Ad Space avaiable

ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் நிலைநாட்டப்பட்ட "ஜனநாயகம்"


-Muja ashraff -

ஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது.  நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசலாம், ஆனால், ஈராக்கின் எண்ணை வயல்களை எப்படி உறிஞ்ச முடியும்?

ஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்?  பீதியுடன் கால் பதித்த அமெரிக்கா, துரோகிகளின் பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த ஈராக் மக்களின் சுதந்திர வேட்கை போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா.  ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த நகரம் அது.  இங்கே தண்டகாரன்யா காட்டு வேட்டையில் ஆதிவாசிப் பள்ளிகளை இராணுவ முகாம்களாக மாற்றுவதுபோல இந்திய அடிவருடிகளின் எஜமானர்களான அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்றத் தலைப்பட்டது. இருநூறுக்கும் மேலான மக்கள் உடனடியாகக் கூடி  இந்த முயற்சியை முறியடிக்கப் போராடினர்.  அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாறுமாறான துப்பாக்கி சூடு நட்த்தி 17 பேரைக் கொலை செய்தது.  அடுத்த இரண்டாவது நாளில் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது மீண்டும் அமெரிக்க சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் மாண்டனர்.

இச்செயல் பரந்துபட்ட மக்களின் கோபாவேசத்தை மூண்டெழச் செய்தது. ஃபலூஜா அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தின் மையமானது.  கொடூரமான போர்க் குற்றங்கள் பல செய்திருந்த ’ப்ளாக்வாட்டர் யூ.எஸ்.ஏ’ என்ற தனியார் கூலிப்படையின் அணி வரிசையை மார்ச் 31, 2004 அன்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தியது. ப்ளாக்வாட்டர் கூலிப்படையினர் நால்வர் வாகனத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு அடித்து, எரித்து யூப்ரடீஸ் நதியின் பாலத்தில் தொங்கவிடப்பட்டனர். இது கண்ட தொன்மைச் சிறப்பு மிக்க யூப்ரடீஸ் நதி தான் ஊட்டி வளர்த்த நாகரீகம் மீண்டும் தழைக்கும் என்ற புது நம்பிக்கையில் மகிழ்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.
ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் நிலைநாட்டப்பட்ட "ஜனநாயகம்" ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் நிலைநாட்டப்பட்ட "ஜனநாயகம்" Reviewed by Madawala News on 7/31/2017 07:00:00 PM Rating: 5