Ad Space avaiable

எமது ஊர்களின் வளர்ச்சியினை பள்ளி நிருவாக்கங்களின் ஊடாக உயிர்ப்பித்தல்.


பகுதி 1 இன் (http://www.madawalanews.com/2017/07/Society.html) தொடர்ச்சி .

5. கல்வி தொடர்பான கருத்தரங்குகள்
/ பரீட்சை வழிகாட்டிகள் என்பனவற்றின் அவசியம்.

எமது நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களாகவும், நகர்ப்புற வசதிகளை இலகுவில் அடைந்து கொள்ள முடியாமலும் எத்தனையோ ஊர்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களிற்கு கிடைக்கக்கூடிய பாடசாலைக் கல்வி மட்டுமே எல்லாப் பிரதேசங்களையும் போன்று கிடைக்கப்பெறுகின்றன. இருந்த போதும், வாழும் ஊரின் சூழல், பாடசாலையில் உள்ள வளங்களை ஒப்பீட்டு நோக்கினால், இப் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மாணவர்களிற்கு கிடைக்கும் கல்வித்தரம் குறைவானதே. இதன் அடிப்படையிலேதான் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சை, உயர்தர Z-score ஆகிய வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள. இதுவே நமது பின் தங்கிய பிரதேசங்களின் மற்றும் வசதி குறைந்த ஊர்களின் கல்வியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் அரசாங்கத்தின் மூலம் இவ்வாறான பிரதேசங்களை வலுப்படுத்துவது என்பது கடினமான காரியமாகும் என்றே கூறலாம். எமது சமூகத்தின் வளர்ச்சியினை அதிகரிக்க வேண்டும் என்று என்னும் நாங்கள் எமது நாட்டின் அரசாங்கத்தின் உதவிகளை முழுவதுமாக தங்கியிருப்பது பயனளிக்காது.

இதற்கு பல காரணிகளாக நாட்டின் பொருளாதாரம், கடன், அரசியல்வாதிகளின் ஊழல், அரச ஊழியர்களின் பொடுபோக்கு என்று பல விடயங்களை குறிப்பிடலாம். இங்கே குறிப்பிடும் பிழையான நபர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதே இதற்கு மூல காரணம், மாறாக எனது பதிவு அனைவரையும் குறிப்பிடாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
இதற்கு தீர்வு காணும் வகையில் நாம் எமது பிரதேசங்களில் உள்ள மாணவ மாணவிகளிற்கான கல்விக்கூடங்களை நிறுவுதல், வகுப்புரீதியாக அல்லது வயதுரீதியான கருத்தரங்குகள், பரீட்சை வழிகாட்டிகள் போன்ற விடயங்களை தொடரவேண்டும். பாடசாலை மூலமாக நடைபெறும் இதர கல்விசார் (உதாரணமாக: பேச்சு, கட்டுரை, விஞ்ஞான, விளையாட்டு) திட்டங்களில் இவர்களை ஊக்கப்படுத்துவதும், பங்குபெறச்செய்வதும் அவசியமாகும். அதேபோல் தொழில்வாய்ப்புகள், அரசியல், சமூகவியல், பொதுஅறிவு, உளவியல் சம்பந்தமான கருத்தரங்குகளும், வழிகாட்டல்களும் இன்றியமையாத விடயங்களாகும்.இவைகள் பணத்தை நோக்கமாக கொண்டிருக்காமல், வறிய மற்றும் எல்லாத்தரப்பு மாணவர்களையும் வழிகாட்டுவதாக அமையவேண்டும்.

6. நூலகம் / விளையாட்டு மைதானம் போன்றவற்றின் அவசியம்.
ஒவ்வொரு ஊரிலுமுள்ள எமது சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகளை வழிநடாத்தல்/ ஊக்கப்படுத்துதல் அவசியமாகும். இவர்களின் சிறந்த வாழ்க்கைக்கு குடும்பம், பாடசாலை, சுற்றுப்புறச்ச சூழல், பள்ளி என்பன பிரதான காரணிகளாகும். எனவே அவர்களை வழிதவறவிடாமல் ஒரு நிலைப்படுத்தல், திறமைக்கு ஆக்க பூர்வமான முறையில், இஸ்லாமிய கோர்பார்ட்டிற்கு கட்டுப்பட்டவர்களாகவும், ஒழுக்க விழுமியங்களை பேணுதலாக கடைபிடிக்கக்கூடியவர்காளாகவும் வளர்க்க ஒவ்வொரு ஊரும் முன் வரவேண்டும். இவர்களில் மறைந்துள்ள கல்வி மற்றும் ஏனைய துறைசார்ந்த திறமைகளை இனங்கண்டு அதற்கான ஆயத்தங்களை எடுப்பது நமது ஊரின்  முன்னெடுப்புகளிலேயே தங்கியுள்ளது.


அதற்காக ஒவ்வொரு ஊர்களிலும் பொது நூலகங்கள், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் தடாகங்கள், தற்காப்புக்கலை போன்ற வெவ்வேறு துறைசார்ந்த விடயங்கள் ஆரம்பிப்பதும், நடத்துவதும், அதன் மூலம் பயிற்சிகள் வழங்குவதும் மிக அவசியமாகும். இவ்வாறான வளங்களை அதிகரிப்பதன் மூலம் விடைகிடைக்கும் என்று என்னுகிறேன். இவைகள் நமக்கு சிரமமாக இருப்பது போன்று தோன்றினாலும், எம் அனைவரது ஒத்துழைப்புடன் இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வது எமது எண்ணங்களை பூர்த்தியாக்கும் இன்ஷா அல்லாஹ். இஸ்லாமிய வரையறைக்கு உற்பட்டதாக இவ்வாறான பல நல்ல பொது விடயங்களை ஒவ்வொரு ஊரிலும் வளரும் சிறுவர்கள், இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கச்செய்வதினால் அவர்களில் மறைந்துள்ள திறமைகளை இனங்கானவோ அல்லது அவைகளை வளர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக்கொடுக்கலாம்.

இளைஞர்களிற்கு போன்றே எமது ஊர்களில் வாழும் யுவதிகளிற்கும் இவ்வாறான வளங்களை உபயோகிப்பதற்கு, பரீட்ச்சித்துப்பார்ப்பதற்கும் அவகாசங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களது அறிவு, ஆரோக்கியம், திறமை என்பன அவர்களிற்கு மட்டுமல்லாது நாளை உருவாகும் குடும்பங்களினதும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.

7. யுவதிகள் மற்றும் பெண்களிற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்கள்.

ஆண்களை பொறுத்தவரையில் கல்வி மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்வதற்கான சூழல் அதிகமாக உள்ள நிலையில் எமது வீடுகளிலுள்ள பெண்கள், யுவதிகள் தொடர்பான விடயங்களில் நாம் மிக சிரத்தையுடன் பல முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியுள்ளோம். இந்த காலகட்டத்திலும் அவர்கள் பெண்கள் தானே என்று அவர்களிற்குரிய எந்த விதமான முன்னெடுப்புகளையும், அறிவையும் வழங்காமை குடும்பமாக மட்டுமல்லாது பல சமூக நிலை அவலங்களிற்கு ஆளாகின்றோம். ஏராளமான தரப்பிலுள்ள பெண்கள் எமது ஊர்களில் இருக்கின்றார்கள். குடும்ப வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள், பாடசாலைக்கு கல்வியில் பிரகாசிக்காதவர்கள், சாதாரண தரத்தின் பின் பாடசாலைக் கல்வியினை தொடராதவர்கள், இளவயதில் விதவையானவர்கள், வயது வந்தும் திருமணமாகாத பெண்கள் போன்று பலதரப்பிலும் உள்ள பெண்களை நாம் உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடக்கிப்போட்டுள்ளோம் என்பதே வேதனை கலந்த உண்மை.
கிணற்றுத்தவளைகள் போல் பெண்களை பூட்டிவைத்துவிட்டு, நாம் விடியதலைத்தேடுவது கடைசிவரைக்கும் கனவாகவே கழியும் என்பதுவே உண்மை. இன்றைய உலகில் எத்தனையோ பெண்கள் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ஆளுமைகளாகவும், உலக சரித்திரத்தை தமது முயற்சிகளினால் எட்டிப்பிடிப்பவர்களாகவும் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எமக்கு தெரியும். இது போன்ற பெண்கள் எமது சமூகத்திலும் உருவாக வேண்டும். அவர்கள் நாளைய தாய்மார்கள். அவர்களின் அறிவு, ஞானம், அனுபவம் சிறந்த தலைமுறைகளை உருவாக்க கடமைப்பட்டுள்ளதை ஏன் நாம் மறந்துவிட்டோம்?

எமது இஸ்லாமிய மார்க்கத்திற்கு உற்பட்டதாக ஆண்களை மட்டுமல்ல பெண்கள் அவர்களையும் வழிநடாத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு எமது ஊர்களில் பெண்களிற்கு மேலே நான் குறிப்பிட்ட இதர வளங்களை கிடைக்கக்கூடியதாக மாற்ற வேண்டும். அதேபோல் இஸ்லாமிய கல்விக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும். இவைகள் தாம் உள்ள கொள்கைகளை முன்னெடுப்பதற்காக அன்றி இஸ்லாமிய அடிப்படைக் கோற்பாடுகள், சட்ட திட்டங்கள், சித்தாந்தங்களை தெளிவாக அவர்களுக்கு வழங்குவதுடன், உலக அரசியல், பொது அறிவு, உளவியல் மற்றும் ஒழுக்க விழுமியங்களை புகட்டும் நிலையங்களாக மாற வேண்டும். மேலே குறிப்பிட்டது போன்று  வறிய மற்றும் எல்லா தரப்பிலுமுள்ள பெண்களிற்குமான நிதி சார்ந்த மற்றும் ஏனைய உதவிகள் செய்யக்கூடிய அமைப்புகள், திட்டங்கள், சேவைகள் என்பன ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்பட வேண்டும். ஆண்கள் பெண்கள் என்ற இருசாராரும் பெற்றோர்களினதும், ஊரில் இயங்கும் இஸ்லாமிய நிலையங்களின் கண்காணிப்பில் வளர வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறான வளங்கள் இலகுவாக கிடைக்கும் போது அதன் பயன்பாடு அதிகரிக்கும், அதேநேரம் அவ்வளத்தின் பிரயோகம் பல திறமைசாலிகளை எங்களிற்கு அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய உலகம் ஒவ்வொருநாளும் பல புதிய துறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது, இதற்கு நாமும் தயாராவது எங்களது, சிந்தனை, ஒத்துழைப்பு, உழைப்பு எனும் காரணிகளில் தங்கியுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களானது எமது சமூகம் எதிர்நோக்கும் பல சமகால பிரச்சனைகளை முன்வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சொல்லப்பட்டவைகள் மிகச் சில விடயங்களே. எமது அன்றாட பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் எழுதுவதன் நோக்கம் வாசிக்கக்கூடிய என்னிலும், உங்களதும் உள்ளங்கள் மாறவேண்டும், அதற்கான உழைப்புகள் எமது ஊர்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே.

- Mihwar Mahroof -
எமது ஊர்களின் வளர்ச்சியினை பள்ளி நிருவாக்கங்களின் ஊடாக உயிர்ப்பித்தல். எமது ஊர்களின் வளர்ச்சியினை பள்ளி நிருவாக்கங்களின் ஊடாக உயிர்ப்பித்தல். Reviewed by Madawala News on 7/02/2017 10:17:00 PM Rating: 5