Yahya

கனவு நிலையில் இருந்து நனவு நிலை நோக்கி நகர்ந்துள்ள லோலெவல் வீதி அபிவிருத்தி


அவிசாலை நோக்கி செல்லும் பழைய வீதியான லேலெவல் வீதி என அழைக்கப்படும் வீதியின் அபிவிருத்தி என்பது ஒரு காலத்தில் வெறும் கனவாகவே இருந்தது. அது இப்போது நனவாக மாறியுள்ளது என்று கூறினார் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார்.


லோலெவல் வீதி அபிவிருத்தி காரணமாக இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு ஒன்பதாவது கட்டமாக நட்டஈடும் வழங்கும் நிகழ்வு கொலன்னாவை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே மரிக்கார் இவ்வாறு சுறினார். இந்நிகழ்வில் இழப்புக்களைச் சந்தித்த 150 பேருக்கு 183 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விஷேட திட்டப் பணிப்பாளர் மங்கள சேனாரத்ன காணிப் பணிப்பாளர் டி.எம்.தயாரத்ன ஆகியோரும்; 


இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மரிக்கார் அங்கு தொடர்ந்து பேசும் போது..


கடந்த தேர்தல் காலததின் போது எமது தொகுதியில் செய்யப்பட வேண்டிய இரண்டு முக்கிய திட்டங்கள் பற்றி தகவல் தருமாறு பிரதமர் எம்மை கேட்டுக் கொண்டார். அப்போது நாம் சமர்ப்பித்த ஒரு யோசனைதான் இந்த லோலெவல் வீதியை நான்கு நிரல்கள் கொண்ட ஒரு வீதியாக விருத்தி செய்து தர வேண்டும் என்பது. கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை வசதிகள் இல்லாமையே ஒரு பிரதான பிரச்சினையாகக் காணப்பட்டது. கொலன்னாவைக்கு அருகில் உள்ள கொழும்பு மாநகர பிரதேசம், கடுவெல, கோட்டே ஆகிய இடங்களில் ஒரு பர்ச் காணி 15 லட்சம் ரூபா வரையில் விலை போகின்றது. ஆனால் கொலன்னாவயில் ஒரு பர்ச் ஆகக் கூடியது 3 முதல் 5 லட்சம் ரூபா வரையிலேயே விலை போகின்றது. அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமையே இதற்கு காரணம். 


கொலன்னாவை பிரதேச மக்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும், கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். வீதி அபிவிருத்தி போக்குவரத்து வசதிகள் என்பன சிறந்த முறையில் அமைய வேண்டியது இதில் பிரதானமானதாகும். இதனைக் கருத்திற் கொண்டு தான் லோலெவல் வீதி அபிவிருத்தியை ஒரு பிரதான வேலைத் திட்டமாக நாம் கருதுகின்றோம். அந்த வகையில் இந்த வீதி அபிவிருத்தி திட்டம் இன்று யதார்த்த நிலையை அடைந்துள்ளது. 


முன்னர் மக்களை பலவந்தமாக வீதிகளில் தூக்கி எறிந்து தான் இவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெற்றன. ஆனால் இந்த வேலைத் திட்டத்தின் போது மக்களுக்கு ஏற்படும் இழப்புக்களுக்கு அவர்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்கி விட்டுத்தான் நாம் அபிவிருத்திப் பணிகளை தொடங்க வேண்டும் என பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஒருவருக்கு கூட நட்டஈடு வழங்காமல் இந்தத் திட்டத்தை தொடங்கக் கூடாது என நான் வேண்டிக் கொண்டேன். அவ்வாறான அபிவிருத்திகளில் எவ்வித பலனும் கிடையாது. 


அந்த வகையில் தான் கடந்த இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு இந்த நட்டஈட்டுக்கான பணத்தை நாம் தேடிக் கொண்டோம். இந்த வீதியை அபிவிருத்தி செய்ய மகிந்த ராஜபக்ஷ ஒதுக்கியிருந்த நிதியைத் தான் இப்போது நான் வழங்குகின்றேன் என சிலர் கூறுகின்றனர். அப்படியானால் பணம் ஒதுக்கியிருந்த காலத்தில் வேலைகளை செய்திருக்கலாமே. ஒன்றைத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். இந்த லோலெவல் வீதி அபிவிருத்தியானது இந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இந்தப் பணம் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பெறப்பட்டது. நிச்சயமாக இவ்வருட இறுதிக்குள் இன்னும் 500 மில்லியன் ரூபா நட்டஈடுகள் வழங்கப்படும். 


கொலன்னாவையில் உள்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யாமல் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது. அப்போதுதான் மனித வாழ்க்கைத் தரமும் விருத்தி அடையும். எனவே தேர்தல் காலத்தில் நாம் அரசியலில் ஈடுபடுவோம். ஏனைய காலங்களில் மக்களுக்கு சேவை செய்வோம். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எவ்வித கட்சி பேதமும் இன்றி இந்தக் காரியத்தை நான் வெற்றிகரமாக மேற்கொள்ள பிரஜைகள் என்ற வகையில் எனக்கு உதவுங்கள்.

 

படம் 1. : நட்டஈடு பெற வந்திருந்தவர்களுள் ஒரு பிரிவினர்.

படம் 2 மற்றும் 3 : பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் நட்டஈட்டுக்கான காசோலைகளை கையளிக்கின்றார்.

கனவு நிலையில் இருந்து நனவு நிலை நோக்கி நகர்ந்துள்ள லோலெவல் வீதி அபிவிருத்தி கனவு நிலையில் இருந்து நனவு நிலை நோக்கி நகர்ந்துள்ள லோலெவல் வீதி அபிவிருத்தி Reviewed by Madawala News on 7/20/2017 11:51:00 AM Rating: 5