட்டால், அவ்விடயத்தில் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் ஏற்பட்டன. ஏதோ ஒரு அடிப்படையில் ரவூப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரஃபும் தலைவராக நியமிக்கப்பட்டார்கள்.


பிறகு மு.கா.வின் தனித் தலைமையாக ஹக்கீம் அறிவிக்கப்பட்டதுடன், புறமொதுக்கப்பட்ட பேரியல் அஷ்ரஃப் நுஆ கட்சியின் தலைவியானார். அப்போது றவூப் ஹக்கீமை தனித் தலைவராக பிரகடனம் செய்தோரே அவரது தலைமைத்துவத்தில் அதிருப்தியுற்று பல கட்டங்களில் வெளியேறினார்கள் என்பது நாமறிந்த சங்கதிதான். ஆகவே, இங்கு தலைமைத்துவச் சங்கிலி சரியாக இருந்திருக்குமாக இருந்தால், அடுத்த தலைமைத்துவம் தயார்படுத்தப்பட்டிருக்குமானால் இத்தனை சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது.


இவ்விடத்தில் கவனிக்கப்பட இன்னுமொரு விடயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, முஸ்லிம் அரசியலில் தலைமைத்துவம் என்பது சிங்கள, தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவங்களை விட மாறுபட்டதொரு பண்பாற்றலை கொண்டிருப்பதாகச் சொல்ல முடியும். சிங்கள, தமிழ் சமூகங்களில் இருக்கின்ற பிரதான குறைபாடு தலைமைத்துவச் சங்கிலியை சரியாகக் கட்டமைப்பதாகும். ஆனால், முஸ்லிம் அரசியலில் இரண்டு குறைபாடுகள் இருக்கின்றன.


முஸ்லிம் அரசியலில் பொதுவாகவே ஒரு வெற்றிடம் உணரப்படுகின்றது. இன்றிருக்கின்ற எந்த முஸ்லிம் கட்சித் தலைமையால் தனித்தோ அல்லது கூட்டாகவோ அதனை நிரப்பிவிட முடியாது. எனவே, பெரும்பாலான முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முஸ்லிம் தலைமைத்துவம், முஸ்லிம்களிடையே அவசியமாகின்றது.


இந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவந்து, ஒரு சரியான தலைமைத்துவத்திற்கான அளவுகோல்களை ஒருபுறம் வைத்துவிட்டு இன்றிருக்கின்ற மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட அனைத்து சிறிய பெரிய முஸ்லிம் கட்சித் தலைவர்களையும், ஒரு நல்ல தலைமைத்துவங்களாக எடுத்துக் கொள்வோம். அவ்வாறு அவர்களை தலைமைத்துவமாக ஏற்றுக் கொண்டாலும், அங்கும் தலைமைத்துவச் சங்கிலி சரியாக உருவாக்கப்படவில்லை. இது இரண்டாவது பிரச்சினை.


மு.கா.வின் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் தலைமையைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட சங்கடங்கள், இழுபறிகள் மீண்டும் எந்தவொரு முஸ்லிம் கட்சிக்கும் அல்லது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படாத வண்ணம், இப்போதுள்ள கட்சிகள் மற்றும் அமைப்புக்களில் அடுத்தடுத்த தலைமைத்துவங்கள் உருவாக்கப்படவும் இல்லை, மக்கள் மத்தியில் அதுகுறித்து தெரிவிக்கப்படவும் இல்லை. எனவே, இந்தப் பணி அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது. முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி, சமூக, சிவில், மார்க்க விடயங்களிலும் இச்சங்கிலித் தொடர் உருவாக்கப்பட வேண்டும்.


தலைமைத்துவச் சங்கிலியில் இங்கு குறிப்பிடப்படும் 'தலைமைத்துவம்' என்பது, தமது அரசியல் பிழைப்புக்காக கட்சிக்குள் வந்தவர்களைக் கொண்டோ, கெட்ட நடத்தை கொண்டவர்களைக் கொண்டோ, மக்களை மட்டமாக கருதுபவர்களைக் கொண்டோ, அரசியலை வியாபாரமாக்குகின்றவர்களைக் கொண்டோ, பணத்திற்காக எதையும் செய்பவர்களைக் கொண்டோ நிரப்பப்பட முடியாது என்பதே இங்குள்ள நிபந்தனையாகும்.

எனவே, இது நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 02.07.2017)

தலைமைத்துவச் சங்கிலி.. தலைமைத்துவச் சங்கிலி.. Reviewed by Madawala News on 7/03/2017 07:46:00 PM Rating: 5