Ad Space Available here

ஆசிய புதை சேற்றில் கால் வைத்துள்ள அமெரிக்கா?


Muja ashraff 
"செப் 11 க்கு முன்பு வரை இது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை இனியும் தொடர்வது தனக்கே ஆபத்து என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்குமல்லவா” என்று கேட்கலாம்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்பதனால் இனி கடா வளர்ப்பதே இல்லை என்று அமெரிக்கா முடிவு செய்யப் போவதில்லை. ஏற்கெனவே நொரிகோ, சதாம் உசேன் போன்ற கடாக்களைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவுக்கு பின்லாடன் தாலிபான் அனுபவம் புதியதல்ல. அதே நேரத்தில் சுலபமானதும் அல்ல.

வியத்நாமில் 65,000 அமெரிக்கச் சிப்பாய்களை காவு கொடுத்து, உள்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும், உலக அரங்கில் அவமானத்தையும் சந்தித்ததன் காரணமாக “இனி அடுத்த நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதில்லை” என அமெரிக்கா முடிவு செய்யவில்லை.

தனக்கு தேவையான இடங்களில் அரசுகளை கீழிருந்து நெம்பிக் கவிழ்ப்பதற்கான கடப்பாறையாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை பயன்படுத்தி வரும் அமெரிக்கா, மேலிருந்து அரசுகளைத் தகர்க்கும் உலக்கையாக இப்போது ‘பயங்கரவாத எதிர்ப்பை’ பயன்படுத்துகிறது. பயங்கரவாதத்தை ‘ஆதரிக்கும்’ எல்லா நாடுகளின் மீதும் போர் தொடுப்பதாக மிரட்டுகிறது.

பின்லாடனைப் பிடிப்பது, மத்திய ஆசியாவின் எண்ணெய்க் குழாய்க்கு வழி தேடுவது, ஆப்கானில் பொம்மை ஆட்சி அமைப்பது, மத்திய ஆசியாவில் இராணுவதளம் நிறுவுவது, இஸ்லாமிய தீவிரவாதத்தையும், போதை மருந்துக் கடத்தலையும் முறைப்படுத்தி சி.ஐ.ஏ. வின் கட்டுப்பாட்டை நிறுவுவது, ஒத்துவராத அல்காய்தா போன்ற குழுக்களை ஒழித்துக்கட்டுவது, பயங்கரவாத அபாயத்தைக் காட்டி உலக நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் உரிமை பெறுவது என்ற பல நோக்கங்களை உள்ளடக்கிய போர் இது.

“ஊசியை தேடுவதற்காக வைக்கோல் போருக்குத் தீ வைக்கலாமா பின்லாடனைத் தேடுவதற்காக ஆப்கானை ஆக்கிரமிக்கலாமா?” என்று போர் தொடங்கு முன்னரே எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்கா பதில் சொல்லவில்லை.

போரை இப்போதைக்கு முடிவுக்கு கொண்டு வருவது கடினம் முடியாது என்பதை சூசகமாக அறிவிக்கும் தந்திரமாக கூட இருக்கலாம்.

“போர் முடிவதற்கு இன்னும் பல ஆண்டுகள் கூட ஆகலாம். கம்யூனிசத்தை முறியடிக்க நமக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் பிரிட்டிஷ் இராணுவத் தளபதி.

அமெரிக்காவின் ஆசியோடு தங்கள் சொந்த நலனுக்காக இஸ்லாமிய சர்வதேசியத்தை எண்ணெய் ஊற்றி வளர்த்த வளைகுடா ஷேக்குகள், முஸ்லிம் மக்களிடையே வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்பைக் கண்டு பீதியடைகிறார்கள்.

“அவர்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறதென்பது உண்மை தான். ஆனால் இப்போது நமக்கு அவர்கள் தேவைப்படுவதைக் காட்டிலும் நாம் தான் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறோம்” என்று ஏளனம் செய்கிறார் அமெரிக்க செனட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜோசப் பிடன். கைக்கூலிகளுக்குத் தேவையான சூடு தான் இது.

“ரம்ஜானுக்காவது போரை நிறுத்துங்கள்” என்று மன்றாடுகின்றனர் மன்னர்கள் “ஈரானும் ஈராக்கும் அடித்துக்கொண்ட போது ரம்ஜானுக்கு விடுமுறையா விட்டார்கள்” என்ற ஏளனம் பதிலாய் கிடைக்கிறது.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கும் போராளிகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது விடுதலையை வென்றெடுக்கிறார்கள். கைக்கூலிகளின் கதையோ வேறு.

எசமானை எதிர்த்து நிற்பவர்கள் ஏவுகணைகளால் தாக்கப்படுகிறார்கள். எசமான விசுவாசிகளோ மக்களால் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள்.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியாலும், உள்நாட்டில் வளர்ந்து வரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாலும் அச்சுறுத்தப்படுகிறது. உலக பயங்கரவாதத்தைக் காட்டி உள்நாட்டில் அரசு பயங்கரவாதத்தை ஏவுகிறது.

பின்லாடனைத் தேடி அலைகிறது அமெரிக்க அதிரடிப்படை, அமெரிக்க ராஜதந்திரிகளோ மிதவாத தாலிபான்களைத் தேடி அலைகிறார்கள்.

எண்ணெய் முதலாளிகளின் மூலதனத்துக்குப் பதில் சொல்ல, குழாய் அமைக்க வேண்டும், அதற்கு ஈரானுடனும் ரசியாவுடனும் முரண்பட வேண்டும்; தாலிபான், பாகிஸ்தான் மட்டுமின்றி வடக்கு முன்னணியின் ஆதரவும் வேண்டும்.

போர்த் தந்திர நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மத்திய ஆசியாவில் இராணுவத்தளம் வேண்டும் அதற்கு மத்திய ஆசிய நாடுகளின் ஆதரவு வேண்டும்; சீனா, ரசியா, ஈரானுடன் முரண்பட வேண்டும்.

அமெரிக்கப் போர்வெறியர்களுக்கோ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சதாமை ஒழித்துவிட ஈராக்கின் மீதும் போர் தொடுக்க வேண்டும் அதற்கு ஜரோப்பிய நாடுகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும்.

தங்களுடைய மவுனமான ஆதரவுக்குப் பரிசாக வளைகுடா ஷேக்குகளுக்கு பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு முடிவு வேண்டும், அதற்கு இஸ்ரேலின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும்.

தனது துணிச்சலான ஆதரவுக்குப் பிரதி பலனாக முஷாரப்புக்கு காஸ்மீர் பிரச்சினையில் உதவ வேண்டும். அதற்கு இந்தியாவின் வெறுப்பை எதிர்கொள்ள வேண்டும்.

வெவ்வேறு விதமான தீர்வுகளைக் கோருகின்ற இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும், தனது நலனுக்கு உட்பட்டே தீர்த்துவிடலாம் என்று அமெரிக்கா கனவு காண்கிறது.

டாலரையும், ஏவுகணைகளையும் காட்டிக் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டி விடலாம் என்று நம்பி ஆசியப் புதை சேற்றில் கால் வைத்திருக்கிறது அமெரிக்கா.

பின்லாடனைப் பிடிப்பது. ஆப்கனில் பொம்மையாட்சியை நிறுவுவது என்ற உடனடி நோக்கம், எண்ணெய்க் குழாய் எனும் வர்த்தக நோக்கம், மத்திய ஆசியாவில் இராணுவதளம் நிறுவும் போர்த்தந்திர நோக்கம் அனைத்தையும் ஒரே கல்லில் அடித்து நிறைவேற்றி விடலாம் என்று எண்ணித்தான் அமெரிக்கா போரைத் துவக்கியது.

அமெரிக்காவின் வல்லமையை உலகுக்கு நிரூபிப்பதாக முரசு கொட்டிப் போரில் இறங்கினார் புஷ்.

கள நிலவரத்தின் படி அமெரிக்காவின் வல்லமையை அவர் அமெரிக்காவுக்கே நிரூபிக்க வேண்டியிருக்கிறது !
ஆசிய புதை சேற்றில் கால் வைத்துள்ள அமெரிக்கா? ஆசிய புதை சேற்றில் கால் வைத்துள்ள அமெரிக்கா? Reviewed by Madawala News on 7/27/2017 10:00:00 PM Rating: 5