tg travels

பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிடப்போவதில்லை ..


நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த சமயம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் கைவிடப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.


ஜனாதிபதி  இன்று (10) பிற்பகல் தெகியத்தகண்டிய மகாவலி சாலிக்கா மண்டபத்தில் நடைபெற்ற வண.மக்குருப்பே பஞ்ஞாசேகர தேரருக்கான நியமன பத்திர வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தேச வரைபு கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை. அவ்வாறு தயாரிக்கப்படுமானால் அதனை பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் முன்வைத்து அனைத்து முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களையும் கருத்திலெடுத்து திருத்தங்களுடன் அந்த உத்தேச வரைபை தயாரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.

நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள விடயங்களில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாதென்பதுடன், 1972 அரசியலமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் இருக்கும் பந்தியிலும் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு இருக்கும் அக்கறை தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாரி தேர்தல் தொடர்பான கோரிக்கை ஆகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி , தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலும் அதிகார பகிர்விலும் ஒருபோதும் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாடான முறையில் கவனம்  செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வண.மெதகம தம்மாநந்த தேரர், வண. உருலேவத்தே தம்மரக்கித, வண. கொடகம மங்கல தேரர் உள்ளிட்ட தேரர்களும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தெகியத்தகண்டிய மகாவலி தேசிய உணவுச்சாலையும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.


திம்புலாகல புதிய வலய கல்வி அலுவலகம், திம்புலாகல வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையம் ஆகியவற்றையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

வடமத்திய மாகாண ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் இந்த காலத்தைப் போன்று வேறெந்த காலத்திலும் கல்வித்துறைக்கான வளங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

 சிலர் பெரும் அபிவிருத்தி என கதைத்தாலும் பாடசாலைகளில் தளபாடங்களும், குடிநீரும் இல்லையென்றால் அந்த அபிவிருத்தியால் பயனில்லை பாரிய அபிவிருத்திக்கு முன்னர் நாட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.


மெதகம இரண்டாம் நிலை பாடசாலையின் புதிய தொழில்நுட்ப பீடமும் இன்று பிற்பகல் ஜனாதிபதியினால் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார். எட்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணித்து தருவதாக மாணவர்களிடம் ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார்.


மாணவர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், 13 ஆம் ஆண்டு மாணவரான தனுஸ்க அம்பன்கல்லவினால் உருவாக்கப்பட்ட சிறிய ரக உழவியந்திரத்தையும் ஜனாதிபதி  பார்வையிட்டு பாராட்டினார்.


அதிபர் ஆர்.எம்.சாந்த உள்ளிட்ட ஆசிரியர்களும் பெற்றோரும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.  


பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிடப்போவதில்லை .. பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிடப்போவதில்லை .. Reviewed by Madawala News on 7/10/2017 11:41:00 PM Rating: 5