Ad Space Available here

முதுகெழும்புள்ள அரசாங்கம் ஒன்றில் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியம் !


இலங்கைக்கு எப்போது சுதந்திரம் கிடைத்ததோ அன்று இந்த நாட்டில் தொடங்கியதுதான் இந்த இனரீதியான பிரச்சினை.

அந்தவகையில் இந்த பிரச்சினையை தீர்க்கும் முகமாக டட்லி செல்வா ஒப்பந்தமென்றும், பண்டா செல்வா ஒப்பந்தமென்றும்,இந்தியா இலங்கை ஒப்பந்தமென்றும்,சந்திரிகா அம்மையாரின் தீர்வு திட்டங்கள் என்றும் காலத்துக்கு காலம் முன்வைக்கப்பட்டாலும், அத்தனை தீர்வு திட்டங்களின் ஊடாக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெறமுடியாமல் போனது.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை தவிர மற்ற ஒப்பந்தங்கள் எல்லாம் சிங்கள மக்களின் கடும்போக்குவாத குழுக்களின் எதிர்ப்பினால் இல்லாமல் செய்யப்பட்ட விடயத்தையும் நாம் அறிவோம்.இருந்தாலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.ஆர்.அவர்களின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட 13ம் அரசியல் திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகளுக்கு கூட,அதில் சொல்லப்பட்ட அதிகாரத்தில் சில முக்கிய அதிகாரங்களை வழங்குவதற்கு இன்றும் சிங்கள அரசாங்கங்கள் தயார் இல்லாத நிலையில்தான் உள்ளன.

இந்த நிலையில்தான் 1997ம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சியிலே ஒரு அரசியல் தீர்வு பொதியொன்று முன்வைக்கப்பட்டபோது ஐ.தே.கட்சியும், பௌத்தபிக்குகளும் தெறிவித்த கடும் எதிர்ப்பினால் அந்த தீர்வு பொதி கைவிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு 2000ம் ஆண்டு ஐ.தே.கட்சியின் சில கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு கொண்டுவரப்பட்ட அரசியல்யாப்பு திருத்தத்தை மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்து மூன்று மணித்தியாளங்கள் உரையாற்றியும் இருந்தார்.

அந்த தீர்மானத்தை தமிழ் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாது விட்டால், இதைவிட சிறந்த தீர்வு ஒன்றை இனிமேல் பெறப்போவதுமில்லை என்றும், இதனை தமிழ் தரப்பு தவறவிட்டால் பின்னாலில் வருத்தப்படவேண்டிவரும் என்றும் அஸ்ரப் அவர்கள் அன்று தமிழ் மக்களை நோக்கி ஆரூடமாக கூறியுமிருந்தார்.அந்த கூற்றை அன்று தமிழ் சமூக தலைவர்கள் கணக்கில் எடுக்காமல் புறக்கணித்து விட்டனர்.

அதன் பிறகு தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு கைசேதப்பட்டு நிற்கின்ற தமிழ் சமூகத்துக்கு மேற்குலக நாடுகளின் பங்களிப்புடன் ஒரு தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டிய கட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனலாம்.

இந்த நிலையில் பலம்வாய்ந்த நிலையிலிருந்த மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஐ.தே.கட்சியும், அதனோடு சேர்ந்த மைத்திரி தலைமையிலான கூட்டுக் கட்சியும் தமிழ் மக்களின் மத்தியில் பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது.

ஆட்சியை கைப்பற்றிக் கொண்ட நல்லரசாங்கம் மேற்குலகின் கிடுக்குப்பிடிக்குள் மாட்டிக்கொண்டதுமல்லாமல், தமிழர்களுடைய பிரச்சினைக்கும் ஒரு தீர்வை வைத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டு நிற்கிறது.இதனை அறிந்த சிங்கள கடும்போக்குவாதிகளும், மகா சங்கத்தினரும் இந்த தீர்வு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் சிங்கள மக்களின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்ற நிலையிலும், அடுத்த தேர்தலை சந்திக்கவேண்டிய நிலையிலும் இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை கொண்டுவருமா?என்ற சந்தேகத்தை எழுப்பி நிற்கின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பாத தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தனது காலம் முடியும் வரைக்கும் பிரச்சினைகளை இழுத்தடித்துவிட்டு,தான் மரியாதையோடும் சிங்கள மக்கள் வாழ்நாள் பூராகவும் தன்னை விமர்சிக்க இடம் வைக்காமலும் தனது பதவிக்காலத்தை அனுபவித்துவிட்டு விளகிச்சென்று விடவேண்டும் என்ற காரணத்தினால்தான், காலத்தை கடத்திக்கொண்டு வருகின்றார் என்பதைத்தான் நாம் அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

அதே நேரம் ஐ.நா சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தனக்கு காலஅவகாசம் தேவையென்றும், இரண்டு வருடங்கள் தவணை வழங்கும்படியும் கேட்டுப்பெற்றதற்கும் இதுவே காரணமாகவும் இருக்கலாம்,தனது காலம் முடிந்து தான் ஓய்வு பெற்றுச்சென்றவுடன் எது நடந்தாலும் தனக்கு பிரச்சினை இல்லை என்ற நினைப்பே மைத்திரி அவர்களின் என்னக்கருவாக உள்ளது என்பதுதான் அவருடைய இந்த செயல்பாடுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன என்பதே உண்மையாகும்.

இந்த விடயங்களை தமிழ் தலைவர்கள் அறிந்தார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் தீர்வு என்பது எட்டாக்கனி என்பது மட்டும் இவர்களுடைய செயல்பாடுகளினூடாக விளங்கக்கூடியதாக உள்ளது.

2000ம் ஆண்டு ஐ.தே.கட்சி, முஸ்லிம் கட்சிகளின் சம்மதத்தோடு கொண்டுவரப்பட்ட ஓரளவுதானும் கூடுதல் அதிகாரத்தைக்கொண்ட சந்திரிக்கா அம்மையாரின் தீர்வு பொதியை தமிழ் தலைவர்களும் அன்று ஏற்றிருந்தால், இந்த நேரம் ஓரளவுக்காகவேணும் நிம்மதி கிடைத்திருக்கும்,ஆனால் அதைவிட கூடுதலான அதிகாரத்தை "சேற்றில் நாட்டிய கம்புபோல்" உள்ள இந்த நல்லரசாங்கம் பெற்றுத்தறுமா என்பது கேள்விக்குறிதான்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கட்சியினால் நிறுத்தப்படுவோமா என்ற சந்தேகத்தில் மாட்டிக்கொண்டுள்ள பிரதமர் ரணில் அவர்களினாலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பாத ஜனாதிபதி மைத்திரி அவர்களினாலும் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

ஆகவே,இனப்பிரச்சினை தீர்வு என்பது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணல் நீரின் நிலைதான் என்பதை நாம் புரிந்து கொண்டால் சரிதான்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை. 

முதுகெழும்புள்ள அரசாங்கம் ஒன்றில் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியம் ! முதுகெழும்புள்ள அரசாங்கம் ஒன்றில் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியம் ! Reviewed by Madawala News on 7/07/2017 01:47:00 PM Rating: 5