Kidny

Kidny

கருணாவின் அழைப்பு:இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்..யுத்த மேகம் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்களுக்குள் ஒருவித அச்சம் நிலவும்.
குறிப்பாக இரவு வேளைகளில் நிம்மதியான உறக்கம் கிடைப்பதே அரிது. இதோ புலிகள் வருகின்றார்களாம், அங்கு சுடுகின்றார்களாம் இங்கு பிரச்சினையாம் என்று ஒவ்வொரு நாளும் கதைகள் வந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு புலிகளோ ஏனைய ஆயுதக் குழுக்களோ முஸ்லிம் ஊர்களுக்குள் வராத நாட்களிலும் கூட யாராவது ஒருசிலர் பயங்காட்டல்களையும் அநாமேதயமாக கதைவிடுதல்களையும் மேற்கொண்டவண்ணமே இருப்பார்கள். இதனால், ஆயுத தாரிகள் வராத நாட்களிலும் நிம்மதியிருந்தது இல்லை.
யுத்தம் முடிவடைந்த பிறகு, சிலர் தம்முடைய அரசியலுக்காக இப்போதும் கூட புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்றும், புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் என்றும் அடிப்படையற்ற விதத்தில் கதைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு சிறிய அறிகுறியை, உருப்பெருப்பித்து நாட்டுக்குள் ஒரு உண்மைத்தகவல் போல அதனை பரப்பி, மக்களை கிலிகொள்ளச் செய்கின்றனர். இதற்குப் பின்னால் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கும்.
இது இவ்வாறிருக்கத்தக்கதாக, மூவின மக்களும் வாழ்கின்ற கிழக்கில், அதுவும் தமிழர்களும் முஸ்லிம்களும் கிட்டத்தட்ட சரிசமமாக வாழ்கின்ற ஆட்புல பிராந்தியத்தில், இரு இனங்களும் ஆட்சியதிகாரத்தில் பங்காளியாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், 'முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச் செல்கின்றது' என்று முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளமை கவனிப்பிற்குரியது.
முஸ்லிம்களின் ஆதிக்கம்
உலக சனத்தொகையில் பெருமளானோர் பின்பற்றுகின்ற இரண்டாவது மதமாக இஸ்லாம் இருக்கின்றது. மொத்தமாக 4300 மதங்களையும் அதில் 20 பிரதான மதங்களையும் கொண்ட இவ்வுலகில் சுமார் 23 வீதமானோர் முஸ்லிம்களாக அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் மத்தியகிழக்கின் அரபு நாடுகளுக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். அங்கு வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். ஆனால், இதில் எந்த பிராந்தியத்திலும் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்கள் மீது தாமாக முனைந்து ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாக வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.
சில முஸ்லிம் ஆட்சியாளர்களும், முஸ்லிம் பெயர்தாங்கி ஆயுத இயக்கங்களும் செய்கின்ற இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்படாத காரியங்களுக்கு முஸ்லிம் உலகோ, இஸ்லாத்தை பின்பற்றும் சாதாரண மக்களோ பொறுப்பாக மாட்டார்கள் என்ற அடிப்படையில் நோக்கினால், உலகின் பல நாடுகளில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அல்லாமல் ஆதிக்கம் செலுத்தப்படும் மக்கள் கூட்டமாகவே வாழ்கின்றனர். முஸ்லிம்கள் ஒரு ஆதிக்க சக்தியாக வளர்ந்து விடுவார்கள் என்ற பயம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சியோனிசவாதிகளுக்கும் இப்போது இந்துத்துவா போன்ற பிராந்திய சக்திகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றதே தவிர, மற்றைய இன மக்களை ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு ஆதிக்கம் செலுத்துபவர்களாக முஸ்லிம்கள் இல்லை என்றே கூற வேண்டும். அவ்வாறு இன்னுமொரு இனக்குழுமத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் மக்களை, உண்மையான முஸ்லிம்களாக கருதவும் முடியாது.
இதுதான் இலங்கையின் நிலையும். இலங்கையைப் பொறுத்தமட்டில் மூன்றில் இரண்டு பங்கான முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்துவோராக இல்லை. அவர்கள் அங்குள்ள தமிழர்களோடு தமிழர்கள் போலவும் சிங்கள மக்களோடு சிங்களவர்கள் போலவும் நெகிழ்ச்சித்தன்மையுடன் வாழ்கின்றனரேயொழிய தம்முடைய இனத்துவ ஆதிக்கத்தை தெற்கிலோ மலைநாட்டிலோ நிலைநிறுத்துவதற்காக முன்னின்றதில்லை.
அதேபோன்றுதான், மூன்றில் ஒரு பகுதியான முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். அதிலும் கிழக்கு மாகாணத்தில் சற்று செறிவாக இந்த இனப் பரம்பல் இருக்கின்றது. ஆனால், கிழக்கில் வரலாறு நெடுகிலும் ஆதிக்கம் செலுத்தும் மக்கட் பிரிவினராக முஸ்லிம்களே இருந்து வந்தனர் எனக் கூற முடியாது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு விசுவாசமானவர்களாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களாகவுமே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, அரச படைகளாலும் இந்திய அமைதிகாக்கும் படையினராலும் ஆயுதக் குழுக்களாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட 'ஆதிக்கத்தை' யாரும் மறக்க முடியாது. கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்திருந்தால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலோடு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றித்துப் போயிருக்க மாட்டார்கள், முஸ்லிம் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு காணிக்கையாக்கி இருக்கவும் மாட்டார்கள் என்பதையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும்.
பாரதூரமான கருத்து
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு, சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கின்றார். 'கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச் செல்கின்றது. அதேபோன்று வடக்கில் தலைமைத்துவ போட்டிகளும் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று இழுத்தடிக்கின்ற செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. எனவே இவற்றிலிருந்து நம்மை மீட்கும் போராட்டத்தில் ஒன்றிணையுங்கள்' என்ற தொனியில் அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இரா.சம்பந்தனையும் மாவை சேனாதிராஜா போன்றோரை சாடியுள்ள கருணா, 'தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு கிழக்கை தாரை வார்த்துக் கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழர்கள் வேற்றுமைகள் மறந்து எம்முடன் ஒற்றுமைப்பட வேண்டும். கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அடுத்த முதலமைச்சர் தமிழராக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக இருக்கின்ற ஒரு களச்சூழலில் அடுத்த தேர்தலில் மாற்று சக்தியாக போட்டியிடவுள்ளதாக அறிவித்திருக்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான், கிழக்கில் தமிழ் முதலமைச்சரை உருவாக்க வேண்டுமென்றும் தம்மோடு தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சொல்லியிருப்பதற்கான காரணங்களை உய்த்தறிந்து கொள்வது அவ்வளவு சிரமமான காரியமல்ல.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதற்கு எடுத்த முடிவுக்காக கணிசமான தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுகின்ற கருணா, தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றார். எவ்வாறாயினும் ஒற்றுமைக்கான அழைப்பு மிகவும் நியாயமான, வரவேற்கக் கூடியதே. அதேநேரம், முஸ்லிம்களிடமிருந்து கிழக்கை மீட்பதற்காக மட்டுமே ஒன்றுபடுமாறு அவர் கூறியதாகவும் கருத முடியாது. ஆயினும், கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்ற காரணத்தை முதன்மைப்படுத்தியே அவர் இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார் என்பது முஸ்லிம்களிடையே ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இணைவும் பிரிவும்
வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்த ஒரு மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முற்போக்கு அரசியல் சக்திகள் பேசி வருகின்றது. இந்நிலையில், மேற்படி அரசியல்வாதி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருப்பது ஆரோக்கியமானதாக இல்லை என்பதே சமூக நலன்விரும்பிகளின் அபிப்பிராயமாக இருக்கின்றது.
நிகழ்காலத்தில் நடக்கின்ற ஏதாவது ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு, மக்களை உசுப்பேற்றுவதற்கும் முன்னர் கடந்தகால வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். அதேபோன்று உண்மையாகவே, கிழக்கில் இனங்களின் ஆதிக்கம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் மிகச் சரியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகளும், இயக்கங்களுமே தம்முடைய ஆதிக்கங்களை நிலைநாட்டுவதற்காக இனங்களுக்கு இடையில் மேலாதிக்க சிந்தனையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். தவிர அடிமட்ட, அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு இன்னும் பலமாகவே இருக்கின்றது.
இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் இருந்தார். வட -கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை. அந்த மாகாண சபையில் ஆளும் பக்கத்தில் ஆட்சியும் அதிகாரமும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவுமில்லை. தமிழ் ஆயுதக்குழுக்களும் முஸ்;லிம்களின் அன்றாட வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருந்த காலமது. ஆனாலும் முஸ்லிம்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனரே தவிர, கிழக்கில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது என்றோ அதிலிருந்து கிழக்கை மீட்க வேண்டும் என்றோ கூறி முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் மக்களை தூண்டிவிடவில்லை.
இப்போது வடக்கின் ஆட்சியதிகாரத்தில் தமிழர்கள் அதிக இடம்பிடித்துள்ளனர். வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வது கூட கல்லில் நார் உரிக்கின்ற வேலையாக இருக்கின்றது. இந்தக் காரணத்திற்காக, வடக்கில் தமிழரின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது என்றும் அதிலிருந்து வடக்கை மீட்க வேண்டும் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர் யாராவது குரல் கொடுக்க முடியுமா? அப்படிச் செய்தால் அது பாராட்டத்தக்க நடவடிக்கையாக அமையுமா?
அதுமட்டுமல்ல, கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்தில் சங்கமித்த சி.சந்திரகாந்தன் முதலமைச்சரானார். தமிழ் மக்களுக்கு அவசியமாக இருந்த அதிகப்படியான சேவைகளை அவர் செய்திருப்பதாகவும் சொல்ல முடியும். ஆனால் அக் காலப்பகுதியிலும் முஸ்லிம்கள், தமிழர்களின் கையோங்குகின்றது என்று சொல்லவில்லை.
முஸ்லிம்களின் எண்ணம்
முஸ்லிம்கள் கிழக்கில் பலம்பொருந்திய அரசியல் சக்தியாக இருக்க விரும்புகின்றனர் என்பதும் அடுத்த முறை முஸ்லிம் முதலமைச்சரை கொண்டுவர முனைவார்கள் என்பதும் உண்மையே. இதேபோன்ற உணர்வு தமிழர்களுக்கும் இருக்கின்றது.
'ஆதிக்கம்' என்பதற்கு அடிப்படையாக அமைவது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குடன் இருப்பதும் எல்லா மட்டங்களிலான கட்டமைப்புக்களிலும் அதன் தாக்கம் இருப்பதும் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியாயின் முஸ்லிம்கள் ஏன் இந்த ஆட்சியதிகாரம் வேண்டுமென்று அவாவி நிற்கின்றனர் என்ற கேள்விக்கு வரலாறு பதிலளிக்கின்றது.
இணைந்த வட கிழக்கில் ஆளப்படும் வரைக்கும் 'யார் ஆண்டாலும் பரவாயில்லை' என்றே முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால் அந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான சூழல் இருந்ததாக சொல்ல முடியாது. இக்காலப்பகுதியிலேயே முஸ்லிம் இளைஞர்கள் பலர் தமிழ் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது?
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர், கிழக்கில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் பலியெடுக்கப்பட்டனர். அழஞ்சிப்பொத்தானை கிராமம் அழிக்கப்பட்டது, புனித கடமைக்கு சென்ற முஸ்லிம்கள் குருக்கள்மடத்தில் உயிர்பறிக்கப்பட்டனர். அக்கரைப்பற்று பள்ளிவாசலுக்குள் தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லிம் பொலிஸார் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டனர், கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள் அங்குமிங்கும் ஆயுதங்கள் உரக்கப் பேசின. பிறகு யுத்தமும் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் கருணா அம்மான் புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்தார்.
இதுபோன்ற சம்பவங்களினாலேயே தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டது. தமிழர் அரசியலிலும் வேறுசில முன்னெடுப்புக்களிலும் முஸ்லிம்கள் நம்பிக்கையற்றுப் போனதற்கும், பிரிந்த கிழக்கு மாகாணத்தில் தம்முடைய அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும் முஸ்லிம்கள் முயற்சிப்பது, முன்னர் ஆயுதங்களால் வழிநடாத்தப்பட்ட ஆதிக்கத்தினாலேயே என்பதை மறந்துவிட முடியாது.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் கடந்த இரண்டு ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் முதலமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். முஸ்லிம்களில் கணிசமானோர் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். அடுத்த முறை முஸ்லிம்கள் தாங்களாக ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், நிச்சயமாக தமிழ் அரசியல்வாதிகள் இனியும் அப்பதவியை விட்டுக் கொடுக்க மாட்;டார்கள் என்பதும் வெளிப்படையானது.
கிழக்கு மாகாண சபை உருவான பிறகு முஸ்லிம்களும் தமிழர்களும் சரிக்குச் சமமான அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் யுத்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டு செல்ல முடியாதிருந்த காரணத்தால் இப்போது முஸ்லிம்கள் அதிகமான அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டிருப்பது போல தோன்றுகின்றுவது இயல்பானது. இருப்பினும், முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதோ என்ற எண்ணம் தமிழர்களுக்கு எழும் அளவுக்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதிகார தரப்பினரும் ஓரிரு பொதுமக்களும் நடந்து கொள்கின்றனர் என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை.
உதாரணமாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் தமிழ் மக்களை புறக்கணிப்பதாக, தமிழ் பிரதேசங்களை கண்டுகொள்ளாதவர்களாக செயற்படுவதாக தமிழ் மக்களிடையே ஒரு உணர்வு இருக்கின்றது. சில இடங்களில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கொள்வனவு செய்ய முனைகின்றார்கள், தமிழ் அப்பாவிகளை மட்டம்தட்டும் விதத்தில் செயற்படுகின்றனர் போன்ற மேலும் பல குற்றச்சாட்டுக்களும் உள்ளன. இது மிகவும் முக்கியமானது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டாலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டாலும் தவறு தவறுதான் என்ற அடிப்படையில் இப்பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடுவது முஸ்லிம்களின் கடமையாகும். முஸ்லிம் சமூகத்தில் உள்ள பொறுப்புவாய்ந்தவர்கள் - தமிழர்கள் மீது தமது ஆதிக்கத்தை பிரயோகிக்கவோ மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படவோ கூடாது.
இதேவேளை, முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருப்பதும் இச் சமுகத்தில் மத்திய, மாகாண அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கணிசமாக இருப்பதும் இயல்பாகவே முஸ்லிம்களுக்கு அதிக சேவைகள் சென்றடைய வழிவகுக்கும் என்ற யதார்த்த்தை தமிழ் சமூகம் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஆதிக்கம் போல பொய்த்தோற்றம் காட்டலாம். வடக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இதே உணர்வுதான் இருக்கும் என்பதையும் தமிழ் மக்களும் வி. முரளிதரன் போன்ற அரசியல்வாதிகளும் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோன்று வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற இரு சிறுபான்மையினங்களும் இதுபோன்ற உணர்வுடனேயே வாழ்கின்றனர் என்பதையும் நினைவிற் கொள்தல் நல்லது.
செய்ய வேண்டியது
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியில் அல்லது மாகாணத்தில் உள்ள ஏதாவது ஒரு ஆட்சிக் கட்டமைப்பில் தமிழர்களுக்கு சமஅந்தஸ்து கிடைக்காமல் போகலாம். ஒருசில முஸ்லிம்களின் நடவடிக்கை தமிழர்கள் மனம்கோணுவதாக அமையலாம். அது வேறு விடயம். ஆனால், அதற்காக முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் கூறுவது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகின்றது.
கிழக்கைப் பொறுத்தவரை இங்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் கிட்டத்தட்ட சரிக்கு சமமாக வாழ்கின்றனர். சாதாரண மக்களாலன்றி, வேறு வெளிச்சக்திகளால் தோற்றுவிக்கப்பட்ட விரிசல்களை சரிசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸூம் கூட்டிணைந்து செயற்படுவது இதற்கு சாதகமாக அமைகின்றது.
இங்கு சில தவறுகள் இடம்பெறலாம், முஸ்லிம்களின் செல்வாக்கு மேலோங்கி விட்டதாக தோன்றலாம். அதற்காக முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது என்று பகிரங்கமாக கூறுவதும் அதற்கெதிராக போராட அழைப்பதும் ஆரோக்கியமானதல்ல. மேலும், தமிழர்களை ஒற்றுமைப்படுமாறு அழைப்பது நல்லதே என்றாலும் கிழக்கின் முஸ்லிம் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவ்வாறு அழைப்பு விடுதல் என்பது தமிழரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவே அர்த்தப்படும்.
இவ்விடத்தில் ஒன்றை சிந்திக்க வேண்டும். கிழக்கில் தமிழர்களை விட முஸ்லிம்களோ முஸ்லிம்களை விட தமிழர்களோ ஆதிக்கம் செலுத்துவது சாத்தியமற்றது. அவ்வாறு ஆளுக்காள் முரண்பட்டு தம்முடைய ஆதிக்கத்தை செலுத்த முற்படுவோமாக இருந்தால் பெருந்தேசிய கட்சிகள் அதை தமது நலனுக்காக பயன்படுத்தும்.
எனவே, முஸ்லிம்களும் தமிழர்களும் தங்களுக்குள் ஒற்றுமைப்படுவதோடு, அவசியமான சந்தர்ப்பத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் என்ற அடிப்படையில் தமக்குள் நீதமான முறையில் ஆதிக்கத்தையும் ஆட்சியதிகாரத்தையும் பகிர்ந்து நுகர வேண்டும். காணி, வளங்கள், அபிவிருத்தி, நிதிஒதுக்கீடுகள், அரசியல் அதிகாரம் தொட்டு முதலமைச்சர் பதவியைக் கூட தமக்கிடையே ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து விட்டு, மற்றைய சமூகத்தின் அதிகப்படியான இன ஆதிக்கத்திற்கு எதிராக போராடுமாறு கூறி உசுப்பேற்றிவிடுவது, அரசியல்வாதிகளுக்கு இலாபமானதாக அமையலாம். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கைசேதத்தையே கொண்டுவரும்.
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 30.07.2017)

கருணாவின் அழைப்பு:இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்.. கருணாவின் அழைப்பு:இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்.. Reviewed by Madawala News on 7/30/2017 01:41:00 PM Rating: 5