Ad Space Available here

இஸ்லாமும் மனித உரிமைகளும், பாகம் 3உரிமைகள் கடமைகள் தொடர்பாக இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்

தத்துவங்கள் என்பது குறிப்பிட்ட விடயம்சார் நியதிகளாகும். ஆதலால் இஸ்லாத்தின் மனித உரிமைகள் தொடர்பில் விரிவாக ஒப்பிட்டு ஆய்வு செய்ய முன் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை நோக்குதலே சிறப்பாகும். சிலர் அவர்கள் வாழும் சமூகத்தின் நடைமுறைகளை வைத்து மார்க்கத்தைத் தீர்மானித்திடக் கூடாது என்பதனாலாகும். ஏனெனில் சில சமயம் இஸ்லாம் அழகிய மார்க்கம் என்றாலும் முஸ்லிம்கள் அதைச் சுற்றியுள்ள முல் வேளிகள் என்றும் கூறி விடுகின்றனர்.

"புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோஇ மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாகஇ பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள்,கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை,இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும்இ உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்) (அல்-குர்ஆன் 2:177).”

உலகில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட சட்டவாக்கங்கள் போலன்றி இஸ்லாம் இறைவேதமான அல்-குர்ஆனையும் சுன்னாவையும் அதில் பாண்டித்தியம் பெற்ற மாமேதைகளின் வழிகாட்டலுடன் கையாளப்பட வேண்டும் என்ற நியதியை நிலைப்படுத்துவதன் மூலம் எவராலும் மாற்ற முடியாத சட்டக்கோவைகளைக் கொண்டு ஆட்சி செய்வதை வற்புறுத்துகின்றது. தனிநபர் ஆதிக்கத்தின் மூலம் அநீதி இழைக்க சந்தர்ப்பம் கொடுக்காததே இஸ்லாமிய ஷரிஆ சட்டவாக்கமாகும்.

"எவர் அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 2:174)”.

இஸ்லாமிய மார்க்கமானது உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு முதலில் கடமைகளைக் கொண்டு வற்புறுத்துகின்றது. பிற கொள்கைகளில் குறிப்பிடப்பட்ட தத்துவங்களுக்கு மாற்றமாக இஸ்லாம் தெய்வீக தன்மையை தார்மீகமாகச் சொல்கிறது. இதனால் எப்போதுமே தன்னை ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவனே நமக்கு நன்மையோ அல்லது தீமையோ நமது செயலுக்கு ஏற்ப கூலியாகத் தரப்போகிறான் என்ற இறை நம்பிக்கை மூலம் நம்பிக்கை சார் இறையச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்படக் கருவி (Video Camera) மூலம் ஒருவன் மேற்பார்வை செய்யப்படுகின்றான் என்றபோது பிழைகள் செய்யாதவன், தன்னை யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்ற நம்பிக்கையில் பிழை செய்யும் மனித இயல்பை மனிதனுக்கு இல்லாமல் செய்கிறது இந்நம்பிக்கை!

இறைவன் படைத்த படைப்புக்களில் மனிதனே உயரிய படைப்பு என்றும் மனிதனுக்காகவே இவ்வுலக அனைத்துப் படைப்புக்களும் என்ற அடிப்படையை வற்புறுத்துவதன் மூலம் மனிதனுக்கு உயரிய அந்தஸ்த்தை இஸ்லாம் தந்துள்ளது. இதனால் பிற உயிரினங்களுக்காக மனிதனைக் கொள்ளும் கோரக்கலாச்சாரத்தின் தோற்றத்திற்கே இடம் கொடுக்காத இறை நம்பிக்கையே இஸ்லாம். அதே போன்றே மனிதன் தனது உரிமைகளுக்காக மாத்திரம் போராடுபவனாக இல்லாமல் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், தனக்குத்தான் செய்ய வேண்டிய கடமைகள்,  பிற மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பிற உயிரினங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் இயற்கைக்கும் சுற்றுச் சூழலுக்கும் செய்ய வேண்டிய கடகைள் என மனிதன் மீதான கடமைகளையும் பொறுப்புக்களையும் குறிப்பிட்டுக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் இஸ்லாம் சட்டவாக்கம் செய்து சட்டவாட்சியை நிலைநாட்டுகிறது.

"மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (அல்-குர்ஆன் 29:69)”.

மனிதன் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

இது இறை நம்பிக்கை சார்ந்த விடயமாகும். மேலே குறிப்பிடப்பட்டது போன்று இறைவன் ஒருவன்இ அவன் எவர் மீதும் தேவையற்றவன்இ அவன் பெறவோ பெறப்படவோ இல்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை என்ற அடிப்படைகளை உறுதியாக நம்புவதுடன் அவனது சட்டங்களை ஏற்று நடத்தல். இந்த இறை விசுவாசத்தால் வெளிப்படைகயாவோ மறைமுகமாகவோ பாவச்செயல்களை அல்லது துரோகச்செயல்களை அல்லது அநியாயங்களைச் செய்வதில் மனிதன் தவிர்ந்து நடந்து கொள்கின்றான். (மேலதிக விளக்கத்திற்கு அல்-குர்ஆன் அத்தியாயம் 112 பார்க்க).

மனிதன் தனக்கு செய்ய வேண்டிய கடமைகள்

மனிதனை அல்லாஹ்வே அழகிய தோற்றத்தில் உறுப்புக்களை பொறுத்தமான வடிவங்களைக் கொடுத்து தனித்துவத்தோடு படைத்துள்ளான். ஒவ்வொருவருடைய தனித்தன்மையை விளங்கி தன்னைத் தான் மதிக்கின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது தனது மன உழைச்சலை இல்லாது செய்து தன்நம்பிக்கையைத் தருவதுடன் தன்னை பிறர் மதிக்கின்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றது. தன்னை இறைவன் அழகான வடிவில் படைத்துள்ளான் என்ற நம்பிக்கை வீணான எண்ணங்களையும் உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற தேவையற்ற நடைமுறைகளையும் இல்லாமல் செய்வதுடன் அவற்றிலான பக்க விளைவுகளை விட்டும் தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்கிறான். மேலும் அவன் மார்க்க போதனைகளைப் பின்பற்றி நடப்பதன் மூலம் தன்னை தண்டனையிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதும் ஒருவனது தலையாய கடமை என்கிறது இஸ்லாம்.

"ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும். (அல்-குர்ஆன் அத்தியாயம் 22:23).

"(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் அத்தியாயம் 22:23).

இது தவிர 'மனிதம்' என்ற தத்துவத்தை தன்னைத்தான் வாழ வைப்பதில் உணர்த்திக்காட்டுகிறது இஸ்லாம். பெறுமதியான உயிரானது தன் உடல் மீது ஆண்மாவாக இருந்தாலும் அல்லாஹ்வால் தரப்பட்ட உயிரை அதன் முடிவு இறைவனிடமிருந்து வரும்வரை அதனை மாய்த்துக் கொள்ளும் உரினை மனிதனுக்கு இல்லை என்று நிபந்தனை இடுவதன் மூலம் தற்கொலையை ஹராமாக்குகிறது இஸ்லாம்! உயிர் வாழ்வதற்கான உரிமையை இந்தளவு எந்த சட்ட ஏற்பாடுகளும் இதுவரையில் கொடுக்க வில்லை எனலாம். மாறாக சில நாடுகளின் அரசியல் யாப்புகளில் அடிப்படை உரிமைகள் சிவில்இ அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்று பட்டியலிடப்பட்ட போதிலும் வாழ்வதற்கான உரிமை என்பது வெளிப்படையாக குறிப்பிடப்படாமலே காணப்படுகின்றன.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (அயூதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்.'  (அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், புஹாரி – 1365)

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள்இ 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுஇ பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பதுஇ தற்கொலை செய்து கொள்வதுஇ பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)' என்று கூறினார்கள். (அனஸ்(ரலி) அறிவித்தார், புஹாரி – 2653)

மனிதன் சக மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

இது மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் ஒரு மனிதனின் உரிமை பிற மனிதனின் கடமையை நிறைவேற்றுவதிலேயே தங்கியுள்ளது. மனிதன் ஒரு சமூகப் பிராணியாகவே பார்க்கப்டுகிறான். மனிதனே குடும்ப மற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்கி ஒன்றரகக் கலந்து உறவாடுவதுடன் பரஷ்பர உறவையும் பேணி வாழ வேண்டி உள்ளான். ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்ட்ட மனிதன் சக மனிதர்களோடு சேர்ந்து சுமுகமாக சேர்ந்து வாழ்வதே 'மனிதம்' நிறைந்த உண்ணத வாழ்வாய் அமையும்.

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண்இ ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில்இ நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)

இஸ்லாத்தின் மிகப்பிரதான குறிக்கோள் நீதமான சாசனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற சட்டவாட்சியை நிலைநாட்டுவதோடு எந்த வேற்றுமைகளுமின்றி சிறுவர்கள்; பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள், வாலிபர்கள், வயோதிபர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார், கணவன் மற்றும் மனைவி என்று நின்று விடாமல் ஏழைகளின் உரிமைகள் மற்றும் பிற மத அன்பர்களுக்கான உரிமைகள் என்று எல்லா தரப்பினரையும் உள்ளடக்கியவாறு மனித உரிமைகள் தொடர்பான சட்டவாக்கம் செய்வதே இஸ்லாத்தின் சிறப்பம்சமாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்கள் இந்த கட்டுப்பாடுகளை வாழ்வில் எடுத்து நடப்பதுடன் கட்டுப்பட்டும் நடக்கத்தவறுவதானது தண்டனைக்குரிய குற்றம் என்பதே இறை நம்பிக்கையாகும். அவ்வாறு ஒருவர் குறிப்பிடப்பட்ட மனித உரிமைகளை மீறுவாரேயானால் அவர் அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்று நடக்க விரும்பாதவர் என்றே கணிக்கப்படுவார். இதனாலேயே இஸ்லாமிய ஷரீஆ சட்டம் முழுமையாக நடைமுறைப்படுகின்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைந்து காணப்படுகின்றன என்பதை எந்தவொரு நடுநிலை சிந்தனைவாதியும் ஏற்றுக்கொள்ளவே செய்வர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. (இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்இ புஹாரி – 6011)

மனிதன் பிற படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

உலகின் படைப்பினங்கள் யாவும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. புவியின் மேற்பரப்பில், காட்டில் , கடலில் மற்றும் எல்லா மிருகங்கள், பறவைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் என அனைத்தும் மனிதனுக்கே. ஆயினும் மனிதன் தான் விரும்புகின்றபடி அவற்றை துன்புறுத்தவோ அல்லது வேதனைப்படுத்தவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ அனுமதியில்லை. மாறாக உணவுக்காக குறிப்பிட்ட பிராணியை அறுப்பதாக இருப்பினும் அதற்குரிய பொறுத்தமான வழிமுறைகளையும் ஜீவகாருண்யத்தையும் இஸ்லாம் கண்டிப்பாக நடைமுறைப் படுத்துவதுடன் அந்த நிபந்தனைகள் பேணப்படாமல் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சி முஸ்லிம்கள் உண்பதற்கு ஹராம் என்கிறது இஸ்லாம்.

"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்இ தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (அல்-குர்ஆன் 6:38)

இஸ்லாம் எல்லா படைப்பினங்களுக்கும் உயரிய அந்தஸ்த்தை கொடுக்கின்றது. பிற மத கலாச்சாரத்தில் உள்ளது போன்று காளைமாடுகளை நோவினை செய்தல், சேவல்களை போட்டிக்கு விட்டு வேடிக்கை பார்த்தல, பிராணிகளை இரக்கமற்ற முறையில் அறுத்தல, சூடு வைத்தல், மிருகத்தனமாக அடித்தல், சக்திக்கு மேற்பட்ட சுமைகளை நிர்ப்பந்தித்தல் இவற்றுக்கும் மேல் தேவையான அளவு உணவு மற்றும் தேவையான நேரத்தில் நீர் வழங்காமை போன்ற மிலேச்சத்தனமான காரியங்களையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புஹாரி – 3482)

ஆனால் இன்றைய காலத்தில் சடவாத ஜனநாயக சட்டவாக்கம் நடைமுறையில் மதச்சார்பற்ற நாடுகள் என்றும் மனித உரிமைகள் மேலோங்கிய நாடுகளிலும் பிற மிருகங்களுக்காக மனிதன் படுகொலை செய்யப்படும் தலைகீழ் நிலை தோன்றியமையானது பகுத்தறிவுவாதத்தையும் எல்லா மத கோட்பாடுகளையும் சட்ட ஏற்பாடுகளையும் தாண்டி நடக்கின்ற கொடூரங்கள் இறைவன் மீது அச்சம் கொள்ளாத ஆட்சியாளர்கள் உருவாக்கப்பட்டதன் விளைவுகளுக்கு மாபெரும் உதாரணமாகும். கண்களை இரத்தச்சொட்டுக்கள் முற்றுகையிடும் நினைவுகளே!!

மனிதன் சுற்றுச்சூழலுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

அல்லாஹ் மனிதன் வாழும் சூழலை இயற்கையால் அழகாய்ப் படைத்துள்ளான். ஆனால் நாம் இன்று புவி வெப்பமடைதல் போன்ற பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இப்பாதிப்புகள் மனிதனே சூழலைப் பயன்படுத்தினான் என்ற வகையில் நாமே பொறுப்புக்கூற வேண்டும். அவற்றுக்குரிய கடமைகளை சரிவர செய்யவில்லை என்பதே உண்மை.

"அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. (அல்-குர்ஆன் 16:11)

எனவே இன்றைய ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக மனிதனால் மனிதனுக்கு சில சட்ட நியதிகளும் விழுமியங்களும் உருவாக்கப்பட்டாலும் மிலேச்சத்தனமான பிற மிருகங்களுக்காய் மனிதன் கொல்லப்படுகின்ற நிலையோ அல்லது மனிதர்கள் கழியாட்டங்கள் என்று கூறி மிருகங்களை வதைக்கின்ற ஜீவகாருண்யம் அற்றுப்போன நிலையோ அல்லது மனிதன் வாழ அடிப்படை இன்னோரன்ன பயன்பாடுகளைத் தருகின்ற சூழலோ வெகுவாக பாதித்தே காணப்படுகின்றன. ஆனால் இன்றைய காலத்தில் எது மனிதனின் சுமுக வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள் என்று சட்டவாக்கம் பெறுகின்ற்னவோ அவை யாவும் இற்றைக்கு ஏறத்தாழ 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாம் அறிமுகம் செய்து இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களை முழுமையாக பின்பற்றுகின்ற சவுதி அரேபியா போன்ற நாடுகள் மனித நேயம்இ ஜீவகாருண்யம்இ மனித உரிமைகள் மீறப்படாத சுமுகமான நடைமுறையென வெற்றி கண்டுள்ளமையானது இஸ்லாமிய ஷரிஆ சட்ட முறைமைகள் நடைமுறைச்சாத்தியமான மனித இயல்புக்கு சாலப்பொருத்தம் என்பதே நடுநிலை சிந்தனையாளர்களின் நோக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Mohamed Jesmil A.G.
இஸ்லாமும் மனித உரிமைகளும், பாகம் 3 இஸ்லாமும் மனித உரிமைகளும், பாகம் 3 Reviewed by Madawala News on 7/15/2017 08:51:00 AM Rating: 5