Yahya

நான்கு மாணவர்கள் படுகொலை பற்றி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் விவரித்த ராஜித்த..

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.


கேள்வி: 2008ஆம் ஆண்டு இளைஞர்கள், காணாமல் போன விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு குற்றம் சுமத்த முடியுமா? 


பதில்: சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞன் ஒருவர், மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு, செல்லவிருந்த முதல்நாள், நண்பர்களுடன் விருந்துபசாரத்தில், கலந்துகொண்டார். அதில், கலந்துகொண்டவர்களையே கடத்தி, கப்பம் கோரப்பட்டுள்ளது.  

கப்பம் கோரப்பட்ட தொகை கிடைக்கத் தாமதமாகியதால் தான் அவர்கள், கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பிலான அறிக்கை விவரங்களை நான் நன்கறிவேன். அந்த இளைஞர்களை ஒவ்வொரு இடங்களில் வைத்திருந்து திருகோணமலையில் பதுங்கு குழியில் வைத்திருந்தார்கள். அங்கு இவர்களுடைய துன்பத்தைக் கவனித்த கடற்படையினர் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள வாய்ப்பு அளித்துள்ளனர். அந்தத் தொலைபேசி ஊடாக அவர்களுடைய படங்களை பெற்றோருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் படங்கள் அனைத்தும் இருக்கின்றன.  

இந்த நான்கு இளைஞர்களும் கொல்லப்பட்டபோது ஒரு தந்தையாக, நான் கவலையடைந்தேன். இது தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் எடுத்துக் கூறினேன். புலிகள் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை இவ்வாறு கொலை செய்ய இடமளிக்க வேண்டாம் எனக் எடுத்தும் கூறினேன்.  

அப்போது, காணாமல்போனோருக்கான குழுவின் தலைவராக என்னை நியமித்தார். நானும் வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பாயிஸ், இராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினோம். காணாமல் போனோரின் உறவினர்கள் 50 பேரை, அலரி மாளிகைக்கு நான் அழைத்து வந்தேன்.  

இங்கே வருகைதரும் தாய்மார் தமது துயரங்களைச் சொல்லுவார்கள், உங்களை குறை சொல்லுவார்கள், சாபமிடுவார்கள், அமைதியாக இருங்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினேன். பிள்ளைகள், கணவன்மார், சகோதரர்கள், தந்தையர்களை இழந்தோரின் வேதனையை என்னால் உணர முடிந்தது என்றார்.  


கேள்வி: உமா ஓயா திடடத்துக்கு என்ன நடக்கிறது? 


பதில்: உமாஓயா திட்டம் கைவிடப்படமாட்டாது. சர்வதேச நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

உமா ஓயா திட்டம் 75 சதவீதமளவில் பூர்த்தியடைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அந்த திட்டத்தை நிறுத்த முடியாது. அதனால் முழுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிபுணர்களின் பரிந்துரைகளை எதிர்பார்த்திருக்கிறோம்.


கேள்வி: நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கம் குத்தகைக்கு பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறதே? அதன் உண்மைத் தன்மை என்ன? 


பதில்: நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஒருசிலர் இதனை புரிந்துகொள்ளாமல் வதந்தி பரப்பி வருகின்றனர் .


அவ்வாறு கூறுபவரை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை வழங்க வேண்டும். நாம் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை. நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டது. அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஒருசிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். நாம் கைச்சாத்திட்டுள்ள ஆவணங்களை பார்த்தால் உண்மை நிலை தெரியும். 

 

கேள்வி: புதிதாக வைத்தியர் சங்கம் உருவாகவிருப்பதாகவும் அதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறதே? 


பதில்: புதிதாக சங்கம் ஒன்றும் உருவாகவில்லை. ஏற்கெனவே நிறைய சங்கங்கள் உருவாகிவிட்டன. சுகாதார அமைச்சர் என்ற வகையில் குறித்த சங்கங்கள் அழைப்பு விடுக்கும் போது நான் கலந்துகொள்வேன். சங்கங்களை நான் உருவாக்குவதும் இல்லை, பிரிப்பதும் இல்லை. 


கேள்வி: கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மகாநாம திலகரத்னவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த அரசாங்கத்திலும் இரண்டரை ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு அரசாங்கம் ஏன் தாமதித்தது? 


பதில்: அந்த அறிக்கையை தர முடியாது என அதிகாரிகளே கூறியிருந்தனர். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த பின்னரே அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை மிக முக்கியமானது. 


அன்றிருந்த நிலைமையும் இன்று உள்ள நிலைமையையும் நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அன்றைய உயிரிழப்பு எவ்வாறு இடம்பெற்றது என்பதை தயார் கூறுவதை நான் கேட்டேன். 


சடலத்தை எவ்வாறு வீட்டுக்கு கொண்டுவருவது, சடங்குகள் செய்வது என்பவை தொடர்பில் தாய்க்கோ தந்தைக்கோ தீர்மானம் எடுக்க முடியாத நிலை இருந்தது. எவன்கார்ட் மூலமாக சடங்குக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.   


சடலத்தை வீட்டுக்கு கொண்டுவருவது எவ்வாறு? எப்போது அடக்கம் செய்வது என்பவற்றை இராணுவத்தினரே தீர்மானித்தனர். இதனை அந்த அம்மா சொல்லும் போது நாட்டு நிலைமை இவ்வாறு இருந்ததா என எண்ணத் தோன்றுகிறது. 

மரணச் சடங்குக்கு உறவினர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

அப்போது அமைச்சர்கள் அங்கு சென்று தங்கியிருந்தார்கள். மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அமைச்சர்களுக்கு கடமை நேரம் வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்துக்கு மரணச்சடங்கில் கலந்துகொண்டார்கள். அவ்வாறான அமைச்சர்கள் தான் அன்று இருந்தார்கள். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் அளவுக்கு அன்று ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை. துப்பாக்கிச் சூடு அவசியமற்றது.  

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்தினால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. பொலிஸ் உயர் அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


கேள்வி: தற்போதைய அரசாங்கம் அமைந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும் இன்னும் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லையே? இந்த அறிக்கையை கூட தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாகத்தான் பெற்றுக்கொள்ள முடிந்தது? 


பதில்: அந்த அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.  

நான்கு மாணவர்கள் படுகொலை பற்றி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் விவரித்த ராஜித்த.. நான்கு மாணவர்கள் படுகொலை பற்றி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் விவரித்த ராஜித்த.. Reviewed by Madawala News on 7/20/2017 07:28:00 AM Rating: 5