Ad Space Available here

பௌத்த பீடங்களின் நெஞ்சழுத்தம் ..


'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிகள் இடம்கொடுப்பதில்லை' என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது. அதுபோல சில சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. உயர்வாக மதிக்கப்படுகின்ற பௌத்த பீடங்கள், மகாநாயக்கர்கள் அரசியல் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்குள் வெளியிட்டுள்ள இரு அறிக்கைகள் இந்தப் பழமொழியை ஞாபகப்படுத்துகின்றன.


முன்னதாக, 'பொதுபலசேனாவின் ஞானசார தேரர் கூறும் விடயங்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை' என்று கூறியிருந்த பௌத்த பீடங்கள் இப்போது, 'புதிய அரசியலமைப்பு அவசியமில்லை' என்று கூறியிருக்கின்றன. இதில் முதலாவது அறிக்கை முஸ்லிம்களை இலக்காகக் கொண்டும் இரண்டாவது அறிக்கை தமிழர்களுக்கு பாதகமானதாகவும் வெளியிடப்பட்டுள்ளமை உன்னிப்பாக நோக்குகின்றவர்களுக்கு புரியும்.இரண்டாவது அறிக்கையால் அரசாங்கம் அதிர்ந்துபோயிருக்கின்றது.ஜனாதிபதி உடனடியாக மகாநாயக்கர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.


இவ்வாறான பாரதூரமான கருத்துக்கள் சிங்கள பௌத்த சக்திகளின் உள்மனக் கிடக்கை அல்லது மனப்பாங்கு எவ்வாறு இருக்கின்றது என்பதை காட்டி நிற்கின்றன. அதுமட்டுமன்றி, முப்பது வருட யுத்தம் அதற்கு முன்-பின்னரான அழிவுகள் எதிலிருந்தும் சில சிங்கள தேசியவாதிகளும் மதம் சார்ந்தோரும் சரியாக பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியையும் இவ்வாறான செயற்பாடுகள் பறைசாற்றி நிற்கின்றன.


நிலைமாறுகால முயற்சி

இலங்கை அரசியலில் இது நிலைமாறுகாலமாகும். அரசியலில் மட்டுமன்றி மக்களுக்கு நியாயம் வழங்குவதிலும் உலக நிலைமாறுகால நியதிகள் பின்பற்றப்பட வேண்டிய தருணமாக இது காணப்படுகின்றது. அந்தப் பொறுப்பு ஒரு நிலைமாறுகால அரசாங்கத்தின் மீது இருக்கின்றது. அதுமட்டுமன்றி இன்றைய நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களின் சில வாக்குறுதிகளை வழங்கியே கடந்த தேர்தலில் மக்கள் ஆணையை கேட்டது. 


இனவாதத்தை ஒழித்தல், இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குதல், அரசியலமைப்பை மீளாய்வு செய்தல் என்பன அவற்றுள் முக்கியமானவையாகும். இந்த வாக்குறுதியை நம்பியே தமிழர்களும் முஸ்லிம்களும் நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.

இதே வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர்கள் வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. சிறுபான்மையினர் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இலட்சக் கணக்கான வாக்குகளை மைத்திரிக்கு வழங்கினார்கள். அரசாங்கம் இவ்வாறான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை அறியாமல் அவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள். எனவே, பொது அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டே சிங்கள மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்றால், அவற்றை மேற்கொள்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்;.


ஆனால், இந்தப் பின்னணியோடு நல்லாட்சி நிறுவப்பட்ட பின்னர் இனவாதம் மீண்டும் முன்கையெடுத்தது. அது முஸ்லிம்கள் மீது சீறிப்பாய்கின்றது. மானிடவியல் பண்புகளையும் பௌத்தம் போதித்த நல்லொழுக்கங்களையும் மீறும் வகையில் ஒருசில காவியுடைதாரிகளும் கடும்போக்கு சக்திகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை அரசாங்கம் முறையாக கட்டுப்படுத்துவதற்கு தவறியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, இனவாதத்தை கட்டுப்படுத்தல் என்று அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதி இன்று கேள்விக் குறியாகி இருக்கின்றது.


மறுபுறத்தில், தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொண்டு, அதனை அடிப்படையாக வைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வுப் பொதியை வழங்க நல்லாட்சி அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்பிருந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருப்பினும் கூட்டு எதிர்க்கட்சி அதற்கு கடுமையான முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்றது. அதுபோதாது என்று இப்போது முக்கியமான பௌத்த பீடங்களே அரசியலமைப்பை திருத்த வேண்டாமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. ஆகவே தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்த முழு உலகுக்குமே வழங்கிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.


இலக்காகும் இரு இனங்கள்

இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம்களை மத ரீதியாக ஒடுக்கும் செயற்பாடுகள் கட்டுங்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இதற்கு முன்னர் நாட்டின் மூவின மக்களும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள், முஸ்லிம்களும் தமிழர்களும் இந்தநாட்டிற்கு செய்த தியாகம் என்ன ? இன நல்லிணக்கம் ஏன் அவசியமாகின்றது? என்பது பற்றியெல்லாம் அறிந்திருக்கின்ற உயர் பௌத்த பீடங்களும் மகாநாயக்க தேரர்களும் தமது நிலைப்பாட்டை அறிவித்து, இனவாதிகளை கட்டுப்படுத்த வேண்டுமென்று தமிழ், சிங்கள,முஸ்லிம் முற்போக்கு சக்திகள் எதிர்பார்த்திருந்தன.


அவ்வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகா சங்க சபை வெளியிட்ட அறிக்கை சிறுபான்மைச் சமூகங்களிடையே கடுமையான அதிர்;ச்சியை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், 'ஞானசார தேரரின் ஆவேசமிக்க நடத்தையையும் கோலத்தையும் கருத்துத் தெரிவிக்கும் பாணியையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறும் கருத்தை புறக்கணிக்க முடியாதுள்ளது' என்று தெரிவிக்கப்படடிருந்தது.


பொறுப்புவாய்ந்த மகா சங்க சபையினர் வெளியிட்ட இந்த அறிக்கை, பொதுபலசேனாவும் இன்னபிற சேனாக்களும் முன்வைக்கின்ற கருத்தியலை அங்கீகரிப்பதற்கு ஒப்பானது என்பதுடன், குறைந்தபட்சம் இனக் குரோதத்தை ஏற்படுத்த முனைவோர் சட்டப்படி தண்டிக்கபட வேண்டும் என்ற மிக முக்கியமான, மகா சங்கத்தினரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட கருத்யாவது அது தாங்கி வெளிவரவில்லை.

இந்த அறிக்கையானது, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல பௌத்த மதகுருவுமான தம்பர அமில தேரர், கல்வியியலாளரான கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன உள்ளடங்கலாக பல முற்போக்கு சிந்தனையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு நடந்த பிறகும், பௌத்த முப்பீடங்களால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை மேலும் கவலை அளிப்பதாகவும், சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த அச்சத்திற்கு அடிகோலுவதாகவும் அமைந்திருக்கின்றது எனலாம்.


புதிய அறிக்கை

மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர, ராமான்ய நிக்காய ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கண்டி அஸ்கிரிய பீடத்தில் கூடி இலங்கையின் நடப்பு விவகாரங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளனர். அதன்பிறகு அங்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அது ஜனாதிபதி உள்ளிட்ட அரச உயர்மட்டத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


தற்போதிருக்கின்ற அரசியலமைப்பில் பெரிய திருத்தங்களைச் செய்வதோ புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதோ அவசியமில்லை என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கின்ற சர்வதேச பிரகடனத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதையும் தாமதப்படுத்த வேண்டும் என்பது உள்ளடங்கலாக வேறு சில பரிந்துரைகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கண்டி, அஸ்கிரிய சிறிசந்திரானந்த மண்டபத்தில் நடந்த சந்திப்பிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதற்கு பின்னணியில் பல தரப்பினர் இருந்துள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனது பாரதூரத்தை அறியாமல் மேற்படி பீடங்கள் இதை வெளியிட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக, பாரதூரமான தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் நோக்கிலேயே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில் இதை காத்திரமான அறிக்கை என்றும் சொல்வார்கள்.


எதுஎப்படியோ, இது அரசாங்கத்தின் நகர்வுகளை பாதிக்கும் என்பதை உடனடியாக உணர்ந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட மகாநாயக்க தேரர்களை கடந்த வியாழக்கிழமை கண்டியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 'புதிய அரசியலமைப்பு தொடர்பான நகல்வரைவு தயாரிக்கப்பட்டால், அது தொடர்பில் மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தி, தங்களது ஆலோசனையை பெற்றுக் கொண்டே நடவடிக்கைகள் எடுப்பேன்' என்று இச்சந்திப்பில் ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றார்.


இலங்கையில் முன்வைக்கப்படவுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு அடிப்படையான ஏற்பாடாகவும் உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஆனால், இதற்கான பணிகள் நான்கு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதிய அரசியலமைப்பு பற்றி பிரஸ்தாபித்து வருகின்றது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், திடுதிடுப்பென, இப்போதுதான் தூக்கத்தில் இருந்து கண்விழித்ததைப் போல பௌத்த பீடங்கள் அறிக்கை விடுவதும் அரசியலமைப்பை திருத்த தேவையில்லை என்று கூறுவதும் ஒரு சாதாரண விடயமல்ல. உண்மையில் அவ்வாறான ஒன்று தேவையில்லை என்று உணர்ந்திருந்தால் பௌத்த தேரர்களும் மகாநாயக்கர்களும் அதனை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். சிறுபான்மை மக்களும் சிங்கள முற்போக்காளர்களும் இத்தனை நம்பிக்கைகளை வளர்த்திருக்க மாட்டார்கள். பத்தோடு பதினோராவது அரசாங்கம் என்றெண்ணி, தமது வேலையைப் பார்த்துவிட்டுப் போயிருப்பார்கள். 


அதைவிடுத்து, வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைக்கும் முயற்சிபோல அறிக்கை விட்டிருப்பது, பல கோணங்களில் சிந்தனையை கிளறி விட்டிருக்கின்றது.


மேலெழும் கேள்விகள்

இலங்கையில் உள்ள இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதம்சார் உயர்பீடங்களை விட ஒருபடி மேலே சென்று அதிகார தோரணையுடனும் உரிமையுடனும் மேற்படி பௌத்த பீடங்கள் நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதை ஒரு வகையில் பாராட்டலாம். என்றாலும், இனவாதம் பற்றி அறிக்கை விடுகின்ற அஸ்கிரிய பீடத்தின் மகா சங்க சபையினரும், அரசியலமைப்பை மாற்றத் தேவையில்லை எனக் கூறும் பௌத்த பீடங்களும் இதற்கு முன்னர் நாட்டில் பல சம்பவங்கள் இடம்பெற்ற தருணங்களில் ஏன் இவ்வாறான ஒரு அக்கறையை வெளிக்காட்டவில்லை என்ற கேள்வி எழுகின்றது.


இலங்கையில் கொடூர யுத்தம் வியாபித்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மரணத் தாக்குதல்களை ஓரளவுக்கு கண்டித்தாலும், இறுதிக்கட்ட யுத்தத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டமை உள்ளடங்கலாக அவர்கள் சந்தித்த இழப்புக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ஏன் பௌத்த பீடங்கள் அறிக்கை விடவில்லை?

அதேபோன்று, அளுத்கமை, பேருவளை கலவரத்தின் போதும் இனவாத சக்திகள் பௌத்த தர்மங்களை எல்லாம் மீறி போதி தர்மனின் போதனைகளுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் மீது இனத்துவ அடக்குமுறையை பிரயோகித்த சந்தர்ப்பத்தில் பௌத்த பீடங்கள் ஏன் தமது கண்டனங்களை வெளியிடவில்லை? மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரமும் மர்ம கொலைகளும் இடம்பெற்ற வேளையில் ஏன் இவ்வாறான ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கவில்லை?

இப்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்திற்கான அடிப்படை ஏற்பாடு உள்ளிட்ட பல புதிய மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற உத்தேச அரசியலமைப்பு தேவையில்லை என்று கூறும் பௌத்த பீடங்கள், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மிகப் பாதகமான 18ஆவது திருத்தத்திற்கு எதிராக ஏன் போர்க்கொடி தூக்கவில்லை ? இப்படியாக.... மனித குலத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டிராத பௌத்த நிக்காயாக்கள், சமூகங்களுக்கு நன்மையளிக்கும் என பரவலாக கருதப்படுகின்ற அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறவே தேவையில்லை எனக் கூறுவது மன வருத்தத்திற்குரியது.


இதேவகையான கேள்வியை அமைச்சரான ராஜித சேனாரத்னவும் எழுப்பியிருக்கின்றார். 'இப்போதிருக்கின்ற அரசியலமைப்பை ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் இன்று அதனை மாற்றக் கூடாது எனக் கூறுகின்றனர்' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, 'புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது வெளியிடுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு அல்ல' என்ற கருத்தையும் உறுதிபட தெரிவித்திருக்கின்றார்.


இதிலிருந்து சில விடயங்கள் உய்த்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதாவது, இலங்கையில் இனவாதத்திற்குப் பின்னால் போகின்ற சிங்கள மக்கள் மிகச் சொற்ப அளவானோரே ஆவர். மற்றெல்லா சிங்கள மக்களும் முற்போக்கு சக்திகளும் இனவாதத்தையும் குறுகிய மனப்பாங்கையும் கடுமையாக வெறுக்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது. உண்மையாகச் சொன்னால், சில சிங்கள முற்போக்காளர்கள் முஸ்லிம், தமிழ் சமூகங்களில் அதே நிலையில் உள்ள ஆளுமைகளை விட துணிச்சலான, காத்திரமான கருத்துக்களை வெளியிடுகின்றனர் எனலாம்.

எதுஎவ்வாறிருப்பினும், இனவாத சக்திகளுக்கும் குறுகிய சிந்தனையாளர்களுக்கும் பின்னால் அரசியல் பலமும் வேறு பின்புலங்களும்; இருப்பதாகவே இவ்வளவு காலமும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் பௌத்த பீடங்கள் வெளியிட்டுள்ள மிகப் பிந்திய இரு அறிக்கைகளும் வேறு விதமான சந்தேகத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாதுள்ளது.

யதார்த்தத்தை புரிதல்

நாம் என்னதான் சொன்னாலும் இலங்கை என்பது சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட, பௌத்த மேதாவித்தனமுள்ள ஒரு நாடு என்ற யதார்த்தத்தை மறந்துவிடக்கூடாது. அந்த வகையில், ஆட்சிச் செயன்முறையிலும் நடப்பு விவகாரங்களிலும் சிங்கள தேசியம், பௌத்த உயர்பீடங்கள், கடும்போக்கு சிந்தனையாளர்கள் அக்கறை செலுத்துவது அல்லது தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாத விடயமாகும். பௌத்த பீடங்களை முற்றாக புறக்கணித்துவிட்டு நிலையான ஒரு ஆட்சியை யாரும் நடாத்திச் செல்லவும் இயலாது.


ஆனால், பௌத்த பீடங்களில் இருந்தோ கடும்போக்கு இயக்கங்களிடமிருந்தோ விடுக்கப்படும் முறையற்ற அழுத்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் தலைசாய்க்கக் கூடாது. அத்துடன், அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்பதும் அதனூடான தீர்வு வழங்கும் திட்டம் என்பதும் நடப்பு அரசாங்கத்தின் அடிப்படை விஞ்ஞாபனமாகும். எனவே, அதிலிருந்து அரசாங்கம் நியாயமற்ற விதத்தில் பின்வாங்குமாக இருந்தால், எதிர்காலத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக கடும்போக்காளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்குக் கூட 'ஆமாப் போட' வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்களை புறக்கணிக்க முடியாது என்று கருத்து வெளியிட்டதன் மூலம் பௌத்த பீடமொன்றினால் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கருத்தியல் பின்னுறுதிப்படுத்தப்படுமாக இருந்தால், சிறுபான்மையினங்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்காக அதிகார பகிர்வுசார் உள்ளடக்கங்கள் மற்றும் பல மாற்றங்களைக் கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு பௌத்த பீடங்கள் பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிடுமாக இருந்தால், சம்பந்தப்பட்டோரிடையே பாகுபாடுடனான மனோநிலை எந்தளவுக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்வது கடினமான காரியமன்று.

அதற்காக பௌத்த பீடங்களை தாறுமாறாக விமர்சிப்பதோ உதாசீனம் செய்வதோ அரசாங்கத்திற்குப் பொருத்தமல்ல. மாறாக, நாட்டில் இடம்பெறுகின்ற இனவாதத்தில் உட்புதைந்துள்ள அபாயம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டியதன் நியாயம் என்பன தொடர்பில் பௌத்த பீடங்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதேபோன்று பௌத்த பீடங்களாலோ, சிங்கள அமைப்புக்களாலோ முன்வைக்கப்படும் செல்வாக்குச் செலுத்தும் தோரணையிலான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் திடுதிடுப்பென தீர்மானம் எடுக்காமல் சிங்கள முற்போக்கு சக்திகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் தரப்பினரோடு கலந்துரையாடியே தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு வரம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அரசாங்கம், அந்த மக்களின் சாபத்திற்கு உள்ளாகிவிடக் கூடாது.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 09.07.2017)

 

பௌத்த பீடங்களின் நெஞ்சழுத்தம் .. பௌத்த பீடங்களின் நெஞ்சழுத்தம் .. Reviewed by Madawala News on 7/09/2017 12:48:00 PM Rating: 5