Kidny

Kidny

அழகிய தொனியை இழந்து வரும் இலங்கை பள்ளிவாயல் அதான் ஓசை. (கம்பளை சம்பவம் உட்பட...)

 
ஈமானியத்தை சுமந்த  முஸ்லிம்களை அல்லாஹ்தஆலாவை வணங்குவதற்காக தினமும் ஐவேளை அழைக்கும் அழகிய ராகமிக்க அழைப்பு அதான் ஆகும்.

முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அழகிய அதானைக்  கேட்க முடியும்.

 இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டில் அதான் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலில் ஒரு அங்கமாக பெரும்பான்மை மக்களால் கருதப்படுகின்றது.

அதான் ஏகத்துவம் , நபித்துவத்தின் உறுதிப்பாடு , ஏகத்துவம் நபித்துவம் மீதான சாட்சியம் , தொழுகையின் வெற்றி முதலானவற்றைப் பறைசாற்றுகின்றது.

இத்தகைய கருத்துப் பொதிந்த அதானுக்கு நம்மிள் எத்தனை பேர் அதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு பதில் கூறுகின்றனர் என்பது சிந்திக்கத்தக்கதாகும். தொழுகைக்கு தயாராகும் முஸ்லிம் அதான் சொல்வதில் இருந்து தொழுகைக்காக தன்னைத் தயார்படுத்துகின்றான்.


அதானின் மூலம் தஃவாவுக்கு களம்  அமைக்கலாம்.  பள்ளிவாசல்களில் முஅத்தினுக்கான தகைமைகள் வரையறுக்கபப்ட வேண்டும். ஆனால் நமது நாட்டில் முஅத்தின் தொடர்பாக எதுவித தiமைகளும் இல்லை.

அவர்களுக்கான சம்பளமும் சில சொற்சங்கள் மட்டுமே. அதான்கள் அழகிய தொனி, இனிய  ராகம் மற்றும் , சரியான உச்சரிப்பைக் கொண்டிருத்தல் அவசியம். ஆனால், தற்காலத்தில் பல பள்ளிவாசல் அதான்கள்  இனிமை , ராகம் என்பவற்றை இழந்து நிற்கின்றது.

இதற்கு பள்ளிவாசல் முஅத்தின்மார்களை குற்றம் சொல்ல முடியாது. பள்ளிவாசல் நிர்வாகங்கள் நமது முஅத்தின்களுக்கு உலமாக்கள் மூலம் உரிய வழிகாட்டல்களை பெற்றுக் கொடுப்பது அவசியம்.

ஆனால்,  நமது பள்ளிவாசல் நிர்வாகங்கள் எப்போதும் அசட்டையாக இருக்கும் விடயங்களில் அதானும் ஒன்றாகும் என்றால் பிழையாகாது. .


ஒரு தடவை ஒரு பாடசாலை மாணவனொருவன் எனக்கு  மத்திய கிழக்கில் இருந்து கொண்டு வந்த மேசைக் கடிகாரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இக்கடிகாரத்தில் ஐவேளை தொழுகைக்கு அதான் கேட்க முடியுமான வசதி காணப்பட்டது.


இக்கடிகாரத்தில் கூறப்படும் அதானை இந்து மத ஆசிரியரொருவருக்கு  நான் ஒலிக்க விட்டுக் காட்டிய போது, அந்த ஆசிரியர் என்னிடம் கூறிய வார்த்தைகள் ஆச்சரியமானது,

“இதனைக் கேட்கும் போது உள்ளத்தில் இனம்புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. இது  இனிமையானதாகவும் ஈர்ப்புள்ளதாகவும் இருக்கின்றது. நான் இப்படி ஒன்றைக் கேட்டதில்லை” என்றார்.
இச்சம்பவம் சகோதர மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்கு அதான் எவ்வளவு வாய்ப்பாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்குப் போதுமானதாகும்.


நமது பள்ளிவாசல்களில் சொல்லப்படும்   அதான் தொடர்பில் எதுவித திட்டமிடல்களும் நம்மத்தியில் இல்லை. இதில் துரதிஸ்டமான நிலை என்னவென்றால் இன்று இந்த அதான் இன்று ஏனைய மத சகோதரர்களுக்கு தொல்லையானதாகவும் சகித்துக் கொள்ள முடியாததாகவும் மாறியுள்ளது.

இதனால் தான் “பள்ளியென் கேகஹனவா” “பள்ளியில் கத்துகின்றனர்” என்று அவர்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வோம்.


எனக்குத் தெரிந்த கிராமமொன்றில் பள்ளிவாசலில் பள்ளியில் முஅத்தினராக கடமையாற்றுபவர் அப்பகுதி பெரும்பான்மை மக்களின் நல்ல நண்பராவார். இவரை ஒரு முறை விசாரித்த பெரும்பான்மை சகோதரொருவர் “பள்ளியென் கேகஹனெ அய்யா இன்னவத” “பள்ளியில் கத்துபவர் இருக்கின்றாரா?” என்று நட்புடன் வினவியுள்ளார். இது சகோதர மக்களின் நமது அதான் தொடர்பிலான புரிதலை வெளிப்படுத்துகின்றது.


இன்றைய சமகாலத்தில்  நகரமயமாக்கம் , மக்களின் அறிவு முன்னேற்றம், சுதந்திர வேட்கை முதலான காரணங்களால் மக்கள் மத்தியில் சூழல் தொடர்பாக தீவிர கரிசனை செலுத்தும் நிலை காணப்படுகின்றது. இதனால் ஒலியினால் சூழல் மாசடைதல் தொடர்பாக தனிமனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கமும் இது விடயத்தில் அக்கறை காட்டி வருகின்றது. இது தொடர்பான சட்டவாக்கங்களும் மேலும் வலுவடையும் என்பது நிச்சயம்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் வட கிழக்கிற்கு வெளியில் பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் சிதறி வாழ்கின்றனர்.

இத்தகைய பின்புலத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பல பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. இப்பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் அதான் சத்தமாக ஒலிப்பதால் அப்பகுதியில் வாழும் பிற மத சகோதரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றி சிந்திப்பது அவசியம்.


மேலும் ஒரு பள்ளிவாசலில் அதான் முடியும் போது மற்றுமொரு பள்ளிவாசலில் அதானை ஆரம்பிப்பது, ஜும்ஆ பிரசங்கங்களை ஒலிபெருக்கியில் போடுவது, நீண்ட பயான்கள் மற்றும் தொழுகைக்குப் புறம்பான சில வைபவங்களுக்கான ஒலிபெருக்கிப் பாவனை , இசா தொழுகைக்கு ஒலிபெருக்கிப் பாவனை ,  எதனையெல்லாம் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்பது என்று புரியாமல் நினைத்த நேரத்தில் நினைத்த அறிவித்தல்களையெல்லாம்  பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்பது, ஜனாஸா அறிவித்தல் என்ற பெயரில் உயிரோடு வாழ்பர்களின் நீண்ட பெயர்ப்பட்டியல்களை ஒலிபெருக்கியில் அறிவித்துப் பெருமைப்பட்டுக் கொள்வது முதலானவை தொடர்பில் கட்டாயம் சிந்திப்பது அவசியம்.
எனவே பல பள்ளிவாசல்கள் , தக்கியாக்கள் காணப்படும் இடங்களில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் கலந்து பேசி சில தீர்மானங்களுக்கு முன்வருவது அவசியம் என்பதை அண்மையில் கம்பளையில் நடைபெற்ற சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.


கம்பளையில் ஒரு பகுதியில் பல பள்ளிவாசல்கள் , தக்கியாக்கள்  காணப்படுகின்றன. இப்பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளின் சத்தத்தை உயர்த்தி வைத்து     அதான் சொல்லபடுவதால் அசௌகரியமுற்ற பெரும்பான்மை சகோதரொருவர் சில வாரங்களுக்கு முன்னர் பள்ளிவாசலுக்கு முன்பு வந்து  ஏசிவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகதினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குறித்த பெரும்பான்மை சகோதரர்  அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் வசித்து வருபவராவார். இவர் ஒரு உளவியலாளருமாவார். இவர் விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த போது இங்கு பள்ளிவாசலில் சொல்லப்படும் அதானின் அதிகரித்த சத்தத்தினால் அசௌகரித்திற்குள்ளாகியுள்ளார்.

இவர் பொலிஸ் நிலையத்திற்கு வரும் போது ஒலியினால் சூழல் மாசடைவது தொடர்பாக பல சர்வதேச சட்டதிட்டங்களைக் கொண்ட ஆவணங்களையும்  கொண்டு வந்துள்ளார்.  இது கம்பளை  பொலிஸாரால்  சமரசத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து கம்பளை ஜம்இய்யதுல் உலமா சபை இப்பிரதேச பள்ளிவாசல் நிர்வாக சபைகளுடன் பேசி ஒரே நேரத்தில் பல பள்ளிவாசல்களில் அதான் சொல்வது தொடர்பில் ஒழுங்குமுறையொன்றைக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இச்சம்பவத்தை குறித்த பெரும்பான்மை சகோதரர்  இன ரீதியாக அணுகவில்லை. இலங்கையில்  அதான் சொல்லப்படும் ஒழுங்கு தொடர்பில் அவர் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளார். அவர்,  தான் கொண்டு  வந்த ஆவணங்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு சென்றதாகவும்   ஆசிரியர் எம். றிஸ்வி தெரிவித்தார்.

பள்ளிவாசல் நமது அதான்கள் சகோதர மக்களை கவரக்கூடியதாக அமைதல் பல பிரச்சினைகளையும் சவால்களையும் தவிர்க்கக் காரணமாக அமையும். இந்நிலையில் நமது பள்ளிவாசல் நிர்வாகங்கள் பள்ளிவாசல் ஒலிபெருக்கிப் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும். இதற்கான ஒழுங்கு முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.  இதற்கான வழிகாட்டல்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் சூரா கவுன்சில் முதலானவை வழங்க வேண்டும். இன்றேல்  முஸ்லிம் சமூகம் தற்போது அநுபவிக்கும் சலுகைகளை எதிர்காலத்தில் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றலாம் என்பதை சொல்லி வைக்க வேண்டியுள்ளது.

எம்.எம்.எம். ரம்ஸீன் சேர்
கெலிஓயா
அழகிய தொனியை இழந்து வரும் இலங்கை பள்ளிவாயல் அதான் ஓசை. (கம்பளை சம்பவம் உட்பட...) அழகிய தொனியை இழந்து வரும் இலங்கை பள்ளிவாயல் அதான் ஓசை. (கம்பளை சம்பவம் உட்பட...) Reviewed by Madawala News on 8/11/2017 12:16:00 PM Rating: 5