Ad Space Available here

இலங்கையின் முதிய வரலாற்றுக் கிடங்கு U.S.M. அலி.


– அனஸ் அப்பாஸ் –

1967 இல் இருந்து 1982 வரைக்கும் US library congress இன் தமிழ் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர் U.S.M. அலி. அந்நேரத்தில் இலங்கைக்கான நிறுவன பிரதிநிதியாக வில்பர்ட் குணசேகர என்பரே இருந்தார். அவர் மூலம் அறிவு, தெளிவு, நுட்பம் என்பவற்றை விருத்தி செய்த அலி, ஆங்கில மொழி மூலமான இலங்கை வரலாறு தொடர்பான நூல்களை தேட ஆரம்பித்தார்.

US library congress இனால் திரட்டப்படும் ஒவ்வொரு ஆங்கில, சிங்கள, தமிழ் மொழி மூல இலங்கை வரலாறு, கலாசாரம் சார்ந்த 27 நூல்கள் வீதம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவிலுள்ள நூலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இலங்கையில் வெளிவந்த 70% ஆங்கில வரலாற்று நூல்களில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடாத எந்த நூலும் இல்லை என்கின்றது இவரது புத்தகக் கிடங்கு. தெளிவாக, 1815 இற்கு பிறகு ஆங்கிலேயன் கண்டியை கைப்பற்றிய பிறகு முழு இலங்கையிலும் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆங்கில அதிகாரிகளும் நூல்களை எழுத ஆரம்பித்தனர்.

18 ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்த நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. எமது சமூகத் தலைமைகள் கொழும்பிலுள்ள ஒரு சில முஸ்லிம் தனவந்தர்களை இனங்காட்டி, மேன்மைப்படுத்திக் காட்டிவிட்டால், இலங்கைவாழ் சகல முஸ்லிம்களும் மேன்மையாகிவிடுவர் என்ற குறுகிய சிந்தனையில் செயற்பட்டதால் அவர்களால் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களின் சிறப்புக்களை அடையாளம்காண முடியாமல் போனதாகவும் குறிப்பிடுகின்றார்.

24 கப்பல்கள் ஊடாக பலம்பெறும் வியாபாரம் செய்த கண்டி மாவட்ட வியாபாரிகளையோ, அங்கிருந்த விகாரை திருவிழாக்களில் பங்களித்த முஸ்லிம் தனவந்தர்கள் குறித்தோ, இன்று பௌத்த பீடங்களை அணுக அச்சப்படும் இதே முஸ்லிம்கள் அன்று நெருங்கிய உறவாடியதையோ, முஸ்லிம் பள்ளிவாயலை கண்டியில் கட்டிய பௌத்த மதகுரு குறித்தோ, அரச வம்சத்தை சிறப்பித்து வரவேற்ற புத்தள தனவந்தர்கள் குறித்தோ, அந்த நாட்களிலேயே மாத்தளை பகுதியில் மாடி வீடுகள் கட்டி வாழ்ந்த தனவந்தர்கள் குறித்தோ, கீர்த்தி ஸ்ரீ ஆட்சியில் இரு அரேபியர்கள் போர்த்துக்கேயரை எதிர்த்து அரசனுக்கு ஆதரவாக போராடி, அதற்கு வெகுமதியாக அவர்கள் கேட்ட “original kandy women” திருமணம் முடித்துவைத்து பெரும் வரவேற்புடன் அக்குரனையில் குடியேற்றப்பட்டதோ, 250 கரத்தை ஹம்பாந்தோட்டை உப்பு எடுத்து மட்டக்களப்பு பிரதான கடல் மார்க்க வணிகம் (திருகோணமலை துறைமுகம் கண்டி அரச ஆட்சிப் பகுதியில் பயன்படுத்தப்படவில்லை) பதுள்ளை முஸ்லிம் வணிகர் குறித்தோ, சிறந்த வணிகர்களை கொண்ட ஏறாவூர் குறித்தோ, ஏனைய முஸ்லிம் ஊர்களின் பழங்கால வரலாறு குறித்தோ எந்தத் தேடல்? ஆவணபப்டுத்தல் இருக்கின்றது? யாருக்கு இவை தெரியும்? என்று கேட்கின்றார்.

“இலங்கை வரலாற்றில் பிரிட்டிஷ் மகாராணியுடன் முஸ்லிம்கள் வணிகம் செய்ததை ஒருபோது வடக்கில் நான் கூறியபோது, ஏன் முஸ்லிம்களால் பிரிட்டிஷ் குவீன் கவுன்சிலுக்கு ஒரு முஸ்லிமை அனுப்ப முடியாது போனது என்று சிந்திக்க வைக்கும் கேள்வியொன்றை அவர்கள் கேட்டனர். “நாம் உங்கள் பக்கம்” என இன்று அரசியல் பேசுவோர் அண்மைய இனவாத அழிவுகளின்போது அவற்றுக்கும் காரணகர்த்தாக்களே. குவீன் கவுன்சிலில் எமக்கு பிரதிநிதித்துவம் இருந்திருந்தால் எமது பிரச்சினைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றில் முழங்க வாய்ப்பாக இருந்திருக்கும்” என்றார்.

“இலங்கையின் மண் வளம், திரவியங்கள் என்பன அரேபியர்களால், ரோமர்களால், பாரசீகர்களால், பைசாந்தியர்களால், சோழ, சேர, பாண்டியர்களால், இந்திய முகலாயர்களால் மிகுந்த விலைகொடுத்து வாங்கும் விளைபொருளாக (முக்கியமாக “Ceylon Cinnamon”) இருந்தது. விஜயன்முதல், இறுதி இராஜசிங்கன் வரை வர்த்தகர்களாக முஸ்லிம்களே மின்னி விளங்கினர். இலங்கை அரசர் எவரும் வறுமையாக வாழ்ந்த வரலாறில்லை. ஆனால், கொலை அச்சத்துடன் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம் வர்த்தக சமூகத்துடன் சிறந்த உறவுடன் அரசர்கள் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம்கள் நாம் வியாபார சமூகமாக வாழ்ந்தோம், ஆம் சந்தேகமேயில்லை. அரேபிய வருகை போர்த்துக்கேயருடன் நிறைவு கண்டபோதும், தொடர்பு நீடித்தது. ஏற்றுமதி வணிகம் தொடர்ந்தது” என்கின்றார்.

“இலங்கையில் கால்பதித்த ஆங்கிலேயன், முஸ்லிம்கள் 100 வருடம் கல்வியில் பின்தங்கிவிட்டனர் என்றான். யாரும் சிந்தித்தோமா? வளங்களை சூறையாட ஒல்லாந்தரும், போர்த்துக்கீசரும் இலங்கை வந்தாலும், வளங்களை அழிக்கவும், பாதுகாப்பு தேவைக்காகவுமே ஆங்கிலேயன் இலங்கை வந்தான்” இப்படி நீளும் செம்மையான அவரது சொற்தொனிகளை பதிய, இந்தப் பத்திரிகையை முழுதாக நான் குத்தகைக்கு எடுக்கவேண்டி வரும்.

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு குறித்து பல பகுதிகளாக (25 – 30 தொகுதிகள்) தனது நூல் வாசிப்பின் தேடலில் கிடைத்தவற்றை இவர் தொகுத்திருக்கின்றார். அதில் ஒரு தொகுதிக்கு 44 பேரின் தகவல் திரட்டல்கள் சகிதம் உசாத்துணையாக இருந்துள்ளன. கலாநிதி M.A.M. ஷுக்ரி, ஆசிப் ஹுசைன் ஆகியோர் உள்ளிட்ட ஆங்கிலேய, சிங்கள தனி நபர்கள் இதற்கு நன்றிக்குரியவர்களாக அவர் பெயரிட்டுள்ளார். வரலாறு குறித்து ஏனைய சமூகங்களுக்கு உள்ள அக்கறை முஸ்லிம் தலைமைகளுக்கோ, இயக்கங்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கோ இல்லை என்பதாக அதிகம் கவலைகொண்டார்.

கல்வியின் வாடையையே நுகராத ஒருவர்தான் இத்தனையும் உங்கள்முன் பேசுகின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? தனது சிறுபராயம் குறித்து மிகுந்த அதிருப்தி கொள்ளும் இவர், 12 வயதில் கொழும்பில் அநாதரவாக, ஒரு அடிமை சேவகனாக வாழ்ந்த தனது வாழ்க்கைப் பக்கங்களை மிகுந்த வலியுடன் என்னிடம் மீட்டினார். இறைவனின் அருளால் தன்னைத்தானே வளர்த்துக்கொண்டதாக கூறும் இவர் தனது வர்த்தக அனுபவமும், இலக்கிய நண்பர் வட்ட அறிமுகமும் பாரதி நூல் நிலையம், விஜயலக்ஷ்மி நூல் நிலைய முகாமையாளராக பணிபுரியக் கிடைத்த திருப்பங்கள் பற்றியும் நீண்டநேரம் விபரித்தார்.

1958 இல் புகைப்பட கலைஞராக இவர் பணிபுரிந்தபோது க. கைலாசபதி தலைமையிலான இலக்கிய வட்டமான இலங்கை முற்போக்கு சங்க எழுத்தாளர் குழுமத்திற்கு தன்னை அறிமுகம் செய்த “பிறை” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் M.A. ரஹுமான் அவர்களுக்கு தனது நன்றிகளை முதலில் சொன்னார்.

1930 இல் பிறந்த இவர், 1960 இல் தனது புத்தகங்களுடனான பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார். பழம்புத்தகங்கள் முதல் நூற்களுடனான தொடர்புடைய  தரப்பினரின் தொடர்பு, நிர்ப்பந்தத்தின்பேரில் அவரை வாசிப்பின் மூலமான வரலாற்றுத் தேடலை தட்டிவிட்டுள்ளது. கொழும்பு புதிய சோனகத்தெருவில் இவர் சந்தித்த இலங்கையின் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் ஷேஹ் ஜெய்லானியின் சந்திப்பு இவரது ஆன்மீக வாழ்வையும் செம்மைப்படுத்தியதாக அக மகிழ்ந்தார். “இஸ்லாமிக் புBக் ஹவுஸ்” உரிமையாளர் செய்யித் அஹமத் அவரது ஆன்மீக வகுப்புத் தோழர் என்றும் குறிப்பிட்டுக் கூறினார்.

தமிழ் அரிச்சுவடியே தெரியாத ஒருவர், இலக்கிய செம்மலாக, ஆறுமுக நாவலரைப் போன்றே கருத்து திரிபற்ற, சொற்பத திருத்த, புத்தக இறுதிப் பரிசீலனை வேலைகளிலும் ஆர்வத்துடன் செயற்பட்டமைக்கு சான்றாக குமரன் புத்தக வெளியீட்டகத்தில் பணிபுரிந்த போது தமிழ் வரலாற்று நூல்களுக்கான தனது பங்களிப்புகளை சுட்டிக்காட்டினார்.

வியப்பை இன்னும் நீட்டினால், US congress library இல் நிர்ப்பந்தத்தின்பேரில் சுய ஆங்கில கற்றலில் ஈடுபட்டு, பின்னர் ஆங்கில புத்தக தீவிர வாசகரானார். 1967 முதல் அங்கு வந்த நூல்களின் ஒவ்வொரு வரலாற்றுப்பிரதியையும் தனக்காக ஒன்றை எடுத்து வைத்தார். இன்று, அதிலிருந்து ஆய்ந்த வரலாற்றுக் கனிகளை இனிவரும் சமூகம் சுவைக்க வேண்டும் என்ற பெரும் முயற்சியில் பல பாகங்களைக் கொண்ட உசாத்துணை வழிகாட்டல்களை தொகுத்து வைத்திருக்கின்றார். பள்ளிவாயலில் ஒரு நிர்வாகம் களைய, அந்த ஆவணங்களை முற்றாக தீயிடும் முஸ்லிம் சமூகம், நூற்றாண்டு விழா காணும் கோயிலின் வரலாற்று ஏடுகளை அழகாக பாதுகாக்கும் முன்னுதாரணத்தை ஏற்குமா? அனுபவத்தை சற்று உரசிச் சொன்னார்.

நான்கு பேரின் தந்தையான இவர் கொழும்பிலிருந்து தற்போது வசிக்கும் கஹட்டோவிட்ட பிரதேசத்துக்கு வரும்போது 500 புத்தகங்களை தமிழ் சங்கத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். எனது சந்திப்பே அவரது உளக் கிடக்கைகளை சொல்லும் கடைசி சந்தர்ப்பமாக இருக்குமோ எனக் கூறி காலை முதல் மதிய உணவுவரை பலதும் பகிந்துகொண்டார்.  இலங்கை வரலாறு குறித்த ஆவணபப்டுத்தலில் ஆர்வம் கொண்டவர்கள் இவரை அணுகினால் பல மணிநேர விளக்கம் கிடைக்கும் என்பதற்கு நானே உத்தரவாதம்.

 U.S.M. அலி யுடன் ஊடகவியலாளர் அனஸ் அப்பாஸ் 
Image may contain: 2 people, people standing and beard
இலங்கையின் முதிய வரலாற்றுக் கிடங்கு U.S.M. அலி. இலங்கையின் முதிய வரலாற்றுக் கிடங்கு U.S.M. அலி. Reviewed by Madawala News on 7/14/2017 07:55:00 PM Rating: 5