Yahya

அல்லாஹ்வை அவமதித்த பிக்குவை பாதுகாக்கும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது – அப்துல் சத்தார்


அமைச்சரை அவமதித்த மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை, இலங்கை பிரதமரை அவமதித்து பேசியஞானசாரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.

குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

 

அண்மையில் இலங்கை – பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் போது இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தது. இதனை தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி இலங்கை அணியின் தோல்விக்கு அவர்களது உடற் தகுதி காரணமா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பிரபல வேகப் பந்து வீச்சாளர் மலிங்க கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியுமென கேள்வி எழுப்பியிருந்தார்.

 

இங்கு அமைச்சர் தயாசிறி கிரிக்கட் அணி வீரர்களின் உடற் தகுதி காரணமா என கூறியதன் மூலம் இலங்கை கிரிக்கட் அணி வீரர்களை நேரடியாகவே அவமானப்படுத்தியுள்ளார். இதனை இன்னுமொரு வகையில் நமது பாசையில் கூறுவதால் “சும்மா சப்பிக்கொண்டு கொளுத்து கிடக்கின்றார்களா என பார்க்க வேண்டும் ” என கூறலாம். இதனை கேட்கும் ஒரு மானமுள்ள விளையாட்டு வீரனுக்கு கோபம் வருவதொன்றும் தவறில்லை. முதலில் இலங்கை கிரிக்கட் வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தயாசிறி மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

இருந்த போதிலும் பிரபல வேகப் பந்து வீச்சாளர் மலிங்க அமைச்சரை நோக்கி கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்றே கூறியிருந்தார். இங்கு மலிங்க நேரடியாக அமைச்சரை குரங்கு என குறிப்பிடவில்லை. அவரது அறியாமையை விளங்கப்படுத்த ஒரு வசன நடையை பயன்படுத்துகிறார். இது பிழையென இலங்கைக்கு பல பெருமைகளை சேர்த்த இலங்கை அணியின் முதுகெலும்பான மலிங்க மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயமானது உலகுக்கே மலிங்க ஒழுக்கமற்றவர் என்ற செய்தியை கூறுவதோடு எதிர்காலத்தில் அவரது கிரிக்கட் மீதான ஆர்வத்தையும் சோர்வடையச் செய்து விடலாம். இலங்கை நாடு ஏனையவர்கள் விடயத்திலும் மிகக் கடுமையான ஒழுக்க விதிகளை கடைப்பிடித்தால் இதனை நாம் பிழையாக சிறிதேனும் குறிப்பிட முடியாது. இவ்வாறான ஒழுக்கம் மிகுந்த நாட்டில் வாழ்வதையிட்டு பெருமிதம் கொள்வோம்.

 

இக் குறித்த நிகழ்வு நடப்பதற்கு சில நாட்கள் முன்பு பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை குருநாகலில் வைத்து பொலிசார் கைது செய்யச் சென்ற போது இலங்கை நாட்டின் பிரதமரை ஞானசார தேரர் பொன்னையன் என்ற கடுமையான வார்த்தை பிரயோகம் கொண்டு ஏசியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் இதுவரை எந்த விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை நாட்டின் பிரதமரை அவமதிப்பதானது முழு இலங்கை நாட்டுக்குமான அவமானமாகும். இலங்கை நாட்டுக்கு சர்வதேச ரீதியில் புகழ் பெற்றுக்கொடுத்த மலிங்க மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிந்த இவர்களால் பிரதமரை அவமதித்து இலங்கை நாட்டையே அகௌரவப்படுத்திய ஞானசார தேரரை எதுவும் செய்ய முடியாமல் போனமையானது இலங்கை நாட்டின் ஒழுக்க போக்கு மீதான மிகவும் நலிவாக போக்கை எடுத்துக் காட்டுகிறது.

 

பகிரங்கமாக ஞானசார தேரரின் இவ்வாறான கூற்றுக்களுக்கு எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமையினால் மலிங்க போன்றவர்கள், இவ்வாறானவர்களின் கூற்றுக்களை தனக்கு முன் மாதிரியாக கொண்டிருக்கலாம் அல்லவா? ஞானசார தேரர்,மலிங்க ஆகிய இருவர்களினதும் கூற்றுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது அனைத்து வகையிலும் ஞானசார தேரரின் கூற்றே அதிக ஒழுக்கமின்மையை காட்டுகிறது. இலங்கை நாட்டின் நீதியானது அனைவருக்கும் ஒரே விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். அல்லாது போனால் சில தவறான முன் மாதிரிகள் இலங்கை நாட்டின் சந்ததிகளை அடையும் என்பதை இலங்கை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் இவ்விடயத்திலிருந்தாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

உலகில் வாழும் பல கோடி மக்கள் தங்களது இறைவனாக வணங்குகின்ற அல்லாவையே ஞானசார தேரர் பல தடவைகள் ஏசியுள்ளார். அதனையெல்லாம் சிறிதேனும் பொருட்படுத்தாது அவரை பாதுகாக்கின்ற இவ்வரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது.

அல்லாஹ்வை அவமதித்த பிக்குவை பாதுகாக்கும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது – அப்துல் சத்தார் அல்லாஹ்வை அவமதித்த பிக்குவை பாதுகாக்கும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது – அப்துல் சத்தார் Reviewed by Madawala News on 7/02/2017 10:08:00 PM Rating: 5