Ad Space avaiable

காணாமற்போனோரைக் கண்டறியும் விடயத்தில் ஒத்துழைக்க வேண்டியது தமிழ்த் தலைமைகளின் தலையாய கடமையாகும்!


கிருஷ்ணி இஃபாம்:

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து பொறுப்பு கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கின்றது. 

காணாமல் போனவர்கள் என்பது இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களை குறிக்கின்றது. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் பொது மக்களுக்கு கூற வேண்டும். கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல வாய்ப்பில்லை. 

எவ்வாறாயினும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட காலம் உள்ளிட்ட விபரங்களை வழங்க வேண்டும.;

இந்நிலையில் காணாமற்போனவர்கள் குறித்த உண்மையான நிலைப்பாடு என்ன, அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டனரா என்பது விரைவாக கண்டறியப்பட வேண்டியுள்ளது. தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பதுகூடத் தெரியாது எத்தனை உறவுகள் கண்ணீருடன் தினந்தினம் உணவருந்தி வருகின்றன. அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தால் கூட இவர்கள் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டு அதுதான் தமது தலைவிதி என இருந்துவிடுவர். இப்போது அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது தெரியாது இரண்டும் கெட்டான நிலையில் இந்த மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இராணுவம் கைப்பற்றிய தமிழர் பகுதியை மீண்டும் தமிழ் மக்களிடமே வழங்க வேண்டும், இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் அடிக்கடி நிகழ்வது யாவரும் அறிந்ததே!

போரின்போது, காணாமல் போனவர்களின் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பெற முடியாமலும், அரசின் இதர சலுகைகளைப் பெற முடியாமலும், அவர்களுடைய உறவினர்கள் தவித்து வருகின்றனர். 

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிப்போரில் அப்பாவி தமிழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர். இவர்களில் பெரும் பாலானவர்கள் இராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகளும், சாமானிய மக்களும் ஆவர்.

 காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசுகள் அமைத்த விசாரணை ஆணைக்குழுக்களின் பெறுபேறுகள் பூச்சியமாகவே உள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும் பாசீலனையில் எடுத்துக்கொண்டு, பொறுப்புள்ள அரசென்ற வகையில், தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். உண்ணாவிரதமிருக்கும் மக்களின் நியாயத்திற்கான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடராதவகையில், அந்த மக்களுடைய நீண்டகாலக் கோரிக்கையைப் பூர்த்தி செய்கின்ற வகையிலேயே அரசின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் நானும் பலதையும் பலரையும் இழந்திருக்கின்றேன். அந்தவகையில், அந்த மக்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், அவர்களது கவலையை உணர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது. கடந்த காலங்களில் மாறி மாறி வந்த அரசுகள், காணாமல் போனவர்கள் தொடர்பாக பல ஆணைக்குழுக்களையும், விசாரணைக் குழுக்களையும் உருவாக்கி விசாரணைகளை நடத்தினார்கள். அவற்றின் மீது நம்பிக்கை வைத்தும், தமக்கு நியாயம் கிடைக்குமென்றும் எதிர்பார்த்தும் தமிழ் மக்களும் தமது முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் வழங்கினார்கள். ஆனால், அவற்றின் பெறுபேறுகள் பூச்சியமாகவும் நம்பிக்கையற்றவையாகவுமே இருக்கின்றன. எனவே, பொறுப்புக் கூறவேண்டிய அரசென்ற வகையில் இந்த அரசு சகலதையும் பரிசீலனையில் எடுத்துக்கொண்டு இந்த மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயத்தை வழங்கவேண்டும் என்றும் கூறினார்.

இறுதி யுத்தம் கடுமையாக இடம்பெற்ற காலத்தில் யுத்தக்கெடுபிடிக்குள் சிக்கி மாண்டவர்கள் சிலரது தகவல்கள் கிடைக்காது அத்தகைய சிலர் காணாமற்போனவர்களது பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பின் அதனை ஓரளவாயினும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் தமது கண் முன்பாக விசாரரைணக்கு என அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பின்னர் எவ்விதமான தகவல்களும் இன்றி மறைந்து போயுள்ளதாகப் பல சாட்சியங்கள் பதிவாகியுள்ளது என்பது மிகவும் அபத்தமான செயலாகவே உள்ளது. தம்மால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்களை எங்கே எனப் படைத்தரப்பினரிடம் கேட்டபோது நாம் அவர்களை அழைத்துச் செல்லவில்லையே எனப் பதில் வழங்கப்பட்டதாக பல உறவினர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எனப் பலரிடமும் இந்த உறவுகளைத் தொலைத்த உறவுகள் தமது சோகக்கதைகளைக் கொட்டி வருகின்றனர். ஆனால் அதற்கும் ஒரு பலனும் ஏற்படவில்லை. இப்படியே போனால் இன்னமும் சிறிது காலத்தில் இது மறக்கப்பட்ட கதையாகிவிடும் எனச் சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த உறவுகளின் நிலையைப் பார்த்ததால் அது ஒருபோதும் நடக்காது என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் இந்தக் காணாமற்போனவர்களது நிலை என்ன என்பதைக் கண்டறிவதில் ஏன் இத்தனை காலதாமதம் எனும் வினா மக்கள் முன்பாக எழுந்துள்ளது. இன்றைய அரசாங்கம் இதுகுறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் அதன் நகர்வுகள் வேகங் குறைந்து காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். கடந்த எட்டு வருடங்களாக காணாமல் போன தமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிவதில் அவர்களிடம் நிச்சயம் ஆர்வம் இருக்கும். அத்தகைய ஒரு மனநிலையில் இருந்து பார்த்தாலதான் அதன் தாக்கம் பிறருக்குப் புரியும். அதனால் இவ்விடயத்தில் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

மக்களின் நீண்ட கால பிரச்சினையாகவுள்ள காணாமற்போனோரைக் கண்டறியும் விடயத்தில் ஒத்துழைக்க வேண்டியது இந்தத் தமிழ்த் தலைமைகளின் தலையாய கடமையாகும். எதிர்க்கட்சியில் இருந்தபோது குரல் கொடுப்பதும் அதிகாரம் கிடைத்தவுடன் அமைதியாக இருப்பதுவும் மக்களை வெறுப்பேற்றும் செயலாகும். அது வெறுமனே அன்றைய அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக நடத்திய அரசியல் கபட நாடகமாகவே கருத்திற் கொள்ள முடியும். இன்று அரச அதிகாரம் கைகளில் இருப்பதால் அரசாங்க தலைமைகளிடம் எடுத்துக் கூறி இந்த மக்கள் படுகின்ற அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ்த் தலைமைகளின் பொறுப்பாகும்.

கடந்த காலத்தில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு புலிகள் ஆதரவு அமைப்பினால் விசேட மகஜர் ஒன்று கடந்த வாரம் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அமைப்பு இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச விசேட நிபுணர்கள் தலையிட்டு விசாரணைகளை நடாத்துமாறும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  

இனப்படுகொலைக்கும், இன அழிப்புக் கொடுமைக்கும் உள்ளாகிய பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரின் பொறுப்பு ஆகும். அதுபோலவே செஞ்சிலுவைச் சங்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 189 நாடுகளில் இயங்குகின்ற அவர்கள்தான், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு உள்ளேயும் சென்று தகவல்களைச் சேகரித்துத் தருகின்றார்கள். அதற்கு உரிய அனுமதியை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் வழங்கி இருக்கின்றது.

யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்கள், காணிகள், உடமைகளை இழந்த மக்களை விடவும் தமது உறவுகளை இழந்தவர்களின் நிலைமையே பரிதாபமாக உள்ளது. அதிலும் இறந்துவிட்டார்கள் என அறியப்பட்டவர்களை விடவும் காணாமல் போய் இன்றும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா எனத் தெரியாது அங்கலாய்க்கும் மக்களின் அவல வாழ்விற்கு விரைவில் தீர்வினைக் கண்டறிய வேண்டியது அனைவரினது பொறுப்பாகும்.

 இதேவேளை காணாமற்போனவர்களது நிலை என்ன என்பதைக் கண்டறிவதில் ஏன் இத்தனை காலதாமதம் எனும் வினா மக்கள் முன்பாக எழுந்துள்ளது என ஆராய்ச்சியாளாரான ராதிகா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஓசோ ஹோட்டலில் ரெயின்போ ரிசோஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ராதிகா ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் நடந்த போரில் காணமல் போனவர்களின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் போர்க்கால விதவைகளின ஆற்றல்களை மேம்படுத்தல் தொடர்பாக தனியார் துறை, அரசாங்கம், ஊடகம் மற்றும் சிவில் சமூகம், பாலினம் தொடர்பான அமைப்புக்கள் ஆகியவற்றின் ஊடாக அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில யுத்த பிறதேசங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தள மேம்பாட்டு பயிற்சியாளராக அனுபவம் கொண்ட துணிகர ஆராய்ச்சியாளாரான ராதிகா ஹெட்டியாராச்சி தனது பணிகளினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். ராதிகா ஆயிரம் கணக்கானனோரை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளினையும் சோக கதைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இவற்றை ராதிகா ஹெட்டியாராச்சியின் வீடியோ நேர்காணல்கள் மற்றும் கடிதங்கள் மூலம் கண்டறியந்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் மனோநிலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமானதாக காணப்படுகின்றது. இதனை எனது ஆராச்சி மூலம் கண்டறிய முடிந்தது.

'ஆண்டான்குளத்தைச் சேர்ந்த கௌசலா அக்கினேஸம்மா கருத்து தெரிவிக்கையில்: யுத்த இழப்புகளுக்கு பிறகும் தமிழ் ஈழம் கோரிக்கையை கையை நாங்கள் கைவிட்டுவிட்டோம். இன்றைய நிலையில் தமிழ் ஈழம் சாத்தியமில்லாதது. இப்போது அதில் திருப்தியடைந்து அதில் நிம்மதியாக வாழ்கிறார்கள். இப்போது பலர்; அதையேதான் விரும்புகிறோம். சிங்கள அரசியல் தலைவர்கள் அரசியலுக்காக பல தவறுகளை செய்யலாம். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள்.  

யாழ்ப்பாணத்தில் இறுதிப்போர் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. யுத்தத்தில் பிழைத்து இப்போதும் உயிரோடு இருக்கும் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு பிழையான கருத்து.

வடக்கு-கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் இங்கு இருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளை வளர்த்தெடுக்க மறுவாழ்வுத்திட்டம், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளும், வீடுகள் நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதே நிலத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல், தொழிலை இழந்தவர்களுக்கு அதற்கான இழப்பீடுகள் ஆகியவைகள் தான் எங்களின் அவசர தேவைகள் ஆகும்.  

30 ஆண்டுகளாக போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் இப்போதுதான் நிம்மதியாக வாழத்துவங்கியுள்ளோம். எங்கள் தமிழர்கள் சுதந்திரமாக பயமற்று வாழ அரசியல் தீர்வுக்கு அரசாங்கம் உதவவேண்டும்.

காணாமற்போனோரைக் கண்டறியும் விடயத்தில் ஒத்துழைக்க வேண்டியது தமிழ்த் தலைமைகளின் தலையாய கடமையாகும்! காணாமற்போனோரைக் கண்டறியும் விடயத்தில் ஒத்துழைக்க வேண்டியது தமிழ்த் தலைமைகளின் தலையாய கடமையாகும்! Reviewed by Madawala News on 7/26/2017 10:41:00 PM Rating: 5