tg travels

பாடசாலைக் கழிவறைகளும் பெண் மாணவிகளின் கஷ்டங்களும்..


இலங்கைத் தேசம் கல்வித் துறையில் மேலோங்கி வருகிறது.
உலகின் கவனத்தை ஈர்க்கும் நிலைக்கு இங்கே கற்றோர் வீதம் உயர்ந்து வருகிறது.

இங்கே ஆண், பெண்களுக்கு என்ற தனிப் பாடசாலைகளும், கலவன் பாடசாலைகளும் என நாட்டில் பரவலாக பாடசாலைகள் காணப்படுகின்றன.
இலங்கையில் கல்வியறிவும் அதன் தரமும் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே இருக்கின்றது.

 தனியார் துறைக் கல்வி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனங்களில் இணைந்து கல்வி பயில்வதற்கான வசதிகளை விளம்பரத்தின் மூலம் வெளிப்படுத்தி, மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஈர்க்கின்றனர். இது ஆரம்பப் பாடசாலையிலேயே தொடங்கி பல்கலைக் கழகம் வரை பொருந்தும். இங்கே கவனிக்க வேண்டிய விடயம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அமைக்கப்படும் வகுப்பறைகள் போல் மாணவர்களின் இயற்கைத் தேவைகளுக்காக கழிவறைகளும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைக்கப்படுகின்றதா என்பதாகும். எந்த அரச பாடசாலையும், தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து கொடுக்கின்றனவா என்றால் சரியான முடிவை எட்ட முடிவதில்லை. கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கூட இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.


இங்கு நாம் யாரும் கல்விசார் விடயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போல் பாடசாலைகளிலே உள்ள கழிப்பறைகள் பற்றி வெளிப்படையாக யோசிப்பதோ, கதைப்பதோ இல்லை. கழிப்பறை வசதிகள், சலகூடம் (urinate), மலசல கூடம் (Toilets) இருக்கின்றது என்று தனியார் கல்வி நிறுவனங்களும் தங்களின் விளம்பரங்களில் சொல்வதில்லை. காரணம், கழிப்பறை என்பது அவர்களுக்கு அருவருப்பான விசயமாக இருக்கலாம் அல்லது அது சொல்லுகின்ற அளவிற்கு முக்கியத்துவம் இல்லாததாகக் கூட கருதலாம்.

ஆனால் அவற்றின் குறைபாடுகள் மூலமாகப் பல மாணவ, மாணவிகள் நோய்வாய்ப்பட்ட நிலையும் இங்கே தோன்றி வருகின்றன.

கல்விக் கூடங்களின் கழிப்பறை வசதி விசயத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான் என்பதை நம்மில் பலரும் அறிய முடிவதில்லை. குறிப்பாக பாடசாலைகளில் ஆரம்ப பாடசாலை முதல் ஆரம்பித்து இந்த பிரச்சனை க. பொ. த உயர்தர வகுப்புவரை தொடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆண்களைப் போல் பெண் மாணவிகள் கண்ட நிண்ட இடங்களில் அவசரத்திற்காக சிறுநீர் கழிப்பதில்லை.


எமது பல்கலைக்கழகங்களைப் பொறுத்தமட்டில் கழிப்பறை வசதிகள் சிறப்பாக உள்ளதுடன், அவற்றைப் பராமரிக்கவென்றும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் போதுமான அளவு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


இலங்கையில் க.பொ.த. (உ/த) முடிவடைந்த பின்னரே தொழில் (professional), தொழிநுட்ப (technical), பணம் உழைக்கும் கற்கைகளைப் (money based courses) பெறவே தனியார் துறை நகரப் பகுதிகளில் அதிக கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து வருகின்றன. இங்கே வளர்ந்த மாணவர்களுக்கே தனியார் துறையில் கல்வி பயில்வதற்கான தேவை ஏற்படுகிறது. அரச பாடசாலைகளிலும், தனியார் பாடசாலைகளிலும் என கழிப்பறை வசதி விடயத்தில் பெண்குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, கழிப்பறை வசதி பாடசாலை வளாகத்தில் இல்லாமல் இருப்பது, சில வேளைகளில் இருந்தாலும் பராமரிப்பின்றி இருப்பது, போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பது, தண்ணீர் இல்லாமல் இருப்பது, பாத்திரம் (வாளி, கப்) இல்லாமல் இருப்பது, உள்ளே நுளைய முடியாதளவு துர் நாற்றம் வீசுவது, கதவில் தாழ்ப்பாள் இல்லாமல் இருப்பது, வகுப்பறையில் இருந்து தூரத்தில் தனியாக இருப்பது, இப்படி பல்வேறு காரணங்களினால் கிராமப் பாடசாலைகள், நகரப் பாடசாலைகள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அனைத்துப் பாடசாலைகளிலும் இந்தப் பிரச்சனை மௌனமாக மாணவிகளால் அனுபவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.


இந்த நேரத்தில் சில விதிவிலக்கும் உண்டு என்பதையும் நாம் கூற வேண்டும். எதுவானாலும் பெரும்பாலான பாடசாலைகளில் கழிப்பறைகளின் நிலை இப்படித்தான் இருக்கின்றது என்பதுடன் சில பாடசாலையில் சிறப்பாக போதுமான அளவு கழிவறைகள் உள்ளதோடு அவை அதிபர்களால், பொறுப்பான ஆசிரியர்களால் சரியான நிருவாகத்துக்குட்படுவதையும் நாம் மறந்து விடக்கூடாது.


பெரும்பாலான கழிப்பறை வசதிப் பிரச்சனைகளால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் பெண்குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை அடக்கிக்கொள்கின்றனர். காலையில் 7 மணிக்கும் முன்பாக வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகள் பி.ப. 3, 4 மணிக்கும்,பொதுப் போக்குவரத்து வாகனத்தில் தூரத்திலிருந்து பாடசாலை செல்லும் மாணவிகள் மாலை 6 மணிக்கும் வீட்டிற்கு வந்த பிறகுதான் சிறுநீர் கழிக்கின்றனர். சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்கின்றனர். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், பெரும்பாலான குழந்தைகள் பாடசாலையில் தண்ணீர் குடிப்பதில்லை. காரணம், சிறுநீர் கழிக்க வேண்டிவரும் என்பதால். இதனால் குழந்தைகள் ஆரோக்கிய குறைபாடிற்கு ஆளாகின்றனர். காலையில் இருந்து மாலை வரை தண்ணீர் குடிக்காமல் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.

மேலும், சிறுநீர் கழிப்பதை அடக்கியும் பழகிக்கொள்கின்றனர். இதனால் பாடசாலை நாட்கள் தவிர மற்ற நாட்களிலும் இதையே செய்கின்றனர். இந்தப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில் உள்ள கழிப்பறைச் சீர்கேடு காரணமாக சிறுநீர் கழிப்பதை அடக்குவதைவிட வேறு வழியே இல்லாமல் பெண் குழந்தைகள் பாடசாலை சென்று வருகின்றனர்.


இயற்கைத் தேவைகளை நேரத்துக்குப் போகாது அடக்குவது ஆரோக்கியத்திற்கு பெரும் பிரச்சனையாகும். தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் கழிக்காமல் பலமணி நேரம் அடக்குவதாலும், பெண்குழந்தைகள் சிறுநீர்த் தொற்று நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இது உடல் ரீதியான பாதிப்புக்களை மட்டுமல்லாமல் உள ரீதியான பாதிப்புக்களையும் அவர்களிடத்தில் ஏற்படுத்துகின்றது. மாடசாலை செல்ல வேண்டும் என்றாலே, அவர்கள் இந்த அவஸ்தைகளை நினைத்து பாடசாலையை வெறுக்கின்ற சூழல் ஏற்படுகின்றது.

 உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் போது அவர்களால் படிப்பில் போதிய கவனம் செலுத்த இயலாமல் போகின்றது. கழிப்பறை வசதி பிரச்சனையால் பெண் குழந்தைகளின் உடல் நலமும், மன நலமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.


தங்கள் குழந்தைகள் சிறந்த பிரபல்யமான பாடசாலையிலே படித்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகமோ அல்லது நல்ல வேலையில் அமரவேண்டும் என்று எண்ணி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான சிறந்த பாடசாலையைத் தேடுகின்றனர். பாடசாலையின் வாயிலில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பப் படிவம் பெறுகின்றனர். பாடசாலையைத் தேர்வு செய்வதில் அவர்கள் காட்டும் அக்கறையில் கொஞ்சம் கூட அப்பாடசாலையின் அடிப்படை வசதியான கழிப்பறை எவ்வாறு உள்ளது,

தங்களின் பெண்குழந்தைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்று அவர்களின் நலன்கருதி பார்ப்பதுமில்லை.

 பாடசாலைகளுக்கான அடிப்படை வசதிகள் (infrastructure facilities) பட்டியலில் கழிப்பறை அவர்களின் மனதில் வருவதுமில்லை.

பாடசாலை நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளதா, சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றனவா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, விஞ்ஞான ஆய்வு கூடம் உள்ளதா, படிப்பைவிட புறக்கிருத்திச் செயற்பாடுகள் (co- carycular activities) எவ்வாறுள்ளது என்று மட்டுமே பார்த்துத் தங்கள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால், கழிப்பறை உள்ளதா, பராமரிப்பில் இருக்கின்றதா, போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் உள்ளதா என்ற பார்வையோ, கவனிப்போ இல்லாமல் நாம் பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து பிள்ளைகளை சேர்த்துவிடுகின்றனர்.

 பிற்காலத்தில் கழிப்பறைகளின் குறைபாடுகள் பற்றிய விசயம் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தாலும் பாடசாலை நிர்வாகத்திடம் யாரும் முறையிடுவதில்லை. பெறுபேறு குறைந்தால் ஆசிரியர்களிடம் முறையிடும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் குறைவு விசயத்தில் முறையிடுவதில்லை. காரணம் ஒன்றுதான், குழந்தைகளின் ஆரோக்கியத்தை விட பெறுபேறுதான் முக்கியம். இது நகரப் பாடசாலைகளில் மட்டுமல்ல கிராமங்களிலும் இந்தப் பிரச்சனை பெரிதாகத் தான் உள்ளது. கழிப்பறை வசதி விசயத்தில் கிராமம் நகரம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஆரோக்கியம் சம்பந்தமான பேச்சுக்கே இங்கு இடமில்லை. சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தினால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கெளரவம் போன்றவை பாதிக்கப்படுகின்றன.


எல்லாவற்றிலும் பெண்கள் முதலிடம் என்று வகுப்பறையில் அவர்களைப் போற்றிப் புகழும் நம் சமூகம் கழிப்பறை வசதி விசயத்தில் அவர்களை வஞ்சிக்கின்றோம். பெண் குழந்தைகள் பள்ளிகளில் கழிப்பறைப் பயன்பாட்டில் தங்களின் மானம் காக்கப்படுவதில்லை என்றே உணர்கின்றனர்.

 நம் வீட்டில் மட்டும் கழிவறை வசதி வைத்துக்கொண்டால் போதாது. பெண்கள் புழங்கும் பொதுவெளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வேண்டும். அது முதலில் பாடசாலையாக இருக்கட்டும். அதற்கு அரசும் நாமும் சேர்ந்து முயற்சிக்கவும், செயற்படவும் வேண்டும்.

ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.
பாடசாலைக் கழிவறைகளும் பெண் மாணவிகளின் கஷ்டங்களும்.. பாடசாலைக்  கழிவறைகளும் பெண் மாணவிகளின் கஷ்டங்களும்.. Reviewed by Madawala News on 8/06/2017 04:31:00 PM Rating: 5