Ad Space avaiable

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை சற்றுமுன் கைச்சாத்தானது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிப்பு.


1.1 பில்லியன் ஐ.​அ டொலர்கள் பெறுமதியான ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில், அரசாங்கம் இன்று (29) கைச்சாத்திட்டது. துறைமுக அமைச்சில் வைத்தே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது தொடர்பாக, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக, அரசாங்கம் 46 பில்லியன் ரூபாயை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

“இந்தத் தொகையை நாம் இழந்திருக்காவிடின், நாட்டிலுள்ள 2.5 மில்லியன் மக்களுக்கு, இலவசமாக மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளித்திருக்க முடியும்” என்று அவர் கூறினார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம் தொடர்பாக, வௌ்ளிக்கிழமை (28) அன்று விவாதிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பாக விவாதிக்க, அவர்கள் முன்வரவில்லை. காரணம், விவாதிப்பதற்கு சரியான காரணம் அவர்களிடம் இல்லை” என்றும் இதன்போது அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறை முகத்திட்டத்துக்கான பாதுகாப்பு பணிகள் அனைத்தும், சிவில் மற்றும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், நிலப்பரப்பு தொடர்பான விடயங்களை, அரசாங்கமே கையாளும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மாத்தளை விமான நிலையம் தொடர்பான ஒப்பந்தம், இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

“எவ்வாறாயினும், சூரியவெவ கிரிக்கெட் மைதானம் தொடர்பாக மோசமான செய்திகளையே நாம் அறிந்துள்ளோம். மைதானத்துக்கான எந்தவொரு தேர்வாளர்களும் இல்லை. இந்தத் திட்டத்துக்காக, எம்முடை வரியிலிருந்து, நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையே உள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும் கூறிய அவர், “நாட்டின்  பொருளாதாரம் ஒரு சதுப்பு நிலமாகவே காணப்பட்டது. எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 2 வருடங்களாக, ஒவ்வொன்றாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் ஒரு நிலைக்கு வந்துள்ளது” என்று அவர் கூறினார்.

அதேவேளை,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 சதவீதமானவை, சீன நிறுவனத்துக்கு குத்தகை முறையிலேயே வழங்கப்பட்டுள்ளது எனும் வதந்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் கூட்டு தொழிற்சங்கங்களின் பிரதிநிதியான பிரசன்ன பத்திரன, இது, ஒரு நீண்ட கால முதலீடு மாத்திரமேயாகும் என்றும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி அடையச் செய்வதற்கு, இத்தகைய அணுகுமுறையொன்று அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கும் ஒரு நிலையில், நாம் செயற்படவில்லை. ஆனால், குத்தகை மூலம் பயனுள்ளது என்றால், அதற்கு நாம் எதிரானவர்கள் அல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை சற்றுமுன் கைச்சாத்தானது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிப்பு. ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை சற்றுமுன்  கைச்சாத்தானது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிப்பு. Reviewed by Madawala News on 7/29/2017 11:23:00 AM Rating: 5