Ad Space Available here

உலக மேலாதிக்க கருவியாக இஸ்லாமிய சர்வதேசியம்


Muja ashraff 

மேற்கு சீனாவில் தொடங்கி மத்திய ஆசியாவைக் கடந்து ஐரோப்பா வரையில் அமெரிக்காவின் சதி வலை விரிந்திருக்கிறது. சீன, ரசிய நகரங்களில் குண்டு வைக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும், உஸ்பெக்கிஸ்தான் தலைநகரின் பெயரை இஸ்லாமாபாத் என்று மாற்றக்கோரும் இஸ்லாமிய அமைப்புகளும் சவூதி பாக் சி.ஐ.ஏ. முகாமினால் பயிற்றுவிக்கப்பட்டவை என்று அந்நாட்டு அரசுகள் குற்றம் சாட்டுகின்றன.


1995 இல் செசன்யாவில் தாக்குதல் தொடுத்த ஷமில் பசயேவின் 35,000 பேர் கொண்ட இஸ்லாமிய படை ஆப்கானில் பயிற்றுவிக்கப்பட்டது. ரசியாவின் எண்ணெய்க் குழாய்களை உடைப்பது, கடத்தல் ஆகியவை அவர்களது ‘அமைதிக்கால பணிகள்’


“தீவிரவாத ஒழிப்பு” என்ற பெயரில் செசன்யா மக்கள் மீது ரசிய இராணுவம் நடத்திய கொலைவெறியாட்டத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி “மனித உரிமை மீறல்” என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதை ரசியா மறக்கவில்லை.


“ஆப்கான், பாகிஸ்தான் முகாம்களில் பயிற்றுவிக்கப்பட்ட செசன்யாவின் இஸ்லாமிய போராளியான ஷமில் பசயேவ், அல் கடாப் ஆகியோருடன் பின்லாடனும் கலந்து கொண்ட இரகசியக் கூட்டமொன்று 1996 – இல் சோமாலியாவில் மொகாடிஷீ நகரில் நடத்தப்பட்டது. ரசிய அரசுக்கெதிரான போரைத் திட்டமிடுவதற்கு நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தை ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்தது” என்று கூறுகிறார் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் இயக்குநர் ஒய். பெடொன்ஸ்கி


இதே நேரத்தில் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எப்.பி.ஜ. (FBI) இன் தேடப்படுவோர் பட்டியலில் பின்லாடன் இருந்தார்.


யூகோஸ்லாவியா மீதான நேட்டோ தாக்குதலுக்குக் காரணமாக இருந்த போஸ்னிய முஸ்லிம்கள் மீதான செர்பிய வெறியர்களின் தாக்குதல், இனப்படுகொலை ஆகியவற்றில் அமெரிக்காஇஸ்ரேல் கூட்டணியின் சதியும் இப்போது அம்பலமாகியிருக்கிறது.


ஒருபுறம் குரேசிய கிறிஸ்தவ, நாஜி வெறியர்களுக்கு அமெரிக்க ஆயுத வியாபாரிகள் ஆயுத சப்ளை செய்தனர், இன்னொருபுறம் அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இஸ்லாமிய போராளிகளுக்கும் ஆயுத சப்ளை செய்திருக்கின்றனர்.


முஸ்லிம்களுக்கு இஸ்ரேல் ஆயுதங்களை சப்ளை செய்ய முடியுமா என்று அதிசயிப்பவர்கள், இந்தப் போரின் விளைவிலிருந்து அதைப் புரிந்து கொள்ளலாம். பிரபல அமெரிக்க வர்த்தகச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் என்ற யூத ஏகபோக முதலாளிதான் இன்று கொசாவாவில் உள்ள சுரங்கங்களின் உரிமையாளன். (American Free Press.net – 14.10.2001)

முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியும் இந்நாள் முதலாளியுமான யூசுப் மைமைன் என்பவன் தான் துர்க்மேனிஸ்தான் அதிபரின் வர்த்தக ஆலோசகர். துர்க்மேனிஸ்தானிலிருந்து காஸ்பியன் கடல், அஜர்பைஜான் வழியே துருக்கிக்கு குழாய் அமைத்து ஈரானை ஒதுக்குவது மைமனின் திட்டம். குழாயை துருக்கியிலிருந்து ஐரோப்பாவிற்குள் கொண்டு செல்லத் தோதாக பால்கன் நாடுகள் அமெரிக்கப் பிடியில் கொண்டு வரப்படுகின்றன.


“மத்திய ஆசியாவில் நமது அரசியல் புவியியல் லட்சியங்களை எட்டுவதற்கு அமெரிக்க இஸ்ரேல் அரசுகளால் சாதிக்க முடியாதவற்றை நாங்கள் சாதித்திருக்கிறோம்” என்கிறான் மைமன்.


சோவியத் ஆப்கான் போரின் காலம் முதல் வாஷிங்டனுக்கு தேவையான பதிலி யுத்தங்களை நடத்துவதற்கு முஜாகிதீன்களை பயன்படுத்துவது அமெரிக்க வெளியுறவுக் கொளையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. “போஸ்னியாவை இஸ்லாமிய போராளிகளின் தளப்பகுதியாக மாற்றுவதற்கு உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான முஜாகிதீன்களைத் திரட்டுவது என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் அறிக்கை இதைக் கூறுகிறது” என்கிறார் சோசுடோவ்ஸ்கி.


“இப்போது மாசிடோனியாவிலும் இதுதான் நடக்கிறது. போரிடும் இரண்டு தரப்பினரையும் (அரசு Vs முஸ்லீம் ) அமெரிக்க இராணுவத்தின் உளவுத்துறை ஆட்டுவிக்கிறது.” (மைக்கேல் சோசுடோவ்ஸ்கி, ஆகஸ்டு, 2001 உலகமயமாக்கல் குறித்த ஆய்வு மையம், கனடா)


மேற்கூறிய விவரங்கள் கூறும் முடிவு இது தான். பனிப்போர்க் காலத்தில் ரசியாவை வீழ்த்துவதற்கான ஆயுதமாக இஸ்லாமிய சர்வதேசியத்தை பயன்படுத்திய அமெரிக்கா பனிப்போருக்குப் பின் அதையே தனது உலக மேலாதிக்கத்தை நிறுவ உதவும் இரகசிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

உலக மேலாதிக்க கருவியாக இஸ்லாமிய சர்வதேசியம் உலக மேலாதிக்க கருவியாக இஸ்லாமிய சர்வதேசியம் Reviewed by Madawala News on 7/25/2017 09:51:00 AM Rating: 5