Ad Space Available here

'ரோஹிங்யர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஒழிந்து போனார்கள்.இதில் இராணுவத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' | ஆங் சான் சூசி-ஸபர் அஹ்மத்-

மியன்மாரில் ராகைன் பிராந்தியத்தில் வாழும் ரோஹிங்யா என்ற இனம் தான் இந்தப் பிரபஞ்சத்திலேயே அழிவில் இருக்கும் இனமாக இருக்கிறது போலும்.. பாதுகாக்கப்படவேண்டிய அரியவகை இனமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தாது மட்டும் தான் குறை. ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக 1977 இல் இருந்து காலத்திற்கு காலம் நடக்கும் கொலை விழா இந்த ஆகஸ்டில் உத்தியோகபூர்வமாய் ஆரம்பமாகி இருக்கிறது...

மியன்மாரில் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து முஸ்லிம்கள் போய்க் குடியேறி வாழ்ந்தாலும் அவர்களில் ரோஹிங்யா எனப்படும் பிரிவை தீண்டத்தகாத கீழ்சாதி இனமாகவே பார்க்கிறது அரசு. ரோஹிங்யா முஸ்லிம்கள் 1971 இல் கிழக்கு பாகிஸ்தானாய் இருந்த பங்களாதேஷம் சுதந்திரம் அடைந்த போது அங்கே இருந்து கடல்மார்க்கமாய் மியன்மார் வந்த வந்தேறிகள் என்று அரசு முத்திரை குத்தியது. வருட இறுதி போனஸாக 1982 இல் வாக்குரிமையை நீக்கியது.

அதாவது 'இந்த நாட்டில் உனக்கு எந்தவித உரிமையும் இல்லை, உன்னை வெச்சி செய்வோம்' என்று அர்த்தம்..'இந்த ஜனநாயகமே ஹறாம்..நாங்கள் வோட்டுப் போடமாட்டோம்'என்று அடம்பிடிக்கும் சில குழந்தைகள் இங்கே பூதக்கண்ணாடி போட்டு பார்க்க வேண்டிய மேட்டர் இது..வாக்குரிமையை நீக்குதல் என்பதன் கொச்சையான மீனிங் ஆண்மையை நீக்கிக் கொள்வது போல..  சொந்த நாட்டில் நடைப்பிணமாகக் கடவது  என்று அர்த்தம்

கிட்டத்தட்ட ஐம்பது வருட இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீண்டு சமாதானத்திற்காய் நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சுகியின் கண்ணசைவில் சர்வமும் அடக்கம் என்றாகிப் போன பின்பும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறை தொடர்கிறது..


அரசே அவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று காதுகுத்தி விழா எடுத்துவிட்டதாலோ என்னவோ திரும்பிப்பார்க்க ஒரு பிறவி இல்லை..சட்டவிரோத குடியேற்றவாசிகளை எல்லாம் இப்படி மிருகத்தனமாய் கொல்லலாம் என்று காட்டுவாசி சட்டம் இயற்றினால் ஐரோப்பாவும் அவுஸ்ரேலியாவும் தான் முதலில் இரத்த சமுத்திரமாகும்.

உச்சக்கட்ட சோகமாக கடந்த ஏப்ரலில் பீபீஸிக்கு பேட்டி அளித்த போது 'ரோஹிங்யர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஒழிந்து போனார்கள்.இதில் இராணுவத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' என்றார்..இராணுவ ஆட்சியாளர்களால் படாது பாடு படுத்தப்பட்ட ஆங் சான் சூசி, பதினைந்து வருசம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங்சான் சூசி, பிரித்தானியாவில் கணவர் இறந்த போது சடலத்தைப் பார்க்க பிரித்தானியா போனால் திரும்ப மியன்மார் திரும்ப கூடாது என்று இராணுவ அதிகார பீடம் கட்டளையிட்ட போது ' எனக்கு இந்த தேசமே முக்கியம்' என்று முழங்கிய ஆங் சான் சூசி, 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆங்சான் சூசி இன் இன்றைய செயற்பாடுகளுக்கும் அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகையால் பெளத்த பயங்கரவாதி என்று பட்டாபிஷேகம் சூட்டப்பட்ட மியன்மாரின் அசின் விராதுவின் செயற்பாடுகளுக்கும் இடையில் கொள்கையளவில் எந்த வேறுபாடும் இல்லை...

அதிகாரமும் மமதையும் ஆட்சியைத்  தக்கவைக்கப் பெரும்பான்மையைத் திருப்தி செய்ய வேண்டிய அடிக்க வேண்டிய லூட்டிகளும் பிரயத்தனங்களும் மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் எந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கும் பொதுவானவை..அது ஆனானப்பட்ட நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆங் சான் சூசியாய் இருந்தால் மட்டும் விதிவிலக்காகிடுமா என்ன ? 

மேர்வின் சில்வாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது போல இருக்கிறது ஆங்சான் சூசிக்கு வழங்கப்பட்டு இருக்கும் நோபல் பரிசு..அமெரிக்காவுக்கே கவலையாய் இருக்கிறதாம் என்கிறது பீபீஸீ..கவலையைப் போக்க ஒன்று தான் செய்ய முடியும்.ஆங் சான் சூசிக்கு வழங்கப்பட்ட  NOBEL பரிசை NO BALL என்று அறிவித்துவிட்டு FREE HIT எடுத்து வாங்கு வாங்கு என்று வாங்கி மியன்மாருக்குப் பொருளாதார தடை விதிக்கலாம்..வேறு தெரிவுகள் இல்லை..இன்னொரு வேடிக்கை இலங்கை சுதந்திரம் அடைய சரியாய் ஒரு மாதம் முன்பு அதாவது 1948 ஜனவரி 4 இல் சுதந்திரம் அடைந்து இருக்கிறதாம் மியன்மார்..

சிறுபான்மை இனங்களைக் கையாளும் விதத்தில் எங்களை விட ஏன் அவர்கள் முப்பது படி முன்னேறி சரித்திரம் படைத்து இருக்கிறார்கள் என்ற காரணம் இப்போதுதான் புரிகிறது...
'ரோஹிங்யர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஒழிந்து போனார்கள்.இதில் இராணுவத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' | ஆங் சான் சூசி 'ரோஹிங்யர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஒழிந்து போனார்கள்.இதில் இராணுவத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை'  | ஆங் சான் சூசி Reviewed by Madawala News on 8/29/2017 05:21:00 PM Rating: 5