Kidny

Kidny

சி.ஐ.ஏ - ஐ.எஸ்.ஐ. கூட்டணி


பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. மூலம் கொரில்லாப் பயிற்சி, நகரங்களைத் தாக்கி சீர்குலைத்தல், ரகசியத் தகவல் தொடர்பு முறைகள், சர்வதேச வங்கிகளில் இரகசியமாகப் பணப் பரிமாற்றம் செய்வது ஆகிய அனைத்தும் முஜாகிதீன்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.


சிறப்பு பயிற்சிக்காக இந்த முஜாகிதீன்களில் ஒரு பிரிவினர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிகராகுவாவின் சாண்டினிஸ்டா ஆட்சியை ஒழிப்பதற்கு “காண்ட்ராஸ்” என்ற கிரிமினல் கொலைப்படையை சி.ஐ.ஏ. எங்கு பயிற்றுவித்ததோ, அதே பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் இவர்களும் பயிற்றுவிக்கப்பட்டனர். ஆப்கானியர்கள், அராபியர்கள், ஜோர்டானியர்கள், எகிப்தியர்கள் மட்டுமின்றி கருப்பின முசுலீம்கள் பலரும் வர்ஜீனியாவில் பயிறுவிக்கப்பட்டதை ஜான்கோலி என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் தனது நூலில் (Unholy Wars : Afganistan, America and International Terrorism) குறிப்பிடுகிறார்.

ஆண்டுக்கு 65,000 டன் நவீன ஆயுத தளவாடங்களையும், வெடி மருந்துகளையும் ஆப்கானில் கொண்டு வந்து இறக்கியது சி.ஐ.ஏ.


ஜனநாயக உனர்வுக்கும் தேசிய உணர்வுக்கும் எதிராக மதராஸாக்களில் அளிக்கப்பட்ட இசுலாமிய சர்வதேசியக் கல்வி, சதிகாரக் கிரிமினல்களை உருவாக்குவதற்கென்றே சி.ஐ.ஏ நடத்திய பள்ளியில் போர்ப்பயிற்சி, இவற்றுடன் போதை மருந்து கடத்துவதற்கும் முஜாகிதீன்களை பயிறுவித்தார்கள் சி.ஐ.ஏ – ஐ.எஸ்.எஸ். உளவாளிகள்.


1979 – இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கஞ்சா உற்பத்தி இரண்டே ஆண்டுகளில் பல்கிப் பெருகியது. புனிதப் போரின் செலவுகளுக்காக கஞ்சா பயிரிடுமாறு விவசாயிகளுக்கு உத்தரவிட்டார்கள் முஜாகிதீன்கள்.

ஐ.எஸ்.ஐ. யின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான ஹெராயின் தயாரிப்புக் கூடங்கள் உருவாயின. 1981இலேயே அமெரிக்காவின் 60 சதவீதம் போதை மருந்துத் தேவையை ஆப்கான் நிறைவு செய்தது. 1985இல் பாகிஸ்தானில் 12 இலட்சம் ஹெராயின் அடிமைகள் உருவானார்கள். 


1989 -இல் ரசிய இராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால் சி.ஐ.ஏ. உருவாக்கிய இசுலாமிய சர்வதேசியமும், சர்வதேச போதை மருந்து வியாபாரமும் ஆப்கானை விட்டு வெளியேறவில்லை.

“இதற்காக நாம் வருந்தத் தேவையில்லை. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு துணை விளைவு உண்டு. போதை மருந்து ஒரு துணை விளைவு. அவ்வளவுதான். நமது முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது. ரசியர்கள் வெளியேறிவிட்டார்கள்” என்று போதை மருந்து வியாபாரத்தை நியாயப்படுத்தினார் அன்றைய சி.ஜ.ஏ. இயக்குனர் சார்லஸ் கோகன்.


“உலக வரலாற்றிற்கு எது முக்கியமானது? தாலிபானா, அல்லது சோவியத் சாம்ராச்சியத்தின் வீழ்ச்சியா? சில கிறுக்குப் பிடித்த முசுலீம்களா அல்லது மத்திய கிழக்கு ஜரோப்பாவின் விடுதலையா?” என இன்றைக்கும் கேள்வி எழுப்புகிறார் 1980இல் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரெசென்ஸ்கி.


உண்மையில் இசுலாமிய சர்வதேசியமும், போதைமருந்து வியாபாரமும் விரும்பத்தகாத துணை விளைவுகள் அல்ல, தனது உலக மேலாதிக்க போர்த்தந்திரத்திற்குப் பயன்படும் வகையில் அமெரிக்காவே உருவாக்கிய செயல் தந்திரங்கள் தான் அவை.


போலி கம்யூனிச ஆட்சி வீழ்ந்து பனிப் போர் முடிந்து விட்டதனால் அமெரிக்காவின் உலக மேலாதிக்க திட்டமும் முடிந்துவிடவில்லை. எதிர்காலத்தில் தனக்குச் சவால் விடக்கூடிய முதலாளித்துவ வல்லரசாக வளர்ந்துவிடக்கூடாது என்றால் சோவியத் ஒன்றியத்தை உடைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அடுத்த இலக்கு.


ஆப்கானில் ரசிய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்திலேயே இந்த ‘எதிர்த் தாக்குதலை’ அமெரிக்கா தொடங்கிவிட்டது. மத்திய ஆசிய நாடுகளுக்குள் ஜ.எஸ்.ஜ. உளவாளிகளை அனுப்பி அங்கே முசுலீம் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கும் பணியை 1980 இலேயே தொடங்கி விட்டார் பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக்.

சி.ஐ.ஏ - ஐ.எஸ்.ஐ. கூட்டணி சி.ஐ.ஏ - ஐ.எஸ்.ஐ. கூட்டணி Reviewed by Madawala News on 7/17/2017 11:33:00 PM Rating: 5