Kidny

Kidny

ஆட்டங்காணும் அரசுக்குள் முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு என்ன?


-எஸ்.றிபான் -

நல்லாட்சி அரசாங்கம் விரைவில் ஆட்டங் கண்டு விடுமொ என்று எண்ணும் அளவிற்கு ஆளும் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐ..தேவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. ஐ.தே.கட்சி சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே காணப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் அணி எனும் பிரிவினையைப் பயன்படுத்தி தனியாக ஆட்சி அமைப்பதற்கு எண்ணுகின்றார்கள்.

இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியினரில் ஒரு சாரார் மஹிந்தராஜபக்ஷவுடன் சமரசம் செய்து தனியாக ஆட்சி அமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு தாம் முடிவு எடுத்துச் செயற்பட்டால் அது மஹிந்தராஜபக்ஷவின் செல்வாக்கு அரசாங்கத்திற்குள் மோலோங்கி தாம் ஒரு சூழ்நிலை கைதி போன்று இருக்க வேண்டியேற்படும் என்ற எண்ணப்பாட்டை மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார்.

இந்த கயிறு இழுப்புக்கு மத்தியில் அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தினை யாரும் அசைக்க முடியாது. 2020ஆம் ஆண்டு வரை இன்றைய அரசாங்கம் நிலைத்திருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல்களை ஒத்தி போடல்

உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்துள்ளன. ஆயினும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். பாராளுமன்றத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்; உறுப்பினர்களுள் 44 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், 51 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவோடும் உள்ளார்கள். அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தராஜபக்ஷவுக்கு இன்னும் செல்வாக்கு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் மஹிந்தராஜபக்ஷவின் அணியினர் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரைச் சார்ந்தவர்களும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவதற்கு அச்சங் கொண்டுள்ளார்கள்.


இதே வேளை, 106 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐ.தே.க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் காணப்படும் முரண்நிலையை பயன்படுத்தி உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மைத்திரி அணி என்றும், மஹிந்த அணி என்றும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தும் போது அக்கட்சியின் வாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டுவிடும். இதனால், அவ்வணிகளினால் பெரும்பான்மையைப் பெற முடியாது.


ஆதலால், ஐ.தே.க பெரும்பான்மையைப் பெற்று உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளலாம் என்பதே பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் திட்டமாகும். ஆயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.


ஜனாதிபதி தரப்பினர் தமது இந்தப் பலவீனத்தை வெளிகாட்டிக் கொள்ளாது புதிய முறையில் தேர்தலை நடத்துதல் வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகள், தேர்தல் நடத்தும் கலப்பு முறையில் உள்ள விகிதாசாரம் போன்றவற்றை தீர்மானிப்பதற்கும், அதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளைக் காண்பதற்கும் இரண்டு வருடங்கள் கழிந்தும் முடிவு காணப்படவில்லை என்றால் இதன் பின்னணியில் வேறு அரசியல் காரணிகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.
.

மேலும், தேர்தலை சந்திப்பதில் தயக்கம் உள்ளதென்பது கிழக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் 2017 செப்டம்பர் 28ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இம்மாகாண சபைகளின் தேர்தலைக் கூட நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது. மாகாண சபைத் தேர்தலில் கூட மஹிந்தவின் செல்வாக்கு தங்களை பின்னுக்கு தள்ளிவிடுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைத்திரிபால சிறிசேன அணியினர் இத்தகையதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள். இதனாலதான், டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டிய கிழக்கு மாகாண சபை, சப்பிரக்கமுவ, வடமத்தி மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதுள்ளது.


இதே வேளை, மேற்படி மூன்று மாகாண சபைகளின் ஆயட்காலம் முடிவடைந்தாலும் எல்லா மாகாண சபைகளின் தேர்தலகைளையும்  ஒரே நேரத்தில் நடத்துவதுதான் சிறந்தது. தனித்தனியே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன என்று தேர்தலை பிற்படுத்துவதற்கு காரணம் கூறப்படுகின்றது. இதே வேளை, 2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு தேர்தலை ஒத்தி போடுவது ஒரு வகையில் ஜனநாயக விரோத செயற்பாடாகக் கூட கருதலாம். உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்தாது பிற்போட்டுக் கொண்டிருப்பதனால் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குப்பைகளை எடுப்பதில் கூட மிகுந்த காலதாமதங்களும், மோசடிகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மோசமாகக் காணப்படுவதற்கு பிரதான காரணம் அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் அசமந்த நிலையும், பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீடுகமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றன.

முஸ்லிம் கட்சிகள்

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் கட்சிகளுக்கு ஒரு நிலையான கொள்கையை அவதானிக்க முடியவில்லை. முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தலையாட்டும் நிலையிலேயே உள்ளது. முஸ்லிம் கட்சிகள் கூட தேர்தல் பிற்போடப்படுவதனையே விரும்புகின்றன. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மிக மோசமான வகையில் உள்ளக முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. இதனால் கட்சியின் செல்வாக்கில் கூட கீறல்கள் விழுந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் இக்கட்சியின் செல்வாக்கில் எதிர்மறை தோன்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் தலைவர் கலந்துது கொண்ட ஒரு சில கூட்டங்களின் போது சிறிய அளவில் கூச்சல் போடப்பட்டுள்ளன. இவை அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் வரலாற்றில் புதிய நிகழ்வுகளாகும். இதனால், கட்சிக்குள் காணப்படும் முரண்பாட்டு நிலை எதிர் விளைவுகளை தோற்றுவித்துக் கொண்டிருப்பதனால் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும் வரைக்கும் உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்படுவது மு.காவிற்கு தேவைப்பட்டதொன்றாகவே உள்ளது.


இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கட்சியினர் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை தனியாக சந்தித்து உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பெற வேண்டுமென்று திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு கட்சியின் செயலாளர் நியமனத்தில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட வேண்டும். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸார் உள்ளார்கள். இதனால் இவர்களுக்கும் தேர்தல் பிற்போடப்படுவது தேவையான ஒன்றாகவே உள்ளது.


இதே வேளை, ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை ஐ.தே.கவின் யானைச் சின்னத்திலேயே சந்திக்க வேண்டுமென்று கேட்டுள்ளார். இதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஆயினும், இக்கட்சிகள் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை தனித்தும், மாகாண சபைத் தேர்தலை இணைந்தும் போட்டியிடுவதற்கு கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாகினால் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் தேர்தலை தனியாக சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பலவீனப்படுத்தல்

இதே வேளை, அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று பலவீனப்படுத்தும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.தே.க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் காணப்படும் முரண்பாடுகளையும், பிளவுகளையும் மேலும் பிளவுபடுத்துவதற்கு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை ஒற்றுமைப்படுத்தி ஐ.தே.கவை பலவீனப்படுத்த வேண்டுமென்று சுதந்திரக் கட்சியினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.


மு.காவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள், முரண்பாடுகளைப் பயன்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீனோடு பௌத்த இனவாதிகள் மோதிக் கொண்டிருப்பது மிகுந்த சாதகமாக அமைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்காக அவர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரை அடக்குவதற்கு பௌத்த இனவாதிகள் சதிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றதொரு எண்ணம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.


மறுபக்கத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், பிளவுகளினால் கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டும் தூரமாகி விடக் கூடாதென்பதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி கிழக்கு மாகாணத்திற்;கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கொண்டிருக்கின்றார். பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்குரிய ஆரம்ப கட்ட வேலைகளை மேற்கொண்டுள்ளார். அண்மையில் வட்டமடு பகுதிக்கு விஜயம் செய்தமையும் இதற்கு உட்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகும்.

இவ்வாறு ஒவ்வொரு அரசியற் கட்சியும் தமது சொந்த திட்டமிடலில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்களுக்கும், நாட்டிற்கும் நஸ்டமாககிக் கொண்டிருக்கின்றது.

நன்றி- விடிவெள்ளி 28.07.2017
ஆட்டங்காணும் அரசுக்குள் முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? ஆட்டங்காணும் அரசுக்குள் முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? Reviewed by Madawala News on 7/30/2017 09:04:00 AM Rating: 5