Ad Space Available here

அஸ்கிரிய பீடத்தின் தௌிவான விளக்கம் பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.


அஸ்கிரிய பீடத்தினர் ஒரு தெளிவாக விளக்கத்தை நாட்டு மக்களுக்கு முன்வைத்துள்ளனர். இது பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் அனுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவருமான வீரகுமார திசாநாயக்கா தெரிவித்தார். (1.7.2017)

கண்டியில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

நல்லாட்சி அரசு இன்று வீடு செல்லும் ஆட்சியாக மாறியுள்ளது. அதாவது ‘யகபாலன’ இன்று ‘யனபாலன’யாக மாறியுள்ளது. காரணம் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுன் சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம், ஊழலலுக்கெதிரான ஆட்சி, அமைதி, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, துரித அபிவிருத்தி என்றெல்லாம் பேசப்பட்டது. இன்று அவை அனைத்தும் மறந்து தமது மனம் போன போக்கில் செல்லும் ஒரு அரசாக மாறிவிட்டது.


கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடுத்து நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டு பல்வேறு கற்பனைக் கதைகளும் கூறப்பட்டன. புதிய மாற்றத்தின் அத்திவாரம் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்று அந்த மாற்றத்தை வைத்தே அரசை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சட்டம் நீதி என்ற அடிப்படைகளை தமக்குத் தேவையான வற்றை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு ஆயுதமாகியுள்ளனர். தமக்கு வேண்டாதவர்களை கைது செய்யவும் வேண்டியவர்களை விடுதலை செய்யவுமே சட்டம் பயன் படத்தப்படுகிறது. நிதிக் குற்றவியல் பொலீஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கோவைகள் தயார் செய்யப்பட்டு அதனூடாக தமக்குத் தேவையான விதத்தில் செயற்படுத்துகின்றனர்.

எதிர்வரும் 2020 வரை இவ்ஆட்சி நீடிக்கப்படும் எனக் கூறுகிறார்கள். அதுவரை தாமதிக்க முடியாது. 2020 வரை ஆட்சியை நீடிக்க அமேரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தேவை இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களாகிய எங்களால் அது வரை தாமதிக்க முடியாது.

ஏனெனில் 2020 ல் துண்டாடப்பட்ட ஒரு நாடே எஞ்சும். தற்போதைய தலைவர்கள் எவரும் மிஞ்ச மாட்டார்கள். அப்படியான ஒரு நாடு எமக்குத் தேவையில்லை. அதற்கு முன் நாட்டை பாதுகாக்க வேண்டும்.

எமது அஸ்கிரிய பீடத்தினர் ஒரு தெளிவாக விளக்கத்தை நாட்டு மக்களுக்கு முன்வைத்துள்ளனர். இது பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் என்றார்.

கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் திலும் அமுனுகம தெரிவித்ததாவது-

தகவல் அறியும் சட்ட மூலம் சரியாகத் தொழிற்படுகிறதா என்பது சந்தேகம். சரியாக தகவல்களைப் பெறமுடியாதுள்ளது. உதாரணமாக கண்டியிலுள்ள இராணுவ முகாம் ஒன்று விற்கப்படப் போவதாக ஊடகங்கள் தெரிவித்தன. அது தொடர்பாக தகவல் அறியும் சட்டம் ஊடாக எதனையும் பெமுடிய வில்லை. இராணுவத் தளபதி அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இராணுவ முகாம் அமைந்துள்ள இடம், தபாலகக் கட்டிடம் போன்ற வற்றை விற்பனை செய்யப் போவதாகக் கூறப்படும் தகவலை ஊடகங்களே வெளிப்படுத்தின.

இந்த அரசை ஆட்சி பீடமேற்றியவர்களே இன்று அதிகம் கவலைப்படுகின்றனர். முஸ்லிம்கள் மிகவும் மனம் நொந்து போயுள்ளனர். இந்த ஆட்சியைக் கொண்டு வர பிரயத்தனம் எடுத்த கட்சியான ஜே.வி.பி. தனக்கு எதுவும் தெரியாதது போல் உள்ளனர். தற்போதைய பாராளு மன்றில் எதிர்கட்சித் தலைவராக இருக்க சம்பந்தனுக்கு எதுவித தார்மீக கடற்பாடும் கிடையாது.

ஏதோ நாம் ஒரு சிலர் இணைந்து எதிரணியை தோற்று விக்கா விட்டால் மூன்றில் இரண்டல்ல, மூன்றில் மூன்று பெரும்பான்மைப் பலம் அரசுக்கிருக்கும். இதனூடாக எல்லா சட்டமூலங்களையும் நிறைவேற்றி நாட்டில் எந்த சொத்தும் எஞ்சி இருக்காது, எல்லாவற்றை தீர்த்து முடித்திருப்பர். 58 இலட்சம் மக்களது குரலுக்கு பதில் அளிக்கும் ஒரு ஆட்சியை இன்று மக்கள் வேண்டி நிற்கின்றனர் என்றார்.
மத்திய மாகாண சபை அங்கத்தவர் நிமல் பிரேமவன்ச  உற்பட இன்னும் பலர் உரையாற்றினர்.
 
அஸ்கிரிய பீடத்தின் தௌிவான விளக்கம் பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். அஸ்கிரிய பீடத்தின் தௌிவான விளக்கம் பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். Reviewed by Madawala News on 7/01/2017 11:54:00 PM Rating: 5