Ad Space Available here

ரூஹ் ஒரு புரிதல்...... (பாகம் 1 )


பாரிய வெளியைக் கையில் தந்து ஓரிரு நாட்களுக்குள் உழுது, விதைத்து முடித்து விடுமாறு ஏவுவது போல சாத்தியச் சிரமமானது இக்காரியம்... ரூஹ் சம்பந்தமான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் எனக்கான ஒரு புரிதலை சமர்ப்பிக்கின்றேன்....


மனித உடல் பொத்தம் பொதுவாக மூன்று கட்மமைப்புக்களாக நிறுவப்பட்டுள்ளது. அதில் முதலாவது உடலாகும். மண்ணிலிருந்து தருவிக்கப்பட்ட அது மீண்டும் மண்ணுக்கே சொந்தமாகிப் போகும். பௌதீகத் தாக்கங்களை தாங்கும் இவ்வுடல், உணர்வுகள் உட்செலுத்தப்படும்போது அதனுடைய வெளி செயற்பாட்டாளனாக மாறி இயங்குவது அவதானிக்கத்தக்கது...


இரண்டாவது உயிராகும். ஒரு மனிதன் கருவிற்குள் உருவாகத் தொடங்கிய காலம் தொடக்கம், ஏன்? தந்தையின் உடலினுள் உயிரணுவாகச் சேமிக்கப்பட்டிருக்கும் காலத்திலேயே அவ்வுயிர் அங்கு சேர்க்கப்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் தாயின் கருவில் முழுப் பரிணாமத்தோடு, குழந்தை பிறத்தல், மற்றும் மலக்குல் மவ்த் அவனைக் கைப்பற்றும் வரையிலான காலம்வரை நிர்ணயிக்கப்பட்ட அவனது உயிர் அவனது உடலில் தங்கும். இது இரண்டாவது கட்டமைப்பான உயிராகும்...
மூன்றாவது கட்டமைப்புதான் ஆன்மாவாகும். அதை அரபியில் 'ரூஹ்' என்போம். அறியப்பட்ட ஏதோவொன்று என்று ஆரம்பத்திலேயே பொருள் செய்துவிடுதல் நல்லது.


எம்மவர்கள் ஒன்றென நினைத்திருப்பவைகள் நடைமுறையில் வெவ்வேறானவை. அறிவும் புத்தியும் வெவ்வேறானது. உயிரும், ஆன்மாவும் வெவ்வேறானது. மனதும் இதயம் மற்றும் மூளையும் வெவ்வேறானது.
ரூஹிற்கு உயிர் என்று மொழிபெயர்த்தலே மடமையானது. உயிர் என்றால் அரபியில் 'ஹயாத்' என்று பொருள்படும். உயிரிற்கு ரூஹ் என்று மொழிபெயர்த்ததனால்தான் இவ்வாறான சந்தேகங்களும், கேள்விகளும், உரையாடல்களும் வெளிக்கிளம்பின...


ஆன்மா ஆத்மார்த்தத்துடன் (ஆன்மீகம்) தொடர்புபட்டது. Spiritual என்ப்படும் பகுதியை ஆன்மா உள்ளடக்கிக் கொள்கிறது. Moral எனப்படும் அறப்பகுதி இதனோடு ஆங்காங்கே தொடர்புபடும். மனிதர்கள் மாத்திரமே இம் மூன்றாவது கட்டமைப்பான ஆன்மீகத்தை உணர்ந்து கொள்ள கடப்பட்டுள்ளார்கள். மிருகங்கள், பறவைகள் போன்றவை இந்தப் பகுதியை விட்டும் முற்றாக விலக்கலளிக்கப்பட்டுள்ளன. ஆன்மீகத்தை அறிந்து கொள்ளவும், ஆன்மீக வறுமையை மனிதனவன் போக்கிக் கொள்ளவும் அவன் எடுக்கும் சிரத்தைகள் இதன் இருப்பை உறுதி செய்கின்றன..


புகாரி, முஸ்லிமில் இடம்பெற்றுள்ள பிரபல்யமான ஹதீஸைப் பற்றிய அறிவுள்ளவர்கள் இப் பகுதியைத் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். 40 நாட்கள் விந்தாகவும், 40 நாட்கள் இரத்தக் கட்டியாகவும், 40 நாட்கள் சதைக் கட்டியாகவும் தாயின் வயிற்றினுள் ஒரு குழந்தையினுடைய ஆரம்பகால கட்டங்கள் அமையப் பெற்றுள்ளன. மொத்தம் 120 நாட்கள். அவ்வாறென்றால் 04 மாதங்கள். ஆரம்பகால 04 மாதங்களும் முழு உருவம் பெறா ஓர் உயிருள்ள அமைப்பே இதுவாகும்.


அது ஓர் உயிரற்ற அமைப்பல்ல. உயிரற்ற எந்த அமைப்பும் வளர்தலிலும், பரிணாமப்படுதலிலும் சாத்தியமற்றதொன்றாகும் .


4 மாதங்களுக்குப் பிறகு ஒரு வானவர் இறக்கப்பட்டு அச் சதைப்பிண்டத்திற்கு ரூஹை ஊதுவார். அவனது வாழ்வாதாரம், வாழ்நாள், வாழ்நாள்ச் செயற்பாடுகள், மற்றும் அவனது நிலை (நல்லவனா? கெட்டவனா?) போன்ற நான்கு விடயதானங்களையும் விதித்து விடுவார்.


உயிர் ஏலவே அமைந்தது என்பதனால்தான் வானவர் இங்கு ஆன்மாவை ஊதுகிறார். ஒரு மனிதனுத்குரிய உயிரைப் பொறுத்தவரையில் இறைவன் அவனிடமிருந்து ஊதுவதாகும். ஆன்மா மலக்குமார்களோடு தொடர்புபடுவதால் இவ்விடமே அவை இரண்டிற்குமான தெளிவுப்பாடு புலப்பட்டிருக்கும்.


இவ்விடம் இன்னொன்று கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். 'கல்பு' என்றால் என்ன? அதன் தமிழ் மொழிபெயர்ப்பு 'மனம் என்றால் எவ்விடம் உள்ளது அது? போன்ற கேள்விகள் பொதுவாக எழுபவை. அல்குர்ஆனில் ஒட்டுமொத்தமாக 09 இடங்களில் இந்தக் கல்பு என்ற சொல் வருவததோடு 07 இடங்களில் இதயத்தைக் குறித்தும், 02 இடங்களில் மூளையைக் குறித்தும் வருகின்றன..
எனவே கல்பு (மனம்) என்றால் இந்த இரண்டும்தான் என்று எடுக்கப்படும் ஏகபோக முடிவு எதற்கும் முரண்பாடானதொன்றல்ல. மூளை என்பது தரவுகளை உள்வாங்கி, உணர்த்தி, மையமாக நின்று தொழிற்படும் ஒரு Mother Board போன்றது. இதயம் என்பது தரவுகளை நிரந்தரச் சேமிப்புள்ளாக்கும் ஒரு Hard Disk போன்றது. உணர்வுகளும் இதே செயற்பாட்டுத் தோரணையில்தான் இயங்குவது அவதானிக்கத்தக்கது.


அதாவது மூளை அறிவோடு தொடர்புடையது. இதயம் இரத்தத்தோடு தொடர்புடையது. அது தவிர அறிவியலாளார்கள், உளவியலாளர்கள் எனப்படுவர் இக் கல்பை 04 வகைககளாகப் பிரிப்பர்.


அதிலொன்று Unconscious Mind. இதைச் சுருக்கமாக குழந்தை, மழலை மனதுகளுக்கு உதாரணங்காட்டிவிடலாம். எதையும் அறியா, அறிந்தாலும் உணர்வுகள் எத்திக்கொள்ளா தூய மனதாகும்.


இரண்டாவது Conscious Mind. இது மனிதர்களில் சாதாரணமாக, அதாவது அவன்
மனிதன் என்ற கட்டுக்கோப்புக்குள் கணிக்கப்படுவதற்கான மனதாகும். மனிதர்களுடைய அறிமுகங்கள், ஞாபகங்கள், உணர்வுக் கையாளுகைகள், தேவைகள் போன்றவைகளை இந்தப் பகுதி மனமே கையாடல் செய்கிறது.
மூன்றாவதான subconscious Mind எனப்படுவது நனவிழி மனது என்று பொருள்படும். இந்த மனதிற்கான பொருட்கோடலை ஒரு உதாரணத்தின் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். ... 05 வருடங்களிற்கு முன் நான் வீதியில் இடறிவிழுந்த போது என்னை தூக்கிக் கொடுத்து நான் வீடு போய்ச் சேரும்வரை உதவி செய்த ஒருவரை 05 வருடங்களின் பின் இன்று பார்க்கும் பொழுது பலத்த மனப்போராட்டத்தின் பிறகு அவரது அறிமுகமும், அவர் செய்த காரியமும் ஞாபகம் வந்ததென்றால் அங்கு தொழிற்படுவது நனவிழி மனதாகும்.


அது மாத்திரமின்றி எச் செயலும் எண்ணங்களின் படியே அமைகிறதென்பது இஸ்லாமியப் பொது விதியாகும். அச் செயற்பாடுகளுக்கேற்ற எண்ணங்களும் இன் நனவிழி மனதாலேயே பிறப்பிக்கப்பட்டு கண்கானிக்கப்படுகின்றன.
நான்காவது Super Conscious Mind ஆகும் இது சாமானியர்களுக்கு அப்பாற்பட்டது. இது வஹியோடு தொடர்புடையது. நபிமார்களும் இந்த மனதைதான் எத்திக் கொண்டார்கள். அது அவர்களுக்கு மாத்திரமான சிறப்பு இணைப்பு என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்...


ரூஹ் பற்றிய புரிதல் பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தூக்கம் பற்றிய புரிதலும் அத்தியவசியமாகிறது. வஹி அறிவிப்புக்களில் அது தெளிவாகவே சிறுமரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூக்கம் ஒருவரிடம் வருகின்றதா? போகிறதா? என்ற சர்ச்சைகளும் உரையாடப்படுவது ஆச்சரியமானது.


தூக்கத்தின் போது அர் ரூஹ் எம்மிடம் தங்குவதில்லை. ஆனால் எம் உயிர் எம்மிடம் தங்கும். அது கழற்றியெடுக்கப்பட்டு எங்கேயாவது சுழன்று கொண்டே இருக்கும். அவன் எழுந்தாலும் நிலைக்கு வரத் தாமதமாகுவது ரூஹ் மீண்டும் பழைய நிலையை எத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலப்பகுதியினால் ஆகும்...


வற்றா ஊற்று தோற்றுப் போகும் அளவிற்கு இது சம்பந்தமான புரிதல்கள் வஹி முழுவதும் விரவிக் கிடக்கிறன. இறைவன் நாடினால் 'புரிதல் 02'ல் இன்னும் சுவாரஸ்யமான அம்சங்களோடு சந்திக்கிறேன்... அனைவரும் புரிந்து கொள்வதற்காக இலகுதமிழ் கையாளப்பட்டுள்ளது...


ரூஹ் சம்பந்தமாக இன்னும் கேள்விகளும் குழப்பங்களும் உங்களுக்குத் தொடர்ந்தால் இக் குர்ஆன் வசனம் உங்களுக்கு கேடயமாகும்...

وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا
ரூஹ் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது அல்லாஹ்வின் விடயதானங்களில் உள்ளதாகும். அது சம்பந்தமாக நீங்கள் குறைவைகவே அறிவு கொடுக்கப் பட்டிருக்கிறீர்கள்.. (அல் இஸ்ராஃ : 85)
ரூஹ் ஒரு புரிதல்...... (பாகம் 1 ) ரூஹ் ஒரு புரிதல்...... (பாகம் 1 ) Reviewed by Madawala News on 8/20/2017 09:31:00 PM Rating: 5