Kidny

Kidny

அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

எல்லோரும் எல்லாமும் இருந்தும் அல்லாஹ்வை இழந்தவன்/ள் இன்மை மறுமை வாழ்வு இரண்டையும் இழந்து விடுகிறான்/ள்.

இணை வைப்பவன் இறைவனுடன் உறவை துண்டித்துக் கொள்கிறான், தாய் தந்தை, இனபந்துக்கள் உறவை முறித்தவன் உறவை இறைவன் துண்டித்துக் கொள்கிறான்.

பெற்றோருக்கு துரோகமிழைப்பவர் சுவனம் செல்வதில்லை, அவரது எந்த நல் அமலும் வானிற்கு உயர்த்தப் படுவதில்லை, ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

ஒரு முறை இறை தூதர் முஹம்மது ஸல் அவர்கள் மிம்பரில் ஏறும் பொழுது ஒவ்வொரு படியிலும் ஆமீன் சொன்னார்கள், சஹாபாக்கள் அது பற்றி வினவிய பொழுது, ஹஸரத் ஜிபிரீல் அவர்கள் கேட்ட ஒவ்வொரு துஆவிற்கும் ஆமீன் சொன்னேன் என்கிறார்கள், எனது பெயர் மொழியக் கேட்டும் என்மீது ஸலாவாத் சொல்லாதவர், ராமழானை அடைந்தும் பாவ மன்னிப்பை பெறாதவர், வயதான தாய் தந்தையரை கவனித்து சுவன பாக்கியம் பெறாதவர் என ஒவ்வொருவராக கூறி அவர்கள் நாசமாகட்டும் என துஆ செய்ததாகவும் அதற்கு இறைதூதர் ஸல் ஆமீன் சொன்னதாகவும் ஹதீஸில் வருகின்றது.


பெற்றோர்களோடு பணிவன்போடு நடந்து கொள்ளுங்கள் பற்றோர்களை "ச்சி" என்று கூட கடிந்து கொள்ள வேண்டாம், அவர்களை ஏச வேண்டாம், உலக வாழ்வில் அவர்களோடு (முஸ்லிமல்லாதவர்களாயினும் இணைவைப்பு மற்றும் பாவங்களின் பால் உங்களை தூண்டாத வரையில்) நல்லுறவைப் பேணி வாழுங்கள், என்றெல்லாம் அல் குரானும் அஸ்ஸுன்னாஹ்வும் அழகிய உபதேசங்களைக் கூறியுள்ளன.

வயது முதிர்ந்த பெற்றோர்களை கவனிக்காது ஒருவர் புனிதப் போரிலும் கலந்து கொள்ள அனுமதியில்லை.

அவர்கள் சிறுவயதில் எங்கள் மீது கருணை காட்டியது போல் இராட்சகா அவர்கள் இருவர் மீதும் கருணை காட்டுவாயாக. என பிரார்திக்குமாறு அல் குரான் சொல்லித் தருகின்றது.


நாம் குழந்தைகளாய் இருந்த பொழுது நிபந்தனை இல்லாத கருணை, வாய்பேச முடியாத பொழுதும் எதையும் முறையிடவோ, கேட்கவோ முடியாத பொழுதும் எமது சின்னச் சின்ன உணர்வுகளையம் புரிந்து எம்மை ஊட்டி வளர்த்த, எம்மை தோள் மேல் சுமந்து வளர்த்த அவர்களது உணர்வுகளை புரிந்து தேவைகளை அறிந்து அவர்கள் மீது கரிசனை கொள்வது எமது கடமையாகும்.

தங்களை விடவும் கல்வியிலும் செல்வத்திலும் அந்தஸ்திலும் எங்களை உயர்த்தி அழகு பார்க்க அத்தனையையும் அள்ளித் தந்த அவர்களுக்கு கிள்ளித் தரவோ, அல்லது அவர்களை தள்ளி வைக்கவோ எங்கள் மனம் எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கக் கூடாது.


இறை நிராகரிப்பு அநீதி இழைத்தல் போன்ற நியாயமான காரணங்களுக்காக அன்றி கணவருக்காகாக மனைவியோ மனைவிக்காக கணவரோ பெற்றோர்களை உறவுகளை விட்டுக்கொடுத்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கைத் துணைவரை அல்லது துணைவியை தெரிவு செய்கின்ற பொழுது அதுவே முதலாவதும் முடிவானதுமான நிபந்தனையாக இருக்கட்டும், அப்பொழுது தான் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சிவாழ்கின்ற அறவழி நடக்கின்ற சந்ததிகள் உங்களிற்கும் தோன்றுவார்கள்.


பணத்திற்காக, அழகிற்காக, சொத்து சுகங்களிற்காக, வர்க்க பரம்பரை அந்தஸ்திற்காக அல்லது அவர்களது சன்மார்க்கப் பற்றிற்காக வாழ்க்கைத் துணையை ஒவ்வொருவரும் தேடுகின்றார்கள், ஆனால் சான்மார்க்க ப்ற்றுள்ளவரை அடைந்துகொண்டோர் நிச்சயமாக அதிஷ்டசாலிகள் என்பது நபிமொழி.

அல்லாஹ்வை அஞ்சாத, அறவழி நடக்காத பணக்கார துணைவரோ துணைவியோ, அழகான ஆண்மகனோ, பெண்மகளோ, பரம்பரை வர்க்க அந்தஸ்துகள் உடையவர்களோ வாழ்வில் நிரந்தரமான நிம்மதியை சந்தோஷத்தை தந்துவிடமாட்டர்கள், சிறந்த குடும்ப பாரம்பரியங்களை பேணி சந்ததிகளை உருவாக்க மாட்டார்கள், அவர்கள் ஈருலக வாழ்விலும் இழப்பிற்கே வழி சமைப்பார்கள்.


பணம், அழகு, அந்தஸ்து இருக்கின்ற சன்மார்க்கப் பற்றுள்ளோரை துணைவர்களாகவோ, துணைவிகளாகவோ அடைந்து கொள்ள வேண்டாம் என்பது பொருளல்ல ஆனால் அவர்களது சன்மார்க்கப் பற்றினை அறிந்து அவர்களை கரம்பிடிப்பதே வளமான ஈருலக வாழ்விற்கும் வழிவகுக்கும்.
அவர்களுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் அல்லாது ஏனையகுடும்ப உறுப்பினர்களுக்கு சேரவேண்டிய வற்றையும், அண்ணன் தம்பிமார்கள் உழைப்பையும் வரதட்சனை சீதனம் சீர்வரிசை என சுரண்டிக்கொண்டு மார்க்கப்பற்றையும் எதிர்பார்ப்பது பகல் கனவுபோன்ற விடயமாகும்!
அதேபோன்றே பெற்றார், உடன் பிறப்புக்கள், உறவினர்கள் கண்களில் மண்ணைவாரிவிட்டு குடும்ப சமூகபாரம்பரியங்களை சினிமாத்தனமாக சீரழித்து மார்க்கப்பற்றுள்ள துணையை தாமாக தேடிக்கொள்வதும் ஒரு பொழுதும் இஸ்லாமிய வரைமுறைகளுடன்கூடிய மணவாழ்வாக முடியாது.


திருமணம் என்பது முந்திய தலைமுறையினரையும் பிந்திய சந்ததிகளையும் இணைக்கின்ற உறவுகளை பந்த பாசங்களை கட்டிக்காக்கின்ற அன்பை, புரிந்துணர்வை, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துகின்ற ஆயிரம் காலத்துப் பயிராகும், அது வெறுமனே ஒரு சம்பவமல்ல மாறாக சரித்திரமாகும்!
எமது உதவிகள், காசு, பணம் என்பவற்றை விட அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களோடு உரையாடி உறவாடி, அருகாமையில் பணிந்து பரிவு காட்டுவதையே அவர்கள் விரும்புவார்கள்,

அவர்கள் தனிமைப் படுத்தப் படுவதனை, அல்லது புறக்கணிக்கப் படுவதனை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.


பெற்றோர் தமது பராமரிப்பில் இருக்கின்றார்கள், அவர்கள் எங்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றார்கள் என்ற மன நிலை எவருக்கும் வரவே கூடாது, அவர்களது இரக்க சிந்தனை, அவர்களது இயலாமை என்பவற்றை பயன்படுத்தி அவர்களை தமது குழந்தைகள் பராமரிக்கும் சேவைகர்களாகவோ, வீட்டு வேலைக் காரர்களாக்வோ கட்டுப்பாடுகள் விதித்து அல்லது எதிர்பார்த்து நாம் அவர்களை நடாத்தக் கூடாது.


எல்லா சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு தரப் பட வேண்டிய முன்னுரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கவோ, மறுக்கவோ கூடாது, எமது பிள்ளைகள் அவர்களது பேரக் குழந்தைகள் , அவர்கள் மீது அன்பு காட்டவும் அவர்களை மதித்து நடக்கவும் நாம் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
நாளை நாமும் தாய் தந்தையர், மாமனார், மாமியார், தாத்தா பாட்டியாவோம் என்பதனை ஆழமாக மனதில் கொண்டு ஒவ்வொரு கணவனும் மனைவியும் எந்த்வொரு சூழ் நிலையிலும் தத்தமது பெற்றோர்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதனையும் அந்த அழகிய பாரம்பரியத்தை தம்மிடம் இருந்து குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதனையும் மனத்திலிருத்திக் கொள்ளல் வேண்டும்.


யா அல்லாஹ் எமது பெற்றார்களது பாவங்களை மன்னித்து, அவர்களது நல் அமல்களை அங்கீகரித்து அவர்கள் மீதுகருணை காட்டுவாயாக!

எங்களை விட்டும் பிரிந்து சென்றுவிட்டவர்களை உனது மேலான சுவனத்தில் சேர்த்து விடுவாயாக, எங்களோடு வாழ்கிறவர்களுக்கு நீண்ட ஆயுளையும் பூரண ஆரோக்கியத்தையும், மன நிறைவையும் வழங்குவாயாக..!
அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on 7/28/2017 02:52:00 PM Rating: 5