Kidny

Kidny

நூதன திருடன் தப்பி ஓட்டம்.. கைபேசியில் எடுக்கப்பட்ட படத்தை கொண்டு விசாரணைகள் ஆரம்பம்.


ஹட்டன் நகர வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதகராகவும், விலைக்கட்டுப்பாட்டு காரியாலய அதிகாரியாகவும் தன்னை அறிமுகம் செய்து இனம்தெரியாத நபரொருவர் லஞ்சம் வாங்க முற்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளதுடன், கண்காணிப்பு கமரா பொருத்தாத வர்த்தக நிலையங்களிலேயே அந்த நபர் லஞ்சம் பெற முயற்சித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் நகரிலிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நுவரெலியா மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு காரியாலய அதிகாரி என தன்னை அடையாளப்படுத்தி அங்கு பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்தால் 25,000 ரூபா வரையில் தண்டம் அறவிடப்படும் என கூறியுள்ளதுடன், வழக்கு பதிவு செய்யாதிருக்க பணம் தருமாறு கோரியுள்ளார்.

அதன்போது ஹோட்டலில் கடமையில் இருந்தவர், தான் உரிமையாளர் இல்லையென்றும் தன்னால் பணம் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த போலி விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி மீண்டும் ஒரு மணித்தியாலத்தில்தான் வருவதாகவும் அதற்குள் பணத்தை தயார் செய்து வைக்குமாறும் தெரிவித்து சென்றுள்ளார்.

இதையடுத்து பலசரக்கு கடையொன்றுக்கு சென்றுள்ள அதே நபர், தன்னை சுகாதார பரிசோதகர் என அறிமுகம் செய்து கொண்டு கடையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கூறி லஞ்சம் கோரியுள்ளர்.

இந்த நிலையில் அவர் மீது சந்தேகம் கொண்ட கடையுரிமையாளர், தனது கைப்பேசியில் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அடையாள அட்டையை கேட்ட போது குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கடையுரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், ஹட்டன் - டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் ஆகியோருக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.

அப்பகுதிக்கு வருகை தந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதுடன், சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தன்னை அடையாளப்படுத்தினால் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்கும் படியும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக எமது காரியாலயங்களுக்கு அறிவிக்குமாறும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர்.

மேலும், கைபேசியில் எடுக்கப்பட்ட படத்தை கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், குறித்த நபரை விரைவில் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூதன திருடன் தப்பி ஓட்டம்.. கைபேசியில் எடுக்கப்பட்ட படத்தை கொண்டு விசாரணைகள் ஆரம்பம். நூதன திருடன் தப்பி ஓட்டம்.. கைபேசியில் எடுக்கப்பட்ட படத்தை கொண்டு விசாரணைகள் ஆரம்பம். Reviewed by Madawala News on 7/13/2017 02:23:00 PM Rating: 5