Ad Space Available here

ஊடகங்கள் மீது குற்றம் சாட்டும் ஜனாதிபதி ... சமகால அரசியல் செயல்பாடுகளை போட்டுத்தாக்குகிறார் லத்தீப் பாருக்.


லத்தீப் பாரூக்

அரசாங்கத்தை விமர்சிப்பதாக ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ,  மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஊடகவிலாளர்கள் அனுபவித்த துன்பங்களை மறந்து விட்டனர் என்று அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துக்கு சுதந்திரம் வழங்கியது தனது அரசு தான் என்றும் தனது ஆட்சியில் தான் ஊடகங்கள் விடுவிக்கப்பட்டு தற்போதைய சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகத் துறை உற்பட இன்னும் பல பிரிவுகளில் மகிந்த ராஜபக்ஷவின் கைக்கூலிகள் இன்னமும் வியாபித்துள்ளனர் என்பது உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயம். அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த இந்தத் துறைகள் சார்ந்த எல்லோருமே ஏதோ ஒரு வழியில் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

எவ்வாறாயினும் ஊடகங்கள் உள்நாட்டு உண்மைகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்த உண்மைகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். ஊடகங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த ஒட்டு மொத்த நாட்டையும் அவல நிலைக்கு கொண்டு வந்தவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களின் உணர்வுகளாகவே அவை உள்ளன.

இந்த அரசுக்கு ஆதரவளித்த ஊடகங்களும் மக்களும் இப்போது மிக ஆழமான ஏமாற்றத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மிக மோசமான ஊழல்கள், மோசடிகள், குற்றங்கள். கொலைகள், நாட்டின் செல்வத்தை சூறையாடல் என பல செயல்களுக்கு காரணமாக இருந்தவர்களை இந்த அரசாங்கம் இன்னமும் விட்டு வைத்துள்ளதோடு மட்டுமன்றி அவர்களில் பலரை காப்பாற்றி வருவதும் இந்த அரசின் மீது மக்கள் விரக்கி அடைய முக்கிய காரணமாகும். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் அறிக்கைகளைப் பார்க்கின்ற போது தேசப்பற்றாளர்கள் என தம்மை இனம் காட்டிக் கொள்ளும் இந்தப் பிரிவினர் நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக் கொண்டு தங்களை தாங்களே அபிவிருத்தி செய்துள்ளமையைத் தான் காண முடிகின்றது.


அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், ஸ்டேடியம், மாநாட்டு மண்டபம், கொழும்பு துறைமுகம் என பல விடயங்களில் நாட்டின் செல்வம் சொற்ப விலைக்கு வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ள நிலையையே அவதானிக்க முடிகின்றது. இந்தத் திட்டங்களால் நாட்டின் கடன்கன் அதனால் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. நிதி ரீதியாக நாடு இப்போது வெளிநாட்டு கம்பனிகளிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ நிர்வாகம் மக்களால் தூக்கி எறியப்படுவதற்கு இதுவே பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது.


தற்போது இந்த அரசாங்கத்தின் கீழ் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் மக்களை பெரும் ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது. இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடக் கூடாது என்ற கவலையோடு மக்கள் நிலைமைகளை அவதானித்து வருகின்றனர். நல்லாட்சி என்ற சுலோகத்தோடு ஆட்சியைக் கைப்பற்றிய இன்றைய அரசு ஏன் நாட்டை சூறையாடியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறி விட்டது? என்பதுதான் மக்கள் எழுப்பும் பிரதான கேள்வி.

ராஜபக்ஷ அரசு மீண்டும் பதவிக்கு வந்து விடக் கூடாது எனக் கருதும் மிகவும் பொருப்பு வாய்ந்த ஊடகவியலாளர்கள் ஊடகங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முனையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர். மாறாக அவை அரசின் இயலாமையை சுட்டிக் காட்டுகின்றன. காலம் கடந்தாவது அரசாங்கம் விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் அவை செயற்படுகின்றன.

எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் அழிவுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை இன்னமும் அவர்களிடம் காணப்படுகின்றன.


எதையுமே செய்யாமல் இருப்பது என்ற அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை துரதிஷ்டவசமாக நாட்டுக்கு அளித்த வாக்குறுதியை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என்ற அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. இதன் விளைவு அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சதி செய்வதாக சந்தேகிக்கப்படும் சதிகார கும்பலின் பிடியில் விரும்பியோ விரும்பாமலோ இந்த அரசாங்கம் வீழ்ந்து விட வழி வகுத்து விடக் கூடும். அப்படி ஒன்று நடப்பதை ஊடகங்களும் விரும்பவில்லை.

அதனால் தான் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகளை அவை சுட்டிக்காட்டுகின்றன. அரசாங்கம் விழித்துக் கொண்டு யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான் அவை அவ்வாறு செய்கின்றன.
ஒவ்வொரு சமூகக் கூட்டங்களிலும் அமர்வுகளிலும் எழுப்பப்படுகின்ற பிரதான கேள்வி ராஜபக்ஷ அரசில் செழிப்போடு காணப்பட்ட கள்வர்களையும் கயவர்களையும் மோசடிப் பேர்வழிகளையும் ஏன் இந்த அரசாங்கத்தால் கைது செய்ய முடியவில்லை என்பதாகும்.

பிரபல றக்கர் வீரர் வஸிம் தாஜுதீனை கொலை செய்தவர்களை ஏன் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்த இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. முன்னைய அரசில் மட்டும் அல்ல இந்த அரசிலும் கள்வர்களினதும் கயவர்களினதும் ஆதிக்கம் காணப்படுகின்றது. அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனபதுதான் ஊடகங்களும் அடிக்கடி சுட்டிக் காட்டும் விடயமாகும்.

உதாரணத்துக்கு ஒன்றை மீண்டும் குறிப்பிடுவதாயின் சர்வதேச நாணய நிதியத்தால் வழிநடத்தப்படும்; நாட்டின் பொருளாதாரம் கிட்டததட்ட வங்குரோத்து நிலையை அடைந்துள்ள வேளையில், வெளிநாட்டுக் கடன்கள் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ள நிலையில், இந்த வெளிநாட்டுக் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 வீதமாக இருக்கின்ற நிலையில் மக்கள் தமது அன்றாட இருப்புக்காக சொல்லொணா துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஏன் மில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி அடிக்கடி எழுப்;பப்படும் கேள்வியாகும்.


சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையில் கொழும்பு ஒரு நிதி கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற வெற்றுச் சுலோகங்களைக் கேட்டு கேட்டு மக்களுக்கு புளித்துப் போய்விட்டது.

1950 களுக்கு முன் முழு இலங்கையும் நிதி நிலையம் என்ற நிலைக்கும் அப்பாற்பட்ட ஒரு நாடாக இருந்தது. காலஞ்சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ சிங்கப்பூரை இலங்கையாக மாற்றுவேன் என்று ஒரு காலத்தில் கூறிவந்தார். துபாய் என்பது அப்போது எவராலும் அறியப்படாத மீன்களை உலர வைக்கும் ஒரு வரண்ட பூமியாகவே இருந்தது.


பெரும்பாலும் எல்லா நிறுவனங்களுமே தவறாகவே முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளன. இன்று இந்த நாடே ஒட்டு மொத்தமாக தவறாக முகாமைத்துவம் செய்யப்படும் நாடாக உலக அரங்கில் காட்சி அளிக்கின்றது. இந்த நாட்டுக்கு இருக்கின்ற ஆசீர்வாதங்களை எல்லாம் மீறி இது அழிவை நோக்கிச் செல்லும் நாடாகவும் மக்கள் வாழ்வதற்கு இதற்கு முன்னர் கேள்வி படாத அளவுக்கு கஷ்டப்படும் ஒரு நாடாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றது.
சைட்டமுக்கும் அரச மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையிலான பிரச்சினை போன்ற சில பிரச்சினைகளை அவர்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மாணவர்கள் இந்த விடயத்தில் அடிக்கடி நடத்தும் போராட்டங்களால் மக்கள் அடிக்கடி துன்பப்படுகின்றனர்.

இவை மிக விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். எவ்வாறாயினும் அது நடக்கவில்லை. மாறாக அரச தலைவர்கள் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இரு தரப்பு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டு வருகின்றனர். ஆனால் இந்த உடன்படிக்கைகள் கூட வெளிநாட்டு முதலீடுகள் உற்பட இன்னமும் உறுப்படியான எந்த விளைவுகளையும் நாட்டுக்கு கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமரோ ஜனாதிபதியோ இன்று வரை பத்துலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்கியுள்ள வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று இதுவரை எண்ணவில்லை.

இவர்களிடம் இருந்து வருடாந்தம் கிடைக்கும் ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை இன்று நாட்டின் பொருளாதாரம் முறிவடைந்து விடாமல் பாதுகாக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு காலத்தில் பொருப்பும் நேர்மையும் வாய்ந்த அதிகாரிகள் அரசியல் வாதிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அண்மைக்காலங்களில் குறிப்பாக ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து தான் முக்கியமான நிலையங்களிலும் நிறுவனங்களிலும் பாரிய அளவில் கொள்ளை அடித்தனர்.


ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டாக சுனாமிக்கு கிடைத்த நிதியில் கூட 3.5 பில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னமும் விடிவு கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

சுதந்திரம் கிடைத்து ஏழு தசாப்தங்கள் கழிந்துள்ள நிலையில் கூட இன்னமும் இந்த நாட்டின் குப்பைகளை அகற்றும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு இல்லாதவர்களாகவே நாம் காணப்படுகின்றோம். சீரற்ற முகாமைத்துவம் காரணமாக ஒரு விமான சேவை இழுத்து மூடப்பட்டுள்ளது.


வெறுப்புணர்வை தூண்டும் குற்றங்களுக்கு முடிவு கட்டப்படும் என்ற வாக்குறுதியோடு இந்த அரசு பதவிக்கு வந்தது. பிளவுபட்ட சமூகத்துக்குள் நல்லிணக்கம் கட்டி எழுப்பப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை நடந்தது என்ன? இனவாத காடையர்கள் பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும் மீண்டும் தாக்கத் தொடங்கினர்.

அரசு மௌனமாக அதற்கு வழிவிட்டது.
அந்த காரணங்களால் தான் அரசாங்கத்தை மக்களும் ஊடகங்களும் விமர்சிக்கின்றன. அரசாங்கம் சோம்பல் நிலையில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் தன்னையும் அது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். (முற்றும்)

ஊடகங்கள் மீது குற்றம் சாட்டும் ஜனாதிபதி ... சமகால அரசியல் செயல்பாடுகளை போட்டுத்தாக்குகிறார் லத்தீப் பாருக். ஊடகங்கள் மீது குற்றம் சாட்டும் ஜனாதிபதி ...  சமகால அரசியல் செயல்பாடுகளை போட்டுத்தாக்குகிறார் லத்தீப் பாருக். Reviewed by Madawala News on 7/23/2017 12:32:00 PM Rating: 5