Kidny

Kidny

மீண்டும் தலை தூக்கும் ஹலால்!



சஹாப்தீன் -

முஸ்லிம்களின் மீதும், முஸ்லிம் அமைப்புக்களின் மீதும் பொறுப்பற்ற விதத்திலும், ஆதாரமில்லாத வகையிலும் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் பௌத்த இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் அவர்களின் மதவிழுமியங்களை பின் பற்றி நடக்கவும், கலை, கலாசாரங்களை பேணுவதற்கும் அரசியல் யாப்பில் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், இந்த உரிமைகளை பௌத்தர்கள் மாத்திரமே அனுபவிக்க முடியும். ஏனையவர்கள் இந்த உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதாகவே ஒரு சில இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஒரு சமூகத்தின் அல்லது இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுவதுதான் இனவாதமாகும். நாட்டில் சிறுபான்மையினரின் பல உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் பெரும் பேரினவாத அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 


இவர்கள் தங்களின் சுயநலன்களுக்காக இனவாத அமைப்புக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய அமைப்பினருக்கு பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் மீதான தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கே காரணமாகும் என்ற உண்மையை முஸ்லிம் சமூகம் இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. இந்த உண்மையை முஸ்லிம்கள் சரியாக உணர்ந்து கொள்ளாத வரையில் முஸ்லிம்களினால் சரியான அரசியல் தலைமைத்துவத்தை அடையாளங் காண முடியாது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஹலால் உணவுக்கு எதிராக பொது பல சேன போராட்டங்களை செய்தது. அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழ்களை வழங்கக் கூடாதென்றும் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்குவதனை நிறுத்திக் கொண்டது. தற்போது உணவுப் பொருட்களுக்குரிய ஹலால் சான்றிதழ்களை ஹலால் உத்தரவாதமளிக்கப்பட்ட சபை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பொது பல சேன மீண்டும் ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பான சர்ச்சை ஒன்றினை கிளப்பியுள்ளது. 


அதாவது, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமா சபை கட்டணம் அறவிட்டு அந்நிதியை தீவிரவாதிகளுக்கு வழங்கியதனைப் போன்று ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனமும் ஹலால் சான்றிதழ்களுக்கு கட்டணங்களை அறிவிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கின்றது. அரசாங்கம் இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என பொது பல சேனவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


இவரது இக்குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவொரு ஆதாரமுமில்லை. குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் முன் வைக்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களை சர்வதேச பயங்கவாத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்களை நெருக்கடிகளுக்குள் மாட்டிவிடுவதற்கு பொது பல சேன நீண்ட காலமாக முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. 


முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதற்காக இனவாதிகள் பள்ளிவாசல்களை தாக்கினார்கள். வர்த்தக நிலையங்களை தாக்கினார்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாதென்று பிரச்சாரம் செய்தார்கள், மத விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்தினார்கள். ஆனால், முஸ்லிம்கள் பொறுமையாக நடந்து கொண்டார்கள். இதனால், அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு உயிருக்கும், பொருட்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னரும் முஸ்லிம்கள் பொறுமையை கடைப் பிடித்தார்கள்.


இப்போது மீண்டும் ஹலால் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். முஸ்லிம்கள் ஹலால் உணவையே உட்கொள்ள வேண்டும். இது அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கத்தின் கட்டளையாகும். இதனை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதே பொது பல சேனவின் திட்டமாகும். முஸ்லிம்கள் தங்களின் மதத்தைப் பின்பற்றி நடப்பதற்கு சுதந்தரம் இருக்க வேண்டும். 


இதற்கு தடைகளை ஏற்படுத்துவதனை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. முஸ்லிம்களின் மனங்களை திட்டமிட்டு நோகடிக்கும் அமைப்புக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக பெறப்பட்ட கட்டணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்பினால் நிதி அனுப்பி வைக்கப்படுகின்றது என்று பொது பல சேனவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலான் விதானகே கூறியிருப்பதற்கு எந்தவொரு ஆதரமுமில்லை. வேண்டுமென்று முஸ்லிம்களை சிங்கள மக்கள் பிழையாக விளங்கிக் கொள்வதற்கும், சிங்கள மக்கள் முஸ்லிம்களை வெறுப்புடன் பார்ப்பதற்குமாக திட்டமிடப்பட்டு முன் வைக்கும் விசக் கருத்தாகும். இத்தகைய கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைக்கும் போது எதிர் காலத்தில் மிகப் பெரிய பின் விளைவுகளை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


பொது பல சேன தொடர்ச்சியாக முஸ்லிம்களை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கருத்துக்களை பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து மறுத்துக் கொண்டு வருகின்றனர். 


ஆயினும், பொது பல சேன நாட்டு மக்கள் மத்தியில் முஸ்லிம்களை மோசமாக காட்டுவதற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புண்டு என்று கருத்தை திணித்துக் கொண்டிருக்கின்றன. ஆதாரமற்ற கருத்துக்கள் வதந்தியாகும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு வாந்திகளை பரப்புவது குற்றச் செயலாகும். ஆதலால், இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பற்றி பொலிஸில் எந்த முறைப்பாடுமில்லையே என்று அரசாங்கமோ, பொலிஸாரோ கூறக் கூடாது. அவ்வாறு சொல்லுவது சட்ட ஆட்சிக்கு முரணான கருத்தாகும்.


இதே வேளை, அரசாங்கம் இனவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகையவர்களின் பின்னணி இனவாத அமைப்பினருக்கு இருந்து கொண்டிருப்பதனால்தான் அவர்கள் தைரியமாக நாட்டின் அமைதியை குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். 


இதே வேளை, பொது பல சேன முஸ்லிம்கள் மீது சுமத்திக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபார்சு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீன ஆணைக் குழு ஒன்றினை நியமிக்க வேண்டுமென்று அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி அரசாங்கத்தை கேட்டுள்ளார். இதனை பொது பல சேனவும் வரவேற்றுள்ளது.


ஜனாதிபதி சுயாதீன ஆணைக் குழுவினை நியமிப்பதன் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமென்பதில் முஸ்லிம்கள் அதித நம்பிக்கை வைக்க முடியாது. கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் நிமியக்கப்பட்டுள்ளன. இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை அடைந்து கொள்வதற்கும் ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. 


இக்குழுக்கள் எல்லாம் தமது ஆலோசனைகளையும், தீர்வுகளையும் முன் வைத்துள்ளன. 


ஆனால், நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாட்டில் புனித பூமியை பாதுகாத்தல் என்பது மட்டும் சிபார்சுகள், முடிவுகளை தாண்டியும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆதலால், ஜனாதிபதி ஆணைக் குழு என்பது ஒரு கண்துடைப்ப நடவடிக்கையாகவே அமையும் என்பதே கடந்த கால அனுபவமாகும்.


பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்தஞான சார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்;டதன் பின்னர் ஞாயிறு சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் இந்த நாட்டை பௌத்த சர்வதிகாரியே ஆட்சி செய்ய வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளார். இத்தகைய சிந்தனையைக் கொண்டவர்கள் ஒரு போதும் ஏனைய சமூகங்களின் மதங்களையும், விழுமியங்களையும் மதித்து நடப்பார்கள் என்று கருத முடியாது. இலங்கையை பௌத்த சர்வதிகாரிதான் ஆட்சி செய்ய வேண்டுமென்ற இந்த சிந்தனைக்கு உயிரூட்டி அந்த சர்வதிகாரியாக தாங்கள் இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கும் பேரினவாத அரசியல்வாதிகள் பொது பல சேனவிற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 


இவர்கள் தாங்கள் நாட்டின் தலைவராக வர வேண்டுமென்பதற்காக பிள்ளைக் கிள்ளி, தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.இவர்கள் யார் என்று அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். இவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகள், பங்காளிகள் என்று முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதனை தவிர்க்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தினை கருவறுக்க நினைக்கும் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தில் உள்ளவர்களே ஆதரவு அளித்துக் கொண்டிருக்கையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளுக்காக இருப்பது பச்சை சுயநலமாகும்.


இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வதனை செய்தாலும் முன் வைக்கப்படும் யோசனைகள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். 


இதே வேளை, சட்டம் தனது கடமையை பாரபட்சமின்றி சரியாக செய்தால் நாட்டில் எந்த சமூகமும் பாதிக்காத நிலை உருவாகம். ஆனால், நமது நாட்டில் சட்டம் பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுவாகவே சர்வதேச அமைப்புக்களும், நாடுகளும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு விடயத்தில் பௌத்த தேரருக்கு ஒரு விதமாகவும், ஏனைய மதங்களின் தலைவர்களுக்கு ஒரு விதமாகவும் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றன. இது போல் அரசியல்வாதிகளுக்கு ஒரு விதமாகவும், அமைச்சர்களுக்கு இன்னுமொரு விதமாகவும் சட்டம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சட்டம் என்பது ஆட்களுக்கு ஏற்ப மாறுதல் அடையக் கூடாது. அது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். சட்டத்தை மீறுகின்றவர் யாராக இருந்தாலும் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. 


சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளே இனவாத நடவடிக்கைகளும், சிறுபான்மையினருக்கு எதிரானவைகளும் இடம் பெறுவதற்கு காரணமாகும். சட்டம் இவ்வாறு பலவீனமடைவதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணமாகும். இவர்கள் தங்களுக்கு எதில் இலாபம் கிடைக்குமோ அதனை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இதற்காக நாட்டின் அனைத்து சட்டத்தையும் புறக்கணிக்கின்றார்கள். அதிகாரிகள் ஆட்சியாளர் என்ற பயத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். 


சட்டம் சரியாக அமுல்படுத்தப்பட்டால் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்காது சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். 

ஆகவே, இலங்கையை நீதியான நாடாக, அமைதியான நாடாக மாற்றுவதற்கு புதிய அரசியல் யாப்புக்களை விடவும் நடைமுறையில் உள்ள யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றை அமுல்படுத்தினாலே போதுமாகும்.


புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு அதில் புரட்சிகரமான சர்த்துக்கள் உள்ளடக்கப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லவை நடக்கும். இல்லையாயின் இன்றுள்ளதனை விடவும் மோசமான நிலையே ஏற்படும்.


வீரகேசரி 02.07.2017

மீண்டும் தலை தூக்கும் ஹலால்! மீண்டும் தலை தூக்கும் ஹலால்! Reviewed by Madawala News on 7/03/2017 12:50:00 AM Rating: 5