Ad Space Available here

முஸ்லிம் கூட்டமைப்பின்இலட்சணங்கள் ?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அதன் செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி.ஹசனலி முரண்பட்டு வெளியேறியதை, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறியதற்கு உவமித்து ஒரு தடவை எழுதியிருந்தோம். ஆனால், மைத்திரியை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் கொண்ட கூட்டாட்சி உருவாக்கப்பட்ட போதிலும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தையே அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 


அதுபோலவே, ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் அணியினரின் பிளவுக்கு பின்னர் உருவாக்கப்பட இருக்கின்ற முஸ்லிம் கூட்டமைப்பும், நல்லாட்சி போல ஆகிவிடக் கூடாது என்பதால்; சில விடயங்கள் குறித்து இங்கு பேச வேண்டியிருக்கின்றது.


நாட்டில் போருக்குப் பின்னர் இலங்கையில் வியாபித்திருக்கின்ற இனவாதத்தின் ஆதிக்கம், இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு, சிங்கள கடும்போக்கு சக்திகளின் ஒன்றிணைவு, சியோனிச மற்றும் பிராந்திய மதவாத சக்திகளின் ஊடுருவல், முஸ்லிம்களின் சிவில் நிர்வாகப் பிரச்சினைகள் என்று எந்த விவகாரத்திற்கும் தீர்வு காண முடியாத ஒரு கையறுநிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் கடந்த சில மாதங்களாக முஸ்லிம் கூட்டமைப்பு பற்றி கடுமையாக பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பெருமளவுக்கு ஆதரவான கருத்துக்களும் சிறிதளவு எதிர்க் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.


முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு

முஸ்லிம்கள் இப்போது எதிர்கொண்டு அநேக பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தனித்தனி முகாம்களில் இருந்து அரசியல் செய்வதாகும். இதனால் பதவி உள்ளிட்ட ஆசைகளை காட்டியும் வேறு பிடிகளை வைத்துக் கொண்டும் ஒரு தரப்பை மற்றைய முஸ்லிம் தரப்புக்கு எதிராக பயன்படுத்துவதற்கு உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் முண்டியடித்துக் கொண்டு திரைக்குப் பின்னால் செயற்படுகின்றன.


எனவே, முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் நலனை முன்னிறுத்தி ஓரணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உருவானால் அது இஸ்லாமிய கூட்டமைப்பாக இருக்காவிட்டாலும், முஸ்லிம்களின் அடையாள அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பதாக இருக்க வேண்டும். 


அப்படியாயின் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு மிக சாதகமாகன களம் வடக்கு, கிழக்கு மாகாணங்களே ஆகும்.

முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும், அதற்கான காத்திரமான முன்முயற்சிகள் முன்னர் மேற்கொள்ளப்படவில்லை. களத்தில் இறங்கி பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினையும் இருந்தது. இன்னுமொரு விதத்தில் கூறினால் அதற்கான காலம் கனிந்திருக்கவில்லை என்றும் சொல்ல முடியும். ஆனால் இப்போது அதற்கு சாதகமான களநிலைமைகள் உருவாகியுள்ளன.


தாமும் தமது மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாக கூறி, அக்கட்சியின் அப்போதைய செயலாளர் நாயகம் ஹசனலி, அப்போதைய தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச சபைகளி;ன முன்னால் தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் முரண்பட்டு வெளியேறிய போது, இக்குழுவினரின் கோஷம் மக்களிடத்தில் எடுபடாது என்றும், ஆட்டம் ஓய்ந்துபோகும் என்றும் நினைத்தவர்களே அதிகம். ஹசனலி, பசீர் அணியினர் ஒரு தனிக்கட்சியாக அல்லது முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் வினையூக்கிகளாக இருப்பார்கள் என்று நினைத்தவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், காலம் வேறு விதி செய்தது. இந்த அணியினரின் பிரசாரங்களே இன்று முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.


பேச வேண்டியவை

இப்போது இரண்டு விதமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, மு.கா.வின் ஹசனலி மற்றும் பசீர் அணியினர் தனியொரு அணியாக அல்லது கட்சியாக உருவெடுக்க வேண்டிய தேவைப்பாடு பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது. இரண்டாவதாக, பல முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க இந்த அணி களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.


உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ள சூழலில் இந்தப் பணிகள் சற்று உத்வேகம் பெற்றிருப்பதாக சொல்ல முடியும் என்றாலும், முஸ்லிம் கூட்டமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பது மட்டுமன்றி, அதற்கு எல்லாத் தரப்பும் எல்லா அடிப்படையிலும் இன்னும் உடன்படவும் இல்லை. சிலர் சொல்வது போலவோ அறிக்கை விடுவது போலவோ 'எல்லாம் நூறு வீதம் சரி' என்ற கட்டம் இன்னும் வரவில்லை என்பது இவ்விடத்தில் கவனிப்பிற்குரியது.


இந்த சந்தர்ப்பத்தில், அதாவது முஸ்லிம் கூட்டமைப்பு என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் காலசூழலில் அக் கூட்டமைப்பின் நோக்கம், அது எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு இருக்கக் கூடாது என்பது பற்றியும் அவ்வாறான கூட்டமைப்பிடம் இருந்து மக்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்பது பற்றியும் பொதுத் தளத்தில் பேச வேண்டியிருக்கின்றது.


ஏனெனில், இப்போதிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளை சரியாக கையாள்வதில்லை என்றும், பிரதான அரசியல்வாதிகள் சமூகத்தின் பிரச்சினைகளை விட தமது சொந்த நலன்களுக்கே முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றனர் என்றும் கூறியே குறிப்பாக ஹசனலி போன்றோர் மு.கா.வில் இருந்து வெளியேறினர். இன்று அந்த அணியினரே முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, உத்தேச முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, மீண்டும் புதிய குவளையில் பழைய வைனாக இருக்கக் கூடாது என்பதற்காக, சில விடயங்களைப் பேசியேயாக வேண்டியிருக்கின்றது.

இப்போதிருக்கின்ற அரசியல் களநிலவரப்படி, ஹசனலி மற்றும் பசீர் அணியினர் உள்ளடங்கலாக எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் கூட்டமைப்பு ஒரு சிறந்த தெரிவாக அமையும். எல்லோரும் ஒன்றுசேர வேண்டுமென சமூகம் நீண்டகாலமாக அவாவி நிற்கின்ற காரணத்தால் இக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் ரீதியாகவும், மக்கள் ஆதரவின் அடிப்படையிலும் வெற்றி பெறும் என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், தமிழர் அரசியலில் நடந்தது மாதிரி இக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாதோர், மக்களால் புறக்கணிக்கப்படவும் சாத்தியமிருக்கின்றது.


அந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி அணியினர் ஏனைய முஸ்லிம் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் முதலாம் கட்ட சந்திப்புக்கள் முடிவடைந்து, அடுத்த கட்ட விரிவான சந்திப்புக்கள் ஆரம்பமாகி இருக்கின்றன. இன்னுமொரு முஸ்லிம் கட்சியும் வேறுசில தனிப்பட்ட அரசியல்வாதிகளும் இக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அறியக் கிடைக்கின்றது.


விடிவுக்கான கட்டமைப்பு

முஸ்லிம் சமூகம் சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமாயின், இனப்பிரச்சினை தீர்விலும் ஏனைய விடயங்களிலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்த வேண்டுமாயின், முஸ்லிம்களிடையே வியாபித்துள்ள ஏமாற்று அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டுமாயின் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒரு கூட்டமைப்பாக உருவாக வேண்டும் என்ற விடயத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக உடன்பாடு கண்டிருக்கின்றார்கள் என்பதே, கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியின் முதல் வெற்றி என்றே கூற வேண்டும்.


ஆனால், இக் கூட்டமைப்பின் கட்டமைப்பு எவ்வாறிருக்கும்? அதன் தலைமைத்துவ சபை எவ்வாறு அமையும்? அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படும்? தொழிற்பாட்டு எல்லைகள் என்ன? குறுங்கால மற்றும் கடைசி இலக்குகள் என்ன? கூட்டமைப்பின் யாப்பு வரைபு எவ்வாறிருக்கும்? இதன் பெயரென்ன? பொதுச் சின்னம் என்ன? என இன்னும் ஆயிரத்தெட்டு விடயங்கள் குறித்து பேசி செயற்பாட்டு ரீதியான உடன்பாடு காண வேண்டியிருக்கின்றது. அதற்கான பேச்சுகளே ஆரம்பமாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

எடுத்த எடுப்பில் ஒரு சந்திப்புடனேயே ஒரு கூட்டமைப்பை அமைத்துவிட முடியாது. ஏனெனில், இதில் இணைந்து கொள்ள இருப்பவர்கள் எல்லோருமே வேறு வேறு தளங்களில் இருந்து அரசியல் செய்தவர்கள். 


எனவே, தமது கட்சியின் வளர்ச்சி, எதிர்காலம், மக்கள் செல்வாக்கு என்பவை பற்றி சிந்திக்க வேண்டியது ஒருபுறமிருக்க, வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரம், தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு, தென்கிழக்கு அலகு அல்லது மாகாணம் உள்ளிட்ட மக்களின் அபிலாஷை தொடர்பான இவர்களது நிலைப்பாடுகளும் வேறுபட்டவையாக உள்ளன. அவற்றை ஒரு மையப்புள்ளியில் குவியச் செய்வதற்கு விட்டுக்கொடுப்புடன் இன்னும் பல தடவை பேச வேண்டியிருக்கின்றது.


கட்சிகளின் சமரசம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்விடயத்தில் நிறைய விடயங்களைச் சிந்திப்பதாக தெரிகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அக்கட்சித் தலைவர் றிசாட் பதியுதீனின் செயற்பாடுகளை பிரதான காரணமாகக் கொண்டு அக்கட்சி வளர்ச்சியடைந்திருக்கின்றது. மாற்று முஸ்லிம் கட்சிகள் பலம் குறைந்துள்ள இன்றைய சூழலில் இந்த கூட்டமைப்பிற்குள் சென்றால் தமது கட்சியின் தனி அடையாளம் மறைந்துவிடுமோ என்று றிசாட் எண்ணக் கூடும்.


அதேபோன்று, மக்கள் காங்கிரஸ் கட்சி வளர்ந்திருந்தாலும் அக்கட்சியில் இருக்கின்ற ஓரிருவர் இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டவே விரும்புவதாக தெரிகின்றது. அடுத்த தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிட்டால் தமக்கு கிழக்கில் பெரும் பதவிகள் கிடைக்கும் என்று கட்சிக்குள் இருக்கின்ற சிலர் கணக்குப் போட்டு வைத்திருக்கின்றார்கள். இவ்வாறான பிராந்திய அரசியல்வாதிகள் முஸ்லிம் கூட்டமைப்பில் அ.இ.ம.கா. இணைந்து கொள்வதை பெரிதாக விரும்ப மாட்டார்கள் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றார்கள். எனவே, இது குறித்து றிசாட் சிந்தித்து, கட்சிக்குள் பேசி முடிவெடுக்க வேண்டியுள்ளது.


இதேவேளை, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா எப்போதுமே கூட்டமைப்புக்கு ஆதரவில்லாத கருத்தைக் கொண்டிருந்தார். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்று கூறிவந்தார். ஆனால் இப்போது காலத்தின் தேவையை அவர் உணர்ந்திருப்பதாகச் சொல்ல முடியும். இருப்பினும், மஹிந்தவை ஆதரிக்க அதாவுல்லா முடிவெடுத்திருந்த கால இடைவெளியில், தமது வாக்குகளில் ஒரு பகுதியை தம்வசப்படுத்திய மக்கள் காங்கிரஸூடன் இணைந்து, கூட்டமைப்பில் அங்கம் வகிக்க வேண்டுமென்றால் அவரும் சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டியுள்ளது.


புதிய அரசியல் கலாசாரத்திற்கு வித்திட்ட அதேநேரம் அரசியல் கட்சியாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாயின் அது வரவேற்கத்தக்கதாக அமையும். ஆனால், நடைமுறை அரசியலில் சில சாத்தியமற்ற சித்தாந்தங்கள் விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் ஹசனலி, பசீர் அணி குறைந்தளவான விட்டுக் கொடுப்புக்களையே செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இக்கூட்டமைப்பை ஒழுங்கான, நெறிபிறழாத, சமூக நோக்குக் கொண்ட அரசியல் இயக்கமாக உருவாக்கும் பெரும் பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது.


மு.கா.வின் நிலைப்பாடு

இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். முஸ்லிம் கூட்டமைப்பு என்றால் அதில் கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் உள்ளடங்கியிருத்தலே சிறப்பாகும். அதிலும் மிக முக்கியமாக வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் தாய்அரசியல் இயக்கமான மு.கா. அதில் அங்கம் வகிப்பது இன்றியமையாதது என்பதே கணிசமானோரின் நிலைப்பாடாக இருக்கின்றது. எனவே, முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு மு.கா. தலைவர் விரும்புகின்றாரா இல்லையா என்பதை பொருட்படுத்தாது, சமூக நோக்கில் அவரை இணைத்துக் கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களை விட வெளியில் உள்ள சிவில் அமைப்புக்கள் இப்பணியை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும்.


ஆனால் மறுபுறத்தில் மு.கா.வை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது, 'றவூப் ஹக்கீம் சரியில்லை, அவரது தலைமையின் கீழான மு.கா.வுக்குள் இருக்க முடியாது' என்று கருதியே மேற்படி கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவுள்ள அதாவுல்லா, றிசாட் பதியுதீன் மற்றும் அமீர்அலி, ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர். அத்துடன் மு.கா.வுடன் ந.தே.முன்னணியும் அதிருப்தியடைந்துள்ளது. எனவே, இவர்கள் எல்லோரும் ஹக்கீம் தரப்பை இணைக்க விரும்புவார்களா என்ற கேள்வி இருக்கின்றது.


அதேபோன்று, மு.கா.வை அழிப்பதற்கான ஒரு கூட்டாக இதனைப் பார்க்கும் ஹக்கீம், ஒருபோதும் முஸ்லிம் கூட்டமைப்பிற்கு ஆதரவான கருத்தை வெளியிடவில்லை. இருப்பினும் நேரடியாக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், அவ்வாறு அவரை நேரடியாக சென்று யாரும் சந்தித்திராத போதும், 'முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை' என்று அவர் கூறியுள்ளமை - விடுக்கப்படாத அழைப்புக்கான, அவரது பதிலாகவே தோன்றுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம் கூட்டமைப்பு அவசரமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், இக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்போர், அவர்களுடைய பண்புகள், இலட்சணங்கள், கூட்டமைப்பின் நோக்கம், பணியிலக்கு, வெளித் தொடர்புகள், குறுங்கால மற்றும் நீண்டகால இலக்குகள், கொள்கை, செயற்பாட்டு எல்லைகள், அதிகார வரம்புகள், கட்டமைப்பு, விதிமுறைகள் போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.


மேன்மையான இலக்கு அவசியம்

தற்போதிருக்கின்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ஒன்றிணைந்து குரல்கொடுப்பதற்காகவே முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகின்றது என்றால், அதன் இலட்சணங்கள் மேன்மையானவையாக இருக்க வேண்டும். குறிப்பாக, கூட்டமைப்பு உருவாவதற்கு ஹசனலி – பசீர் அணி ஒரு முக்கிய காரணம் எனலாம். அப்படியாயின் ஆரம்பத்தில் இருந்து இதற்காக களமிறங்கிய பிராந்திய அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


இப்போது கூட்டமைப்பு பக்கம் கொஞ்சம் அலையடிப்பதைக் கண்டு ஒரு சிலர் ஓடோடி வருவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான நபர்களுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டியதில்லை. தூய சிந்தனையோடு கட்சியை, கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால், வெளியில் இருக்கின்ற பொருத்தமில்லாத ஆட்களை எல்லாம் மீளவும் கூட்டமைப்பிற்குள் சேர்த்துக் கொண்டால், நல்லாட்சியில் மஹிந்த தரப்புக்கு இடமளித்து நல்லாட்சியை பழுதாக்கியது போலாகிவிடும்.


முஸ்லிம் கூட்டமைப்பில், எல்லா விவகாரங்களும் முக்கிய உறுப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் வெளிப்படையாக பேசப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இது பதவி, அதிகாரத்திற்கான அரசியல் கூட்டாக இருக்கக் கூடாது. கூட்டமைப்பின் குறுங்கால நோக்கம் அடுத்த தேர்தலாக இருக்கலாம். அரசியலில் காலூன்றுவதற்கு அது அவசியமானதும் கூட. ஆனால் முஸ்லிம் கூட்டமைப்பின் இறுதி இலக்கு உன்னதமானதாக இருக்க வேண்டும். மு.கா.வின் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக அணி திரள்வதோ அதுபோன்ற வேறு அற்ப நோக்கங்களோ இருக்கக் கூடாது.

குறிப்பாக முஸ்லிம்களை தனியொரு தேசியமாக மாற்றுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கை உறுதிப்படுத்தல், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தல், முஸ்லிம் தனிமாகாணத்திற்கு குரல்கொடுத்தல் என்பன பிரதான இலக்குகளாக இருக்க வேண்டும்.

அதேநேரம் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தல், இவ்விரு மாகாணங்களிலும் பறிகொடுக்கப்பட்ட காணிகளை மீட்டல், காணிப் பிரச்சினைகளை தீர்த்தல், வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றல், தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்தல் என்பன அன்றாட இலக்குகளாக அமைந்தால், மக்கள் மனங்களில் முஸ்லிம் கூட்டமைப்பு நிலைத்திருக்கும். அதுவே காலத்தின் தேவையுமாகும்.


ஆக, முஸ்லிம் கூட்டமைப்பு - முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பாக இருக்க வேண்டும். வேறொன்றுமில்லை!

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)

 

 

முஸ்லிம் கூட்டமைப்பின்இலட்சணங்கள் ? முஸ்லிம் கூட்டமைப்பின்இலட்சணங்கள் ? Reviewed by Madawala News on 7/16/2017 12:27:00 PM Rating: 5