Ad Space Available here

இஸ்லாமும் மனித உரிமைகளும். ( பாகம் 1 )மனித உரிமை என்பது புதிதானதா? எங்கிருந்த உருவானது? இஸ்லாத்தின் பங்கு என்ன?

இன்றைய நவீன காலத்தில் “மனித உரிமைகள்” என்பது பல தரப்பினராலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம் என்பதை அதன் வளர்ச்சியின் வரலாற்றைப் படிக்கின்றபோது வியங்கிக்கொள்ள முடிகிறது. சட்டம் என்பது கடவுளிடமிருந்து அருளப்பட்டது என்பது அதில் மிக முக்கியமான வாதமாகும். அதுவே “இயற்கைச் சட்டம் - Natural Law” என்று அறியப்படுகின்றது. “இயற்கைச் சட்டம்” பற்றிய கோட்பாடே பின்னர் தோன்றிய கோட்பாடுகளுக்கெல்லாம் அடித்தளம் இட்டது என்ற கருத்தும் நம்பப்படுகிறது. இருப்பினும் ஆட்சியாளர்களது வரம்பு மீறிய அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் 1215ஆம் ஆண்டு “மக்னா காட்டா – Magna Carta” உருவாக்கப்பட்டது என்றாலும் இன்றைய மேற்கத்திய மனித உரிமைக் கோட்பாடுகளாக அறியப்படுகின்ற சட்டவாக்கமானது ஜேர்மனியில் இடம்பெற்று வந்த 30 வருடகால (1618 - 1648) யுத்த நிறைவின்போது கைச்சாத்திடப்பட்ட “Peace of Westphalia – 1648” யிலிருந்தே ஆவன வடிவம் பெற்றதாக அறியப்படுகின்றது. பின்னர் பிரஞ்சு மனித உரிமைப்பட்டயம் (1789), அமெரிக்க மனித உரிமைப்பட்டயம் (1791) மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864, 1906, 1929 & 1949) என்று வளர்ந்து சென்றமையை வரலாற்றை புரட்டிப்பார்க்கையில் விளங்க முடிகிறது.


ஆயினும் இவ்வளவு ஆவணங்களை வைத்தும் இவ்வுலகில் பாசிச மற்றும் நாசிச கொள்கைளால் உருவான கொடூரமும் கோரமும் நிறைந்த முதலாம் உலக மகா யுத்தத்தையோ, இரண்டாம் உலக மகா யுத்தத்தையோ நிறுத்திட முடியாது போனதே மக்கள் மனதில் நிலைகொண்ட சோகங்களாகும். இக்கசப்பான அனுபவங்கள் உலக நாடுகளை விழித்திடச் செய்தது.

மூன்றாம் உலக மகா யுத்தமொன்று ஏற்பட்டிடக்கூடாதென்பதையும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் செய்யத் தூண்டியது. இதன் வெளிப்பாடாகவே 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை (United Nations Organization- UNO) உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்ற எண்ணக்கருவினைக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், பல உப நிறுவங்களைக் கொண்டு இன்றுவரை இயங்கி வருவதுடன் முக்கிய மனித உரிமை ஆவனமான உலக மனித உரிமைகள் பட்டயத்தையும் (Universal Declaration of Human Rights - 1948) நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
காலத்திற்குக்காலம் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த ஐக்கிய நாடுகள் சபையினதும் அதன் துணை நிறுவனங்களினதும் நியமங்களே இன்றைய முக்கிய சர்வதேச மனித உரிமை சட்டங்களாக உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.  இவற்றிலிருந்து தேசிய அரசுகள் தத்தமது அரசியலமைப்புகளில் உள்ளடக்கிய மனித உரிமைகளே “அடிப்படை உரிமைகள்” எனவும் கணிக்கப்படுகின்றன.

என்றாலும் இவ்வளவு நவீன ஜனநாயக நியமங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் வன்முறைகளும், அத்துமீறல்களும் மற்றும் படுகொலைகளும் ஒழிந்தபாடில்லை. அப்படியென்றால் இவையாவும் நடைமுறைச்சாத்தியற்ற அல்லது மனிதனின் இயற்கைத்தன்மைக்கு மாற்றமான நியமங்களாக இருக்கக்கூடுமோ என்பதே சாதாரண மனிதர்களுடைய உள்ளங்களைத் தொட்டுச் செல்லக்கூடிய பொதுப்படையான சந்தேகங்களாக இருப்பதுடன் இப்பிரச்சினைகளைத் தீரப்பதற்கான நடைமுறைச்சாத்தியமுடைய, மனிதனின் இயல்பு நிலைக்குப் பொறுத்தமான சட்டவாக்கத்தை வேண்டியும் நிற்கின்றது என்றால்? அதற்கான விடை “இஸ்லாம்” என்றால் பொறுத்தமற்றதா?


நாம் இன்று இஸ்லாமிய கணிப்பீட்டின்படி ஹிஜ்ரி 1437ஆம் ஆண்டை எட்டியுள்ளோம். ஆனால் இக்கணிப்பீட்டின்படி இஸ்லாம் தோன்றி 1437 வருடங்களேயாகின்றன என்பது அர்த்தமல்ல. இஸ்லாம் இறுதித் தூதர் முகம்மத் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கமும் அல்ல. மாறாக உலகின் முதல் மனிதரும், அல்லாஹ்வினுடைய முதல் தூதருமான ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதிலிருந்தே காலத்துக்காலம் இறைத் தூதர்கள் மூலம் இஸ்லாம் என்கின்ற அல்லாஹ்வின் சட்டங்கள் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகையும், மனிதன் உட்பட அனைத்தையும் படைத்த இறைவன் நடைமுறைப்படுத்துகின்ற சட்டங்கள் படைப்புக்களுக்குப் பொறுத்தமானதாகவே இருக்கும் என்பதில் நடுநிலை சிந்தனையாளர்களுக்கு சந்தேகம் இருக்காது என்பதே உண்மையாகும். ஏனெனில் உற்பத்திப் பொருட்களை இயக்குவதற்கான வழிகாட்டல் ஆவனத்தையும் உற்பத்தியாளரால் மாத்திரமே வழங்க முடியும் என்பதில் எவருக்கும் சந்தேகமேயிருக்காது. இஸ்லாம் ஒரே இறைவனின் புனித மார்க்கமாகும். இம்மார்க்கம் மனிதத்தன்மை நிறைந்த நடைமுறைச் சாத்தியமான சத்திய மார்க்கம் என்றால் இன்றியமையாது. இதற்கு எனது நிரூபனமோ அல்லது வேறு எவருடைய நிரூபனமோ தேவையில்லை.

என்றாலும் இஸ்லாமிய மார்க்கமானது பிறர் நலன் காப்பதுடன் வன்முறை, வன்கொடுமைகளைத் தடுக்கும் மனித உரிமைகளின் மார்க்கம் என்ற தெளிவிற்காக கீழ்வரும் அடிப்படை விடயங்களை ஆராய்தல் சாலப்பொருத்தம் என்பதோடு இவ்விளக்கத்தின் மூலமாக இன்றைய சட்ட நியமங்களுக்குக்கூட இஸ்லாமிய மார்க்கக் கோட்பாடுகளே அடித்தளம் இட்டது என்பதையும் ஓரளவு உணர முடியுமாயிருக்கும்.

இஸ்லாம் இவ்வுலகைப்படைத்துப் பரிபாலனம் செய்கின்ற ஏக அல்லாஹ்வின் மார்க்கமாகும்:

இப்பிரபஞ்சத்தை அல்லாஹ்வே படைத்து அவனது ஆட்சியை நிலைநாட்டினான்.

“மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையம் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது…” (அல்-குர்ஆன் 11:7 மேலும் பார்க்க 23:5)

மேலும் மக்களின் வழிகாட்டலுக்காக காலத்துக்காலம் இறைத்தூதர்களையும் அனுப்பியதோடு இறுதித்தூதர் முகம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக புனித இஸ்லாமிய மார்க்கத்தைப் பரிபூரணப்படுத்தி இறைத்தூதிற்கு முற்றுப்புள்ளியாகவும் ஆக்கினான்.

“…இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்…” (அல்-குர்ஆன் 5:3)

சாந்தி, சமாதானம் மற்றும் கட்டுப்பாடு என்பனவே இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களாகும்:

இஸ்லாம் என்பது “ஸலம்” என்ற மூல வார்த்தையில் இருந்து தோன்றியதாகும். அவ்வார்த்தைப் பிரயோகம் சாந்தி மற்றும் சமாதானம் என்ற அர்ந்தங்களையே கொடுக்கின்றன. இப்புனித இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களே “முஸ்லிம்” என்றழைக்கப்படுகின்றனர். முஸ்லிம் என்றால் கட்டுப்பட்டவர் மற்றும் சரணடைந்தவர் எனப்பொருள்படும். அதாவது சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற புனித இஸ்லாமிய மார்க்கத்தைக் கீழிரக்கிய அல்லாஹ்விற்கு அஞ்சி அவனது சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களே முஸ்லிம்களாவர்.

அதேபோன்று இஸ்லாமிய முகமம் (ஸலாம்) கூறும் வழிமுறையாகும். அதாவது ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு - அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும், அருளும் என்றென்றும்  உங்கள்மீது உண்டாகட்டுமாக” என்ற பிரார்த்தனைக்குரிய வாசகத்தைப் பரிமாரிக்கொள்ளுமாறு வேண்டுகின்றது. ஏனெனில் இவ்வாறு ஒருவருக்கொருவர் முகமம் கூறிக்கொள்ளும் சமூகத்தில் குரோதங்களும், குழிதோண்டல்களும் இருக்காது என்ற உன்னத தத்துவமாகும்.

“…மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்கே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர் உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.(யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)

இஸ்லாம் ஏனைய மதங்களிலும் குறிப்பிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட மார்க்கமாகும்:

மேற்குறிபிட்டவாறு இஸ்லாம் என்பது புதியதோர் மார்க்கமல்ல. மாறாக இவ்வுலகம் படைக்கப்பட்டதிலிருந்தே ஏக இறைவனால் இறக்கியருளப்பட்ட மார்க்கமே இஸ்லாமாகும். இவ்வாறான ஒரே இறைவன் மற்றும் இறுதித்தூதர் முகம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும் ஏனைய மதங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பதானது இஸ்லாம் அல்லாஹ்வினுடைய புனித மார்க்கம் என்பதையும் அல்லாஹ்வினுடைய சட்டங்களே அவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்பினங்களும் ஆளப்படுவதற்கான மிகமிகப் பொறுத்தமான நியமங்கள் என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையிலாகும்.

“நிச்சயமாக நாம் தாம் “தௌராத்”தையும் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் வழிபட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள். இறைபக்தி நிறைந்த மேதை (ரப்பானியூன்)களும் அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்.  என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:44 மேலும் பார்க்க 10:71-72, 3:52)

இந்து மதமும் இஸ்லாம் கூறுவதைப்போன்றே ஏக இறைவன் ஒருவன் என்கிறது. “கடவுள் ஒருவர்தான்; இரண்டாவது இல்லை” (சந்தோக்கியா உபநிஷதம் 6:2:1)

யூத மதமும் “கடவுள் ஒருவனே அவனையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கே கட்டுப்பட்டு வாழ வேண்டும”; என்கிறது. (உபாகமம் : 5:7-9)

கிருஷ்த்துவ மதத்தில் “எனது பிதா எல்லோரை விடவும் பெரியவராக இருக்கிறார்” என்றே இயேசு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது (யோவான் சுவிசேஷம் 14:29) மேலும் இயேசு கூறினார் “நான் என் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை. நான் கேட்கிற படியே நியாயம் தீர்க்கிறேன். எனக்கு சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பிய பிதாவிற்கு சித்தமானதையே தேடுகிற படியால் எனது தீர்ப்பு நீதியாய் இருக்கிறது” (யோவான் சுவிசேஷம் 5:30).

சட்டத்துறையின் வளர்ச்சியில் மதக்கோட்பாடுகளுக்கு (Natural Law) முக்கிய பங்கு:

இன்றைய காலத்தில் பெரும்பாலாகப் பேசப்படுகின்ற விடயம் “ஜனநாயகம்” என்பதாகும். வரலாற்றைப் புரட்டிப்பார்க்கையில் ஜனநாயகம் என்பது புராதன கிரேக்கத்திலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது. எனினும் இற்றைக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்திலும் கடவுளின் சட்டங்களே அவனது பிரதிநிதிகளால் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இதனையே உலகம் படைக்கப்பட்ட முதலே அல்லாஹ்வினுடைய சட்டங்கள் நிலைநாட்டப்படுவதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுநிலையாய் விளங்கிக் கொள்வோம்!!

இன்றைய சட்ட நியமங்கள் ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்டதாக கூறிக்கொள்கிறார்கள். ஆனால் எல்லாக் கோட்பாடுகளையும் முந்திய சட்டமுறைமையானது மதக்கோட்பாடுகளான (Natural Law) அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சி முறைமை எனலாம். எனவே மதங்களே சட்டவாக்க வளர்ச்சியின் அடித்தளம் என்றும் கூறலாம். பல மதங்கள் இன்று பின்பற்றப்பட்டாலும் இஸ்லாம் என்பது உலகம் படைக்கப்பட்ட நாள் தொடக்கம் அல்லாஹ்வால் அவனது தூதர்கள் மூலம் உலகில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரே மார்க்கம் மற்றும் ஏனைய மதங்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடுகள் சாந்தி, சமாதானம் மற்றும் பிறர் நலன் போன்றவற்றை மேலோங்கச் செய்வதாகவே உள்ளன.

இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாட்டின்படி இந்த உலகம் மற்றும் மனிதன் உட்பட அனைத்துப்படைப்புகளும் ஏக இறைவன் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவையாகும். அப்படியானால் ஒரே இறைவனான அல்லாஹ்வால் அருளப்பட்ட கட்டளைகளும் ஆட்சி முறைகளும் அவனது படைப்புகளுக்கு சாலப் பொருத்தமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இப்படியாக உறுதிப்படுத்தப்பட்ட ஏக இறைவன் அல்லாஹ் அவனது தூதர் மூலமாக நடைமுறைப்டுத்திக் காட்டிய சட்ட முறைமையையும் ஏற்றுக் கொள்ளாமல் விமர்சிப்பதானது இஸ்லாத்திலுள்ள குறைகளல்ல மாறாக அதனை மறுத்து விமர்சிக்கின்ற மக்களின் மடமை என்றே மனவேதனையுடன் சொல்லத் தோன்றுகின்றது.

ஆகவே இவ்வாறு முன்பே தீர்மானிக்கப்பட்ட மனநிலையில் உள்ளவர்களைப் பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான் “(நபியே) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:120).

அதுமட்டுமன்றி எவ்வாறான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக “(நபியே பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள் “வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக…” (அல்-குர்ஆன் 2:120).

இஸ்லாம் உரிமைக்கு முன்னால் கடமையை நிறைவேற்றுமாறு கட்டளையிடுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடுகள் நடைமுறைச் சாத்தியமானதும் மனித நேயத்தை ஓங்கச் செய்து மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் மனித உரிமைக் கோட்பாடுகளை விரிவாக ஒப்பிட்டு ஆய்வு செய்வதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம் என்றெண்ணுகின்றேன். நவீன உலகில் 16ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் இஸ்லாத்தில் ஏறத்தாழ 1400 வருடங்களுக்கு முன்மே சட்டவாக்கம் செய்யப்பட்டுவிட்டன என்பதே வரலாற்று உண்மையாகும். ஆகையால் பிற மதங்களிலும் அடையாளப்படுத்தப்பட்ட ஒரே கடவுள் கொள்கையின் மூலமாக ஏவப்பட்டு மனித நேயத்தை வளரச்செய்து சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்தி சாந்தியையும் சமாதானத்தையும் ஓங்கச் செய்யும் வழிகாட்டலைக் கொண்ட சங்கை மிக்க இஸ்லாமிய மார்க்கத்தின் மனித உரிமைகள் கோட்பாடுகளை நடுநிலை பேணி விளங்கிட என் அன்பர்கள் அனைவரையும் தாழ்மையாய் இரு கரமேந்தி அழைக்கின்றேன். (தொடரும்…)

தம்பாளை, ஜெஸ்மில் அப்துல் கபூர்
இஸ்லாமும் மனித உரிமைகளும். ( பாகம் 1 ) இஸ்லாமும் மனித உரிமைகளும். (  பாகம் 1 ) Reviewed by Madawala News on 7/07/2017 09:01:00 AM Rating: 5