Ad Space avaiable

துணிக்கடையில் திடீரென அதிகரித்த வியாபாரமும் இளைஞனின் கேள்வியும்! 


எஸ். ஹமீத்.

அரசியல்வாதிகள் மற்றும் பெரும் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் எல்லோரும் தமக்கான ஆடைகளை வாங்க வருவதனால் அந்தத் துணிக்கடை மிகவும் பிரபலமானது.


அந்தக் கடையில் புதிதாக ஓர் இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். என்ன ஆச்சரியம்...அந்த இளைஞன் வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே வியாபாரம் பல மடங்கு அதிகரித்தது. இலாபமும் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

கடைக்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் அந்த இளைஞன் இரகசியம் பேசுவது போல ஏதோ பேசுவதையும் அதனையடுத்து அவர்கள் அவசர அவசரமாக காற்சட்டையோ, சாரமோ, வேட்டியோ, கைக்குட்டையோ வாங்கி கொண்டு 'பாத்ரூமுக்கே' சென்று அவற்றை அணிந்து கொண்டு வருவதையும், அவ்வாறு அணிந்து வந்த பின்னர் என்ன விலை சொன்னாலும் அந்த விலையைக் கொடுத்துவிட்டு ஓடுவதையும் தொடர்ச்சியாக அவதானித்து வந்த கடை முதலாளி ஒரு நாள் அந்த இளைஞனை அழைத்துக் கேட்டார்.

''தம்பி...நீ நன்றாகவே வியாபாரம் பண்ணுகிறாய். உன்னிடம் எந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வந்தாலும் ஆடைகள் வாங்காமற் செல்வதில்லை. அது மட்டுமன்றி, எவ்வளவுதான் விலையைக் கூட்டிச் சொன்னாற் கூட மறுக்காமல், பேரம் பேசாமல் அந்த விலையைத் தந்துவிட்டுச் செல்கின்றனர். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுசரி...அவர்கள் எல்லோரிடமும் நீ இரகசியமாக அப்படி என்னதான் பேசுகிறாய்...?''

முதலாளியின் முகத்தைப் பார்த்தபடி அந்த இளைஞன் சொன்னான்.

''வேறு ஒன்றுமில்லை சார்...எல்லோரிடமும் நான் கேட்பது ஒரேயொரு கேள்விதான். ஏனோ தெரியவில்லை....அந்தக் கேள்வியைக் கேட்டதும் சிலருக்கு வியர்த்து விடுகிறது. கைக்குட்டையோ, துண்டோ வாங்குகிறார்கள். சிலருக்குச் சிறுநீர் போய்விடுகிறது. வேறு சிலருக்குப் பேதியாகி விடுகிறது. ட்ரவுசரோ, வேட்டியோ, சாரமோ உள்ளாடையுடன் சேர்த்து வாங்கிக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடுகிறார்கள். வாங்கிய புது ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறார்கள். நாம் சொன்ன விலையைத் தந்துவிட்டு, மிகுதி பணத்தைக் கூட வாங்காமல் ஓடிவிடுகிறார்கள்...''

''அப்படியா...சரி. அந்தக் கேள்வி என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா...?'' என மிக்க ஆவலோடு கேட்டார் கடைக்காரர்.

இளைஞன் சொன்னான்: 'நாட்டில் இலஞ்சமும் ஊழலும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்து விட்டதற்குக் காரணமானவர்களை ஊடகவியலாளர்கள் ஆதாரங்களுடன் கண்டுபிடித்திருக்கிறார்களாமே, உண்மையா சார்...?' என்பதுதான் சார் எனது அந்தக் கேள்வி!''

(ஒன்றிலிருந்தான இன்னொரு கற்பனை)

துணிக்கடையில் திடீரென அதிகரித்த வியாபாரமும் இளைஞனின் கேள்வியும்!  துணிக்கடையில் திடீரென அதிகரித்த வியாபாரமும் இளைஞனின் கேள்வியும்!  Reviewed by Madawala News on 7/31/2017 02:42:00 PM Rating: 5