Yahya

தலைவர் ஹக்கீமின் ஒலுவில் சர்வதேச துறைமுகம் தொட்டு, டுபாய் மற்றும் பஹ்ரைன் வரை ஒரு பார்வை..முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் கல்முனைக்கான மாபெரும் அபிவிருத்தி என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில், கல்முனையையும், சம்மாந்துறையையும் முறையே துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற அளவிற்கு அபிவிருத்தி செய்யப்போவதாக அறிவித்தார்.

பொதுத்தளங்களில் கேலிக்கூத்தாகவும், நகைச்சுவை நடிகர் வடிவேலை மிஞ்சும் அளவிற்கு நெட்டிசன்களால் கேலியாக்கப்பட்ட விடயமாக கடந்த இரண்டு நாட்கள் காணக்கூடியதாக இருந்தது.

தலைவர் ஹக்கீம், ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு எதிர்பார்ப்பை வழங்கி அந்த ஊரின் வாக்குகளை சவீகரிப்பது அவரது அரசியல் தந்திரம். ஆரம்பத்தில் சிறந்த பலன் தந்த இந்த அரசியல் தந்திரம் தற்போது மக்களால் நம்பப்படவில்லை என்பது, கடந்த இரு நாட்களில் பொதுத்தளத்தில் இருந்து காணக்கூடியதாக இருந்தது.

பெருந்தலைவர் அஷ்ரப்பினுடைய மரணத்தை தொடர்ந்து தனது ஏமாற்று வாக்குறுதி அரசியலை கையிலெடுத்த தலைவர் ஹக்கீம் முதலாவதாக கிழக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
"ஒலுவில் துறைமுகத்தை தலைவரின் கனவு போல் சர்வதேச துறைமுகமாக மாற்றுவோம்" என்பதாகும். இதனை நம்பி வாக்களித்தனை உணர்ந்த ஹக்கீம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஊருக்கும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அவற்றை பின்னர் பட்டியலிடுவோம். இவ்வாறு சர்வதேச துறைமுகமாக வாக்குறுதியளித்த ஒலுவில் துறைமுகம் இறுதியில்
மீன்பிடி துறைமுகமாக மாற்றப்பட்டு தற்போது அதுவும்  செயலிழக்கும் நிலையில் உள்ளது.

கல்முனை, சம்மாந்துறையை துபாய் பஹ்ரைனாக மாற்றுவேன் என்பதற்கு முன்னர், பொத்துவிலுக்கு சில வாக்குறுதிகள் வழங்கியிருந்தார், அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த வாக்குறுதியாக, குடிநீர் பிரச்சினை எதிர் நோக்கும் மக்களுக்கு
"கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கி தருவேன்" என்று வாக்குறுதியளித்தார்.
இலங்கை அரசாலே ஏனைய பிரதேசங்களுக்கு செய்ய முடியாத திட்டத்தை ஹக்கீம் பொத்துவில் எனும் தனி ஒரு ஊருக்கு செய்து தருவதாக உறுதியளித்தார். இதை விட மக்களை முட்டாளாக்கும் அறிக்கை எதுவுமில்லை என்பது வேறு விடயம்.
அத்தோடு பொத்துவிலுக்கு
1. ஹெடஓயா நீர்ப்பாசன திட்டம்
2. தனியான கல்வி வலயம்
3. வைத்தியசாலை தரமுயர்த்தப்படுதல்
4. காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு
5. மாகாண சபை அதிகாரம்
6. பொதுச் சந்தை அபிவிருத்தி
போன்ற வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அவை இன்னும் பகல் கனவாகவே உள்ளன.

 தேசியப்பட்டியல் எனும் ஒரு வாக்குறுதி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்டது, அதுவும் தொடர்ந்து 17 வருடமாக வழங்கி வரும் வாக்குறுதி இது. இந்த ஒரு வாக்குறுதியை நம்பியே அட்டாளைச்சேனை மக்கள் தமது 15,000 வாக்குகளை முஸ்லிம் காங்கிரசுக்கு ஒவ்வொரு முறையும் அளிக்கின்றனர். இந்த பாராளுமன்றத்தில் எவ்வாறாயினும் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என கூறப்பட்டாலும், இறுதிப்பகுதியை எட்டியும் இன்னும் எட்டாகனியாகவே உள்ளது அட்டாளைச்சேனைக்கு.

சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை என வாக்குறுதியளித்து பல தேர்தல்களை கடந்தும் இன்னும் அது பகல்கனவாகவே உள்ளது சாய்ந்தமருது மக்களுக்கு.

வட்டமடு காணிப்பிரச்சினையை தீர்த்து முதுகெலும்பான விவசாயிகளுக்கு வழங்குவோம் என்ற வாக்குறுதி, இன்று மேய்ச்சல் தரையாக மாற்றம் பெற்றுள்ளது.

ஒலுவில் காணி சுவீகரிப்பு நஷ்ட ஈடு, கரையோர மாவட்ட கோரிக்கை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் கையளிப்பு,
என்பனவெல்லாம் மறைந்த சுவடுகளாக மாறி விட்டன.

வட்டமடு, பொன்னம்வெளி வடமாகாண மக்களின் காணிப்பிரச்சினை போன்ற காணிப்பிரச்சினைகள் என்பனவெல்லாம் தேர்தல் காலங்களில் காலா காலமாக தலைவர் ஹக்கீமால், தீர்க்கப்பட இருக்கும்  பிரச்சினைகளாக வழங்கி வரும் வாக்குறுதிகளே, இக்காணிகள் எல்லாம் சிங்கள ஆக்கிரமிப்பும், இனவாதிகளின் வனபரிபாலன சபைக்குள் உள்ளடக்கும் திட்டங்களும் செவ்வனே நடைபெறுகின்றன.

இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக அண்மையில் சம்மாந்துறை மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலையை ஒரு வாரகாலத்திற்குள் அகற்ற பிரதமரோடு பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒரு அறிக்கையும் விடப்பட்டது. சிலை இப்போது விகாரையாக அபிவிருத்தி அடையும் தருணத்தை நோக்கியுள்ளது.
ஆனால் வழங்கிய வாக்குறுதி நீரில் இட்ட கல்லாக அசையாமல் உள்ளது.

இவ்வாறு பலநூறு வாக்குறுதிகளை வழங்கி செல்லாக்காசாகி போன ஹக்கீமின் மற்றுமொரு களியாட்டமே கல்முனை மற்றும் சம்மாந்துறை மக்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள இந்த துபாய் பஹ்ரைன் தூண்டில்.

முதலில் துபாயும் பஹ்ரைனும் அபிவிருத்தியின் உச்ச கட்டத்தை எட்டுவதற்கு அந்நாடுகளுக்கு பெற்றோலிய வளம் காணப்பட்டது. தன்னிறைவு கண்ட நாடான துபாய் தனது நாட்டை பலவழிகளிலும் அபிவிருத்தி செய்துள்ளது.
2025 வரைக்கும் முயற்சித்தால் மாத்திரமே வாங்கிய கடனை அடைக்க முடியும் என்ற நிலைக்கு சென்றுள்ள இலங்கையில் இவ்வாறான அபிவிருத்தி சாத்தியமா என சிந்தித்தால் அது முட்டாள்களின் முழுக்கனவு என்பது எவருக்கும் புரியும்.

மேலும் இவ்வாறான ஒரு பாரிய நிதியை இரு முஸ்லிம் பிரதேசங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்ய எந்த ஒரு சிங்கள அரசும் ஹக்கீமுக்கு ஒத்துழைக்காது. ஏனெனில் தலை நகரான கொழும்பு கூட இன்னும் துபாயின் கால்வாசி அளவு கூட அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை.

கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கூட்டமைப்பு தலைவர் ஹக்கீமுக்கு சவாலாக உள்ளமையே இவ்வாறான பாரிய எதிர்பார்ப்புகளை மக்கள் மனதில் விதைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசியல்வாதிகளுக்கு, மக்கள் தமது அரசியல்வாதிகளுடைய தேவையை உணர வேண்டிய பிரச்சினைகளை கிடப்பிலே வைத்துக்கொண்டு அவர்களது தேவையை மறைமுகமாக மக்களுக்கு உணர்த்தி அரசியலை இருப்பை நகர்த்தி செல்வர். இந்த விடயத்தில் தலைவர் ஹக்கீம் தலை சிறந்த விற்பன்னர். இவ்வாறு போடப்பட்ட ஒரு விதையே மேற்கூறிய துபாயும் பஹ்ரைனுமாகும்.

மாகாண சபை, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கி தனது கட்டுக்குள் வைத்திருந்த பிரதேசம் கை நழுவி செல்வதை உணர்ந்த தலைவரின் அடுத்த கட்ட அரசியல் யுக்தியே இந்த துபாய் பஹ்ரைன் அபிவிருத்தி.

தலைவர் ஹக்கீமிடம் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த சாதாரணமான ஒரு குடிமகனாக விடும் சவால்,
துபாய் பஹ்ரைன் போன்று எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யத்தேவையில்லை. குறைந்தது திண்மக்கழிவுகளை அகற்ற ஒரு முறையான திட்டத்தையும், வீடில்லாத வறிய மக்களுக்கு வீடுகளும் அமைத்து இந்த இரு பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைத்து காட்டுங்கள் என்பதாகும்.

அட்டாளைச்சேனை அஸ்லம் கட்டாரிலிருந்து
தலைவர் ஹக்கீமின் ஒலுவில் சர்வதேச துறைமுகம் தொட்டு, டுபாய் மற்றும் பஹ்ரைன் வரை ஒரு பார்வை.. தலைவர் ஹக்கீமின் ஒலுவில் சர்வதேச துறைமுகம் தொட்டு, டுபாய் மற்றும் பஹ்ரைன் வரை ஒரு பார்வை.. Reviewed by Madawala News on 8/06/2017 04:02:00 PM Rating: 5