Kidny

Kidny

மாகாண சபைகள் தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் ஜனநாயகத்திற்கு முரணானது..


NFGG ஊடகப் பிரிவு-

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10.08.2017) காலை தெஹிவளையில் இடம் பெற்றது. இதில் மாகாண சபைகள் தொடர்பான 20ஆவது திருத்த சட்ட மூலம், முல்லைத்தீவு முஸ்லிம் மக்களது மீள் குடியேற்றம் தொடர்பான காணிப்பிரச்சினைகள், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணா நாயக அவர்களுடன் தொடர்பு படுத்தப்படும் பிணை முறி மற்றும் ஊழல் பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் , அதன் பிரதி தவிசளார் சிறாஜ் மசூர், தலைமைத்துவ சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 

மாகாண சபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடாத்தும் வகையில் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அதிகாரப் பகிர்வின் அடிப்படைகளுக்கு எதிரானதாகும். மாகாண சபைகளை பாராளுமன்றம் மூலம் கலைக்க முற்படும் இந்த முயற்சியானது மாகாண அதிகாரங்களில் மத்திய அரசாங்கத்தின் அனாவசியமான தலையீட்டை ஏற்படுத்த வழிவகுக்கும். அத்துடன் திவி நெகும போன்ற சட்டங்கள் மூலம் ஏற்கனவே மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரம் மீண்டும் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப் பட்டதை ஒத்த ஒரு நடவடிக்கையாகவே இதனையும் கருதவேண்டியுள்ளது.

 

அரசியல் யாப்பின் 154E சரத்துக்களில் கொண்டுவரப்படவுள்ள இந்த உத்தேச மாற்றங்கள் மக்களது ஜனநாயக உரிமையை மீறும் செயலாகவும் உள்ளது. 5 வருட காலத்திற்கே மக்கள் இந்த மாகாண சபைகளுக்கு வாக்களித்தனர்.அதனை விட சில மாகாண சபைகளின் காலங்களை நீடிப்பதற்கு இந்த சட்டத்தின் மூலமே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதேபோன்று, பாராளுமன்றம் விரும்பிய நேரத்தில மாகாண சபைகளை கலைப்பதற்கான வாய்ப்புக்களை இந்த திருத்த சட்ட மூலம் ஏற்படுத்துகின்றது. இதுவும் ஜனநாயக மீறல் நடவடிக்கையாகவே உள்ளது. ஆகவேதான், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் இதை சாதிக்க நினைப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. 

 

பொது சன அபிப்பிராய வாக்குக்கு விடப்பட்டு மக்களது அங்கீகாரம் பெறப்படாமல் இதனை செய்ய முடியாது. உண்மையில், தேர்தல்களை சந்திப்பதற்கு அரசாங்கம் பயப்படுவதன் காரணமாகவே இவ்வாறான உத்திகளை கையாளுகிறது.

 

முல்லைத் தீவு மாவட்ட முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதற்கான காணிகளைப் பெறுவதில் தோன்றியுள்ள சிக்கல் நிலமை கவலையளிப்பதாக உள்ளது. மாவட்டத்துடன் தொடர்பில்லாத புதியவர்கள் மீள் குடியேறுகின்றனர் என குற்றம் சாட்டப்படுகிறது.

 

2013 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு முஸ்லிம்களதும் அவர்களது சந்ததியினரதும் மீள் குடியேற்ற உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நடை முறை யதார்ர்த்தம் இப்போது வெளிப்பட்டுள்ளது.

 

1990 இல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது சந்ததியினரும் அங்கு மீளக் குடியேற உரிமையுடையவர்கள். அவ்வாறான புதிய தலைமுறையினரையே மாவட்டத்துடன் தொடர்பற்ற புதியவர்கள் எனப் பிழையாக குற்றம் சாட்டுகின்றனர்.

வடக்கும் அவர்களது தாயகமே. 

 

மீள் குடியேறவுள்ள இவர்களுக்கு காணிக்கச்சேரிகள் வைக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

 

225 ஏக்கர் காணியினை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்கள் 177 ஏக்கர் காணிகளையே கோருகின்றனர். இதற்காக மாற்றுக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த சர்ச்சசை உருவாக்கப்பட்டுள்ளது.

 

வட மாகாணத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ற வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது தொடர்பாக இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடன் விரிவான பேச்சு வார்த்தைகளை மேற் மேற்கொண்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்து பேசிவிட்டு பதிலளிப்பதாக அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்.

 

வடக்கிலும் முல்லைத்தீவிலும் தமிழ் மக்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பாகவும் காணிகள் தொடர்பாகவும் நியாயமான பிரச்சினைகள் உள்ளன. அவை உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். ஆனால் அதற்காக முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களது நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தாமதப்படுத்த முடியாது.

 

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணா நாயகவை மத்திய வங்கி பிணை முறி பிரச்சனையுடன் தொடர்பு படுத்தி இராஜினாமாச் செய்யுமாறு அழுத்தங்கள் வலுவாகி வருகின்றன. ஊழல் மோசடி தொடர்பான தார்மீகப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் விலகி விட முடியாது. நல்லாட்சி அடிப்படையில் இயங்கும் அரசாங்கம் என்ற பெயரில் இதற்கான கடமைப்பாடு அவர்களுக்கு இரட்டிப்பாகவே உள்ளது.

வெளிநாடுகளில் இவ்வாறான சர்ச்சசைகள் தோன்றும் போது உரியவர்கள் பதவி விலகும் கலாசாரம் உள்ளது. ஆனாலிங்கு தங்களுக்கு எதுவும் தெரியாதெனக்கூறி பொறுப்பானவர்களே தப்பிக்க முனைகின்றனர்.

இந்தியா பாகிஸ்தானிலும் கூட இவ்வாறான ஊழல் அரசியல் வாதிகளுக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இங்கும் அதே போன்ற குற்றவாளிகளைத் தண்டிக்கும், பதவியிறக்கும் நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். 

சிறு பான்மை சமூகங்களைப் பிரதிநிதிதுவப் படுத்தும் கட்சிகள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. 

மாகாண சபைகள் தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் ஜனநாயகத்திற்கு முரணானது.. மாகாண சபைகள் தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் ஜனநாயகத்திற்கு முரணானது.. Reviewed by Madawala News on 8/10/2017 06:54:00 PM Rating: 5