Kidny

Kidny

திறப்பு விழா காணும் காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம்.


திறப்பு விழா காணும் காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம்.
(KATTANKUDY CHILDREN’S BOOK CLUB - KCBC)

‘உலகத்தைப் புத்தகத்தில் படிப்போம்; உலகத்தையே புத்தகமாய்ப் படிப்போம்’ என்று சொல்லப்படுகிற நிலையில் வளரும் சிறுவர்களுக்கு உலகத்தைப் புத்தகங்களே செவ்வையாக அறிமுகப்படுத்துகிறன.

புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் சிறுவர்கள் அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.

சிறுவயதில் வாசிப்புப் பழக்கமுடையதோர் குழந்தையே பிற்காலத்தில் ஒர் சிந்தனையாளராக  திகழும். பெற்றோர்கள் சிறு வயதுக் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசிப்பதானது அவர்களின் மூளை வளர்ச்சியில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றது.

இளமையில் மேற்கொள்ளும் புத்தக வாசிப்புப் பழக்கம் முதுமை வரை தொடரும். புத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மக்களைப் போன்று மகிழ்ச்சியளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்!

சிறுவர் இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டால் வருங்காலத்தில் பிற இலக்கியங்களும் புறக்கணிக்கப்படும்.

கற்பனை என்ற அறிவுப் போரின் முன்னரங்காக நூலகங்களே அமைகின்றன. பயனுள்ள கற்பனைகளே வளமான வாழ்வுக்கு இட்டுச் செல்லும். அதற்குரிய தளத்தை தொடர்ந்த வாசிப்பு உருவாக்கிச் செல்லும். சிறுவர் நூலகங்களே வாசிப்புக்குரிய வழியைத்திறந்து விடுகின்றது.

சிறுவருக்குரிய தகவலின் காப்பகமாகவும், களஞ்சியமாகவும், பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் சிறுவர் நூலகங்களே காணப்படுகின்றன.

லெனின் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் சிறுவர்களுக்கென்று இரண்டு இலட்சம் நூலகங்களை உருவாக்கினார். நூலகம் உங்களை உயர்த்தும்; வாருங்கள் படிப்போம் என்று லெனின் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிறுவர்களுக்கென்று புத்தகங்கள் வெளிவந்த போது அவை முதலில் பொது நூலகங்களிலேயே இடம்பெற்றன. பொது நூலகம் பெரியோர்களுக்கானது. அவர்களின் தேவையும் நோக்கமும் வேறுபட்டது. இது புரிந்துகொள்ளப்பட்டபோது சிறுவர் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டது. 1885 ஆம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன் முதலாகச் சிறுவர் நூலகம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு புத்தகங்களினதும் வாசிப்பினதும் சிறப்புக்கள் பற்றியும், கல்விமான்களாலும் பெருந்தலைவர்களாலும் புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவங்கள் பற்றியும் சிறுவர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு சிறுவர் இலக்கியங்கள் எத்தனை முக்கியத்துவமானது, சிறுவர் நூலகத்தின் அவசியத்தைப்பற்றியும் எழுதிக்கொண்டே போகலாம்.  

ஆனால், இன்று நாம் பாடசாலைக் கல்வியுடன் தொடர்பான பயிற்சிப் புத்தகங்களும், விளக்கவுரைப் புத்தகங்களுமே சிறுவர் புத்தகங்களாகும் எனப் பெருவாரியாகக் கருதப்படும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சிறுவர் இலக்கியங்களை எதற்காக சிறுவர்கள் படிக்க வேண்டும் எனக் கேள்வி கேட்கும் பெற்றோர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதுமட்டுமன்றி வாசிப்பு மாதம், புத்தக தினம் போன்ற நிகழ்வுகளின் போது நடாத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளும், பாடாசாலை நூலகங்களில் காணப்படும் புத்தகங்களும் சிறுவர் இலக்கியங்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றது என்பதற்கான சிறந்த சான்றுகளாகும்.

இலங்கையில் தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியுடன் தொடர்பான புத்தகங்கள் தவிர்ந்த ஏனைய புத்தகங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றன. இந்த நிலமைக்கு பிரதான காரணிகளாக பொது நூலகங்களினதும், சமூக ஆவலர்களினதும், கல்விமான்களினதும், பாடசாலைகளினதும் கவனயீனமும், தமிழ் மொழியிலான சிறுவர் புத்தகங்கள் இலங்கையில் மிகக் குறைவாக வெளியிடப்படுவதும், இந்தியாவில் வெளியிடப்படும் சிறுவர் புத்தகங்கள் அனைத்தும் இலங்கையிலுள்ள புத்தக விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறாததுமாகும்.

பெற்றோர்கள் தங்களது சிறுவர்களுக்காக அனைத்து புத்தகங்களையும் வாங்கி விட முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பை சிறுவர் நூலகங்களே வழங்குகிறது. சமூகத்தைப் பயனுள்ள வகையில் இயங்கச் செய்வதில் சிறுவர் நூலகங்களின் பங்கு மிக முக்கியமானது.

சிறுவர் புத்தகங்கள் அனைத்தையும், மாணவ சமூகத்திற்கு கிடைக்கப்பெறச் செய்ய வேண்டும் என்ற பாரிய பொறுப்பையும், கடமையையும் தனதாக்கிக் கொண்டு தொடங்கப்பட்ட அமைப்புத்தான் காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகமாகும் (KCBC).

KCBC ஆனது சிறுவர் புத்தகங்களான சிறு கதைகள், உலக சிறுவர் இலக்கியங்கள், நாட்டுப்புறக் கதைகள், நீதிக்கதைகள், தார்மீகக் கதைகள், கவிதைகள், பாடல்கள், சிறுவர் நாவல்கள், சித்திரக் கதைகள், வேடிக்கைக் கதைகள், பொது அறிவு நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புக்களிலான சிறுவர் புத்தகங்களை ஒன்று சேர்த்து தனது முதலாவது கட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதோடு, சனிக்கிழமை (26 ஆகஸ்ட் 2017) முதல் தங்களது இரவல் நூலகப் பிரிவையும் மாணவர்களுக்காக திறக்கவுள்ளது.

தனது இரன்டாவது கட்ட வேலைத்திட்டமாக தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறமையை மேம்படுத்துவதற்காகவேண்டி ஆங்கில மொழியிலான சிறுவர் புத்தகங்களையும் மற்றும் பாடசாலைக் கல்விக்கு அவசியமான புத்தகங்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. அத்தோடு அனைத்து சிறார்களினதும் நன்மை கருதி தனது மொபைல் நூலகத்தையும் தொடங்கவுள்ளது.   இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் இவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதோடு, தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான அனைத்து சிறுவர் புத்தகங்களிலும் தன்னிறைவுகண்ட, தனித்துவமான, முன்னோடியானதொரு சிறுவர் நூலகமொன்றை நிறுவுவதே KCBC யின் பிரதான இலக்காகும்.

ஓர் நூலகம் உயிரோட்டமுள்ளதாக இருப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும், அதன் அங்கத்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் தொடர்ச்சியான புத்தக சேகரிப்பு மிகவும் அவசியமானதொன்றாகும்.  இதனைக் கருத்தில்கொண்டு தங்களது முதலாம் கட்டப் பணிகள் தொடர்வதோடு தொடர்ந்தும் தமிழ் மொழியிலான சிறுவர் இலக்கிய புத்தக சேகரிப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதோடு, எதிர்காலத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு சிறுவர் புத்தகத்தையும் மாணவ சமூகத்திற்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதே தங்களது தலையாய கடமையாக கொண்டிருக்கும்.

சிறுவர்களின் அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை பெற்றுக் கொடுப்போம். வாசிப்பை நேசிப்போம்! வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்! புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும், கலங்கரை தீபங்கள் என்போம்!!

காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம் (KCBC) பற்றிய மேலதிக விபரங்களுக்கு facebook.com/kkycbc

kkycbc.libib.com ஆகிய இணைப்புகளை பார்வையிடவும்.
திறப்பு விழா காணும் காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம். திறப்பு விழா காணும் காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம். Reviewed by Madawala News on 8/26/2017 09:22:00 AM Rating: 5