tg travels

பொத்தானை மக்களது மீள்குடியேற்றப் பிரச்சிணை தீர்க்கப்படவேண்டும் - ஜுனைட் நளீமி


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் அமைந்ததும் கிரான் செயலகப்பிரிவுடன் தற்காலிக இணைப்புச்செய்யப்பட்டதுமான பொத்தானை கிராம மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கும் பாராபட்சமும் மேற்கொள்ளப்படுவதாக மக்கள்; விசனம் தெரிவிக்கின்றனர். 


அவற்றுக்குமேட்பட்ட குடும்பங்கள் வசித்த, தமக்கான கிராம அபிவிருத்திச்சபை, மீனவர் சங்கம், பாடசாலை, விவசாய அமைப்புக்கள் என தனியாக கொண்ட கிராமமாக இது காணப்பட்டது. தமிழ் முஸ்லீம் சகோதர சமூகங்கள் அமைதியாக பரஸ்பர சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவந்தபோதும் பயங்கரவாத சூழ்நிலையில் முஸ்லிம்கள் இடம்பெயரவேண்டி வந்தது. 


உயிரிழப்புக்களுடன் தமது சொத்துக்களை முற்றாக இழந்து கிராமத்தை விட்டும் இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னரான சூழ்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள குடியேறுவதில் பல சிரமங்களை தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.


உத்தியோகபூர்வ ஆவணங்கள் பல இருந்தும், மாவட்ட செயலாளரினால் மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் இதுவரையில் பூரணமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றதுடன் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொகுதியில் ஒரு பகுதியினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியமர்ந்து தமது இருப்புக்களை பலப்படுத்துவதில் முனைப்புக்கொண்டுள்ளபோதும் பொத்தானை அணைக்கட்டு தெற்கு, சாளம்பச்சேனை, éலாக்காடு போன்ற பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த காரணத்தினால் மக்கள் குடியிருந்த பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. 


இவற்றினை துப்பரவு செய்து மீளக்குடியமர முயற்சிக்கின்றபோது அதிகாரிகளினால், வன இலாகா உத்தியோகத்தர்களாலும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதாக மக்கள் குறிப்ப்பிடுகின்றனர். அத்தோடு வன இலாகா பகுதியினர் மக்கள் குடியிருந்த காணிகளுக்கூடாக எல்லை கற்களை நட்டுள்ளதால் முறுகல் நிலை ஏற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறித்த முறுகல் நிலை தொடர்பில் ஆராய மாவட்ட வன இலாகா பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும், கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், பிரதேச கிராம அதிகாரி ஆகியோரும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்திருந்தனர். மக்கள் குடியிருந்த பிரதேசங்களின் தடயங்களை களப்பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வன இலாகா பணிப்பாளர் திரு.விஜயரட்ன தலைமையிலான அதிகாரிகள் மக்கள் குடியிருந்ததற்கான பல்வேறு கலைத்தடயங்களையும் ஆவணங்களையும் கண்டறிந்ததுடன் நியாயமாக மக்களது குடியிருந்த காணிகள் வன இலாகா பகுதியில் இருக்குமாயின் அதனை உரிய முறைப்படி விடுவித்து எல்லை கற்களை விடுவதாக வாக்களித்தனர். இதனடிப்படையில் சாளம்பச்சேனை பகுதியில் வன இலாகா எல்லை அமையாது எனவும் குறிப்பிட்டனர். 


இதில் மக்கள் மீளக்குடியமர முடியுமா என மக்கள் வினவியபோது இப்பகுதி மாதுறுஓயா யானைகள் சரணாலய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதால் இதுகுறித்து பிரதேச செயலாளரே முடிவு செய்ய வேண்டும் என பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறிப்பிட்டார். என்றபோதும் குறித்த குடியிருப்புக்கள் அமைந்த பகுதியில் தமிழ் சகோதர இனத்தவர் சிலருக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மீற்றர்கள் தூரத்தில் மீளக்குடியமர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை பொதுமக்கள் சுட்டிக்காட்டியதுடன், தமது மீள்குடியரேற்றம் தொடர்பில் பாராபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.

 

எனவே வன இலாகா மக்களது குடியிருந்த காணிகளில் அத்துமீறுவதும், எஞ்சிய பகுதி மாதுறு ஓய திட்டம் என்ற போர்வையில் பறிக்கப்படும் நிலைமை காணப்படுவதால் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான நியாயம் கிடைக்காமல் அகதிவாழ்க்கையே தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதாக பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாமல் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக பொத்தானை இடம்பெயர்ந்த மக்கள் காணப்படுவது கவலையளிக்கின்றது.

பொத்தானை மக்களது மீள்குடியேற்றப் பிரச்சிணை தீர்க்கப்படவேண்டும் - ஜுனைட் நளீமி பொத்தானை மக்களது மீள்குடியேற்றப் பிரச்சிணை தீர்க்கப்படவேண்டும் - ஜுனைட் நளீமி Reviewed by Madawala News on 7/26/2017 02:52:00 PM Rating: 5