Ad Space Available here


(ஆதில் அலி சப்ரி)

இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு கிடைக்கப்பெற்ற 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வட்டித்தொகை உரிமை கோரப்படாத நிலையிலுள்ளதாக புது டில்லி மாநில சிறுபான்மையினர் ஆணைக்குழுவின் தலைவர் ஸப்தார் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளின்படி மொத்த இந்திய வங்கிகளிலும் இவ்வாறு உரிமை கோரப்படாது விட்டுவைக்கப்பட்டுள்ள பணம் 67 இலட்சத்து 50 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களாகும். கேரள மாநிலத்தில் 40,000 கோடி இந்திய ரூபாய்களும், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் 50,000 கோடி இந்திய ரூபாய்களும் இவ்வாறு திரட்டப்படாமல் உள்ளன.


உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய சட்டத்துறையினர் பொதுமக்களுக்கு ஏற்றமான வழிகாட்டுதல்களை வழங்கும் போது, இப்பாரிய நிதியைக்கொண்டு பல பொது, சமூகப் பணிகளிலும் திட்டங்களிலும் ஈடுபடுத்தலாம் என்று புது டில்லி மாநில சிறுபான்மையினர் ஆணைக்குழுவின் தலைவர் ஸப்தார் ஹுஸைன் சுட்டிக்காட்டியுள்ளார்.    

இலங்கை முஸ்லிம்களிடத்திலும் இவ்விடயம் இல்லாமல் இல்லை. வங்கியில் சேமிப்பு வைப்புக்காக கிடைக்கும் வட்டித் தொகையை என்ன செய்வது? எவ்வித நன்மைகளையும் எதிர்பாராது கொடை வழங்க முடியுமா? பணத்தை எடுத்து எரித்துவிட வேண்டுமா? சேமிப்புகளுக்காக வழங்கப்படும் வட்டிப் பணத்திற்குரிய தீர்ப்பு என்ன? போன்ற பல கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு.

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுடனான தொடர்பைத் துண்டித்து வியாபார நடவடிக்கைளை முன்னெடுப்பது சாத்தியமும் இல்லை. பாதுகாப்பு சிக்கலும் உள்ளது. 

இந்நிலையில், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில், இஸ்லாமிய வங்கி முறையியல் இல்லாத நாடுகளில் ஏனைய வங்கிகளுடன் வரையறைகளுடன் செயற்பட உலக இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

வங்கிகள் தமது வாடிக்கையாளரின் வைப்புகளுக்கு வழங்கும் வட்டியும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ள வட்டியைச் சார்ந்ததாகும். எனவே, அவ்வட்டித் தொகை யாருக்கு வழங்கப்படுகின்றதோ, அவருக்கு அது ஹலாலாகாது. அதனை அவர் பெற்றுக்கொள்ள முடியாது. அது அவருக்குரியதல்ல. அதே நேரத்தில் அத்தொகை வங்கிக்குரியதுமல்ல. 

வட்டிப்பணத்தை தர்மம் செய்து விடுவதே சரியானது என்றும் சில அறிஞர்கள் இப்பணத்தை தர்மம் செய்யும் நோக்கத்துடன் கூடப் பெறக்கூடாது என்றும், அதனை அப்படியே வங்கியிலேயே விட்டு விட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

வட்டிப்பணம் உள்ளவர், அது அவருக்கு சொந்தமற்றது என்ற வகையில், அதனை ஏழை எளியவர்களுக்கோ அல்லது ஒரு நற்பணிக்கோ தர்மம் செய்து விட வேண்டும். முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் எத்தகைய ஒரு நலனுக்காகவும் அதனைச் செலவு செய்ய முடியும் என்பதே யூஸுப் அல்கர்ளாவி போன்ற நவீன அறிஞர்களினதும் ‘மஜ்மஉல் பிக்ஹிய்யில் இஸ்லாமி’ போன்ற இஸ்லாமிய சட்ட அமைப்புக்களினதும் கருத்தாகும். வட்டிப்பணம் அதனைப் பெற்றவருக்கோ அல்லது வங்கிக்கோ சொந்தமானதல்ல என்ற காரணத்தினால், அது பொதுப்பணமாகக் கொள்ளப்படும். ஹராமான எல்லாச் செல்வங்களுக்கும் இதுவே சட்டமாகும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

பிரபல்யமான பொருளாதார நிபுணர் கலாநிதி தாஹிர் பாய்க் இதுகுறித்து தெரிவிக்கும்போது, ஒருவர் தனது வைப்புக்குக் கிடைக்கும் வட்டிப்பணத்தை ஹராம் என்ற வகையில் பெறாது, வங்கியில் விட்டு வைப்பது வங்கி பலமடையவோ அல்லது அப்பணத்தை இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவோ இடமேற்படுத்திக்கொடுப்பது போன்றதாகும்.

முஸ்லிம்கள் வட்டிசார் பணத்தை பயன்படுத்துவதில்லை. அது முஸ்லிம்களுக்கு ஹராம் எனும் தடுக்கப்பட்ட விடயமாகும். இவ்விடயத்தில் முஸ்லிம்கள் தவிர்ந்து நடக்கின்றனர். இலங்கை முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

எனினும், பாரியதோர் நிதி பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கின்றது. உலக இஸ்லாமிய அறிஞர்களின் வழிகாட்டுதலுக்கமைய அப்படியான பணத்தை ஏதோவோர் நற்பணிக்கு பிரதி உபகாரம் பாராது செலவுசெய்துவிட முடியும் என்பதை இலங்கை முஸ்லிம்களுக்கும் தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கையெடுக்கவேண்டும். 

Reviewed by Madawala News on 8/06/2017 02:25:00 PM Rating: 5