tg travels

நடந்து முடிந்த ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள். ( இலங்கை Asian Games வரலாறு இணைப்பு)


- Razana Manaf -

22வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றான ஒடிசாவில் நடைபெற்று முடிந்திருக்கின்றன. 

ஜூலை 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டிகளில் ஆசிய கண்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 45 நாடுகளும் 655 வீர வீராங்கனைகளும் 42 போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆக கூடுதலாக இந்தியா 94 போட்டியாளர்களையும் பூட்டான் 1 போட்டியாளரையும் களமிறக்கியிருந்தது, சீனா சார்பாக 58 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர், இந்திய சீன எல்லையில் நிலவும் முறுகல் நிலை காரணமாக சீனா இந்த போட்டியை பகிஷ்கரிக்காமல் தனது நாட்டில் இருக்கும் இரண்டாம் நிலை வீர வீராங்கனைகளை இந்த போட்டியில் களமிறக்கியிருந்தது முக்கியமான விடயம். சீனாவின் இந்த நிலைப்பாடு புள்ளிப்பட்டியலில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர வழியேற்படுத்தி இருந்தது.

1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய தடகள போட்டிகளின் வரலாற்றில் நடைபெற்று முடிந்தது 22வது தொடர், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு தடவை ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. 44 வருடகால சாம்பியன்ஷிப் போட்டிகளின் வரலாற்றில் இம்முறை முதல் தடவையாக சீனாவின் சாதனையை தகர்த்து இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தட்டிச்சென்றிருக்கின்றது.

இலங்கை 1975ம் ஆண்டே முதன் முதலில் ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தது அந்த வருடம் தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்களுக்கான 4*100 ஓட்டத்தில் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்று அந்த வருடம் பதக்கப்பட்டியலில் 13வது இடத்தை பிடித்திருந்தது.

1979ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த போட்டிகளில் இலங்கைக்கு எதுவித பதக்கங்களும் கிடைத்திருக்கவில்லை.

1981ம் ஆண்டு மீண்டும் டோக்கியோவில் போட்டிகள் நடைபெற்றது, குவைட், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கூட பதக்கங்கள் பெற்றிருந்தது ஆனால்   இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை ஏமாற்றத்துடன் வீரர்கள் நாடு திரும்பினர்.

1983ம் ஆண்டில் போட்டிகள் அனைத்தும் குவைத் சிட்டியில் நடைபெற்றது இம்முறை பிலிப்பைன்ஸ், குவைத், பஹ்ரைன், லெபனான், ஜோர்தான், இந்தோனேசியா போன்ற நாடுகள் பதக்கங்களை வேட்டையாடின ஆனால் மூன்றாவது முறையும் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை.

1985ம் ஆண்டின் போட்டிகள் அனைத்தும் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடைபெற்றிருந்தது இதிலும் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை.

1987ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டிகளிலும் இலங்கைக்கு ஏமாற்றம்.

1989ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடைபெற்று முடிந்தது இலங்கைக்கு மற்றுமொரு தோல்வி கிடைத்தது.

1991ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது 16வருடங்கள் கழித்து இந்த வருடம் இலங்கையின் கனவொன்று நனவாகியது, ஈட்டி எறிதல் போட்டியில் விஜித பி அமரசேகர இலங்கைக்கு ஒரு வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தார் அத்துடன் இலங்கை பதக்கப்பட்டியலில் 15வது இடத்தை இந்தோனேசியா மற்றும் பஹ்ரைனுடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டது.

1993ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவில் நடைபெற்றது இம்முறை இலங்கை 2 வெள்ளிப்பதக்கம் 2 வெண்கலப்பதக்கம் என நான்கு பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 13வது இடத்தை பிடித்திருந்தது. வெள்ளிப்பதக்கங்கள் இரண்டையும் பெண்களுக்கான 200M ஓட்டத்தில் தமயந்தி தர்ஷாவும், பெண்களுக்கான 100M தடை தாண்டி ஓட்டத்தில் ஸ்ரியாணி குலவன்ச ஆகிய இருவரும் பெற்றுகொடுத்திருந்த அதே வேளை வெண்கல பதக்கங்களை பெண்களுக்கான 800M போட்டியில் ஸ்ரியாணி தம்மிக்க மெனிக்கே மற்றும் ஆண்களுக்கான 4*400 அணி ஆகியவர்கள் பெற்றுக்கொடுத்திருந்தனர். ஸ்ரியாணி குலவன்ச, தமயந்தி தர்ஷா ஆகிய இரு வீராங்கனைகளின் பெயரும் இலங்கை மக்களுக்கு நன்கு பரிச்சயப்பட இந்த போட்டிகளே காரணமாக அமைந்தன.

1995ம் ஆண்டுகள் போட்டிகள் அனைத்தும் மீண்டும் ஜகார்த்தாவில் நடைபெற்றது இந்த போட்டியில் இலங்கை 2 தங்கப்பதக்கங்களை  பெற்று வரலாறு படைத்தது இலங்கையின் கனவொன்று நனவாக 20வருடங்கள் எடுத்த முதல் சந்தர்ப்பமாகவும் அது அமைந்தது, பெண்களுக்கான 200M ஓட்டத்தில் சுசந்திகா ஜயசிங்கவும், 100M தடை தாண்டிய ஓட்டத்தில் ஸ்ரியாணி குலவன்சவும் அந்த தங்கப்பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்திருந்தது மகத்தான சந்தர்ப்பமாக அமைந்தது, அத்துடன் இலங்கை சுசந்திகா ஜயசிங்க என்ற பெயரையும் உச்சரிக்க தொடங்கி இருந்தது. இந்த வருடம் இலங்கை 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என ஐந்து பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்த அதேவேளை வரலாற்றில் முதல் தடவையாக பதக்கப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்திருந்தது.

இலங்கைக்கான வெள்ளிப்பதக்கத்தை பெண்களுக்கான 100M ஓட்டத்தில் சுசந்திகா ஜயசிங்கவும் வெண்கல பதக்கங்கள் இரண்டையும்   ஆண்களுக்கான 400M ஓட்டத்தில் சுகத் திலகரட்ன மற்றும் 4*400M ஓட்ட குழு ஆகியவர்கள் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

1998ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் ஜப்பானில் நடைபெற்றிருந்தது, இந்த போட்டிகளில் இலங்கை 2 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருந்தது, சுகத் திலகரட்ன, தமயந்தி தர்ஷா ஆகிய இருவரும் முறையே 400M ஓட்டத்தில் அந்த பதக்கத்தை பெற்றிருந்தனர். வெண்கல பதக்கங்களை ஸ்ரியாணி குலவன்ச மற்றும் 4*400M அஞ்சலோட்ட குழு ஆகியவர்கள் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

2000ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் மீண்டும் இந்தோனேசியாவில் நடைபெற்றிருந்தது, இந்த போட்டிகளில் இலங்கை 4 தங்கப்பதங்களையும் 1 வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்து 5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்திருந்தது, நான்கு தங்கப்பதக்கங்களையும் 4*400M அஞ்சலோட்ட குழு, பெண்களுக்கான 200M மற்றும் 400M ஓட்டத்தில் தமயந்தி தர்ஷா, 4*100M அஞ்சலோட்ட குழு ஆகியவர்கள் பெற்றுக்கொடுத்திருந்தார்கள், வெள்ளிப்பதக்கத்தை 400M தடை தாண்டுதல் போட்டியில் ஹரிஜன் ரத்னாயக்க பெற்றுக்கொடுத்திருந்தார்.

2002ம் ஆண்டு போட்டிகளை இலங்கை பொறுப்பெடுத்து நடத்தியிருந்தது இந்த போட்டிகள் கொழும்பில் இடம்பெற்றிருந்தது, இதில் இலங்கை 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்திருந்தது. தங்கப்பதக்கங்களை ஆண்களுக்கான 4*400M அஞ்சலோட்ட குழு, 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் சுசந்திகா ஜயசிங்க ஆகியோரும், வெள்ளிப்பதக்கத்தை 100M தடை தாண்டுதலில் ஸ்ரியாணி குலவன்சவும் வெண்கல பதக்கங்களை சுகத் திலகரட்ன மற்றும் பெண்களுக்கான  4*400M அஞ்சலோட்ட குழுவும் பெற்று கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2003ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் பிலிப்பைன்சில் நடந்து முடிந்தன, இந்த தொடரில் இலங்கை 1 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கலம் என் மூன்று பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 10வது இடத்தை பஹ்ரைனுடன் பகிர்ந்து கொண்டிருந்தது. இந்த போட்டியிலும் ஆண்களுக்கான 4*400அஞ்சலோட்ட குழு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தது, வெள்ளிப்பதக்கத்தை சுஜீவ நில்மினி ஜெயசேனவும் வெண்கல பதக்கத்தை மகேஷி டி சில்வாவும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

2005ம் ஆண்டு போட்டிகள் தென்கொரியாவில் நடைபெற்றிருந்தது, இந்த தொடரில் 2 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலம் என ஆறு பதக்கங்களை பெற்ற இலங்கை பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்திருந்தது.தங்கப்பதக்கங்களை மஞ்சுள குமார (உயரம் பாய்தல்) மற்றும், தமயந்தி தர்ஷா ஆகியவர்களும், வெள்ளிப்பதக்கத்தை ஆண்களுக்கான 4*400 அஞ்சலோட்ட குழு, மற்றும் பிரசன்ன சம்பத் அமரசேகர ஆகியோரும், வெண்கல பதக்கத்தை ரோஹான் பிரதீப் குமார மற்றும் மகேஷி டி சில்வா ஆகியோரும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

2007ம் ஆண்டு ஜோர்தானில் நடைபெற்ற போட்டிகளில் 3 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்ற இலங்கை பதக்கப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது, சுசந்திகா ஜயசிங்க இரண்டு தங்க பதக்கங்களையும், பிரசன்ன சம்பத் குமார ஒரு தங்கத்தையும் பெற்றுக்கொடுத்த  அதே நேரம், புத்திக்க சுஜானி மற்றும் ஆண்களுக்கான 4*400 அஞ்சலோட்ட குழு ஆகியன வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்தது, மேனகா விக்கிரமசிங்க, நதிகா லக்மாலி ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொடுத்தனர்.

2009ம் ஆண்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்றிருந்தது இந்த போட்டிகளில் இலங்கைக்கு ஏமாற்றமே எஞ்சியது, ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருந்தது, உயரம் பாய்தலில் மஞ்சுள குமார தங்க பதக்கத்தையும் 1500M ஓட்டத்தில் சமிந்த விஜயகோன் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

2011ம் ஆண்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று முடிந்தன இந்த போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை 1 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 15வது இடத்தை பிடித்தது. வெள்ளிப்பதக்கத்தை சந்திரிகா சுபாசினியும், வெண்கல பதக்கங்களை சமிந்த விஜயகோன், மற்றும் கிறிஸ்டின் மெரில் ஆகியோர் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

2013ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளிலும் இலங்கைக்கு 2 வெள்ளி 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்திருந்தது இதனால் பதக்கப்பட்டியலில் 14வது இடத்தை இலங்கை தக்க வைத்துக்கொண்டது, வெள்ளிப்பதக்கத்தை நதீகா லக்மாலியும், சசித் மதுரங்க ஆகியோரும்  வெண்கல பதக்கத்தை ஆண்களுக்கான 4*400M அஞ்சலோட்ட குழுவும் பெற்றுக்கொடுத்திருந்தது.

2015ம் ஆண்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்றிருந்தது இந்த தொடரில் இலங்கை 1 வெண்கல பதக்கத்தை மட்டும் பெற்று ஆறுதல் பட்டுகொண்டது இந்த பதக்கம் இலங்கையை பதக்கப்பட்டியலில் 16வது இடத்திற்கு கொண்டுவர வழியேற்படுத்தி இருந்தது. இலங்கையுடன் சேர்த்து கிர்கிஸ்தான், தாய்லாந்து ஆகியன 16வது இடத்தை பங்கு போட்டுக்கொண்டது.

2017ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெற்றிருந்தது இதில் இலங்கை 22 போட்டியாளர்களை களமிறக்கி இருந்தது, இந்த போட்டியில் 1 தங்கம் 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கங்களை பெற்ற இலங்கை பதக்கப்பட்டியலில் 9வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது, இலங்கைக்கான தங்கப்பதக்கத்தை பெண்களுக்கான  800M ஓட்ட போட்டியில் நிமாலி லியனாராய்ச்சி பெற்றுக்கொடுத்திருந்த அதே வேளை, வெள்ளிப்பதக்கங்களை ஆண்களுக்கான 4*400M அஞ்சலோட்ட குழு, மற்றும், பெண்களுக்கான 200M ஓட்டத்தில் ருமேசிக்கா ரத்னாயக்க, 800M ஓட்டத்தில் கயந்திகா அபேரத்ன, ஈட்டி எறிதல் போட்டியில் தில்ஹாணி கமகே ஆகியோர் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இலங்கை இம்முறை தரமான வீர வீராங்கனைகளையே போட்டியாளர்களாக அனுப்பியிருந்தும் கூட அவர்கள் அனைவரும் சோபிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறிய விளையாட்டு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் கடந்த ஜூன் மாதம் கிர்கிஸ்தானில் நடைபெற்ற தடகள போட்டிகளுக்கு இலங்கை 7 வீரர்களை அனுப்பியிருந்தது அவர்களை அனைவரும் தவறாமல் பதக்கங்களை பெற்றே நாடு திரும்பினார்கள், இம்முறை அவர்களுடன் சேர்த்து இன்னும் சில திறமையான வீரர்களை இலங்கை அனுப்பியிருந்தும் கூட அவர்களால் சோபிக்க முடியாமல் போனது வருத்தமான விடயம்.

இம்முறை நடந்து முடிந்த போட்டிகளின் பதக்கப்பட்டியல் நிலவரங்களை நோக்கினால் கலந்து கொண்ட 45 நாடுகளில் 23 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன அவைகளின் பட்டியல் கீழே.


நடந்து முடிந்த ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள். ( இலங்கை Asian Games வரலாறு இணைப்பு) நடந்து முடிந்த ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள். ( இலங்கை Asian Games வரலாறு இணைப்பு) Reviewed by Madawala News on 7/10/2017 12:41:00 PM Rating: 5