Ad Space Available here

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள் குறித்த எனது கருத்தின் மீதான உணர்ச்சிபொங்கும் கருத்தாடல்களால் உண்மையை மறைக்க முடியாது.

அண்மையில் காத்தான்குடி படுகொலைகள் குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன, இது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்களிடம் விளக்கம் கோரியபோது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு


1990ம் ஆண்டு காத்தான்குடியிலே மேற்கொள்ளப்பட்டிருந்த பள்ளிவாயல் படுகொலைகள் குறித்து “1990 ஆகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடியிலே பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாள்” என நான் ஒரு பதிவினையிட்டிருந்தேன். குறித்த பதிவிற்கு முகநூலிலும், ஏனைய இணைய ஊடகங்களிலும் பதில் பதிவுகள், விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனது கருத்திற்கான உரித்தினை நானே முழுமையாகக் கொண்டிருக்கின்றேன், அத்தோடு அதன் புரிதலிற்கும் நானே முழுமையான உரித்தாளியாகின்றேன், என் சார்பில் இதற்கு வேறு எவரும் பொறுப்பாளிகள் அல்ல. என்பதை இங்கு பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்.


இவ்விடயத்தில் எழுகின்ற முதன்மையான விமர்சனம் குறித்த பதிவில் “புலிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள்” என்பதற்குப் பதிலாக “ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள்” என்ற சொற்பதமே சர்ச்சைக்குரியதாகும். இப்போதும் நான் “ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள்” என்ற சொற்பதமே பொறுத்தமானது எனக் கருதுகின்றேன். இதற்குப் பின்னால் இருக்கின்ற நியாயத்தை நான் முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். இப்படுகொலைகளை புலிகளே மேற்கொண்டார்கள் என்பது நான் உட்பட எல்லோரும் தெரிந்த உண்மை; அதிலே எவ்விதமான மாற்றுக் கருத்தும் இருக்க நியாயமில்லை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) முக்கிய உறுப்பினராகிய முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் இதுவிடயத்தை என்னிடம் குறிப்பிட்டிருந்தார்கள். எனவே இவ்விடயத்தை புலிகள் மேற்கொள்ளவில்லை என்று கருதுமளவிற்கு அல்லது கூறுமளவிற்கு நான் ஒன்றும் வரலாறும் வலியும் தெரியாதவன் அல்ல.


இப்போது நாம் வேறு ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது. அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எவரும் இல்லாத சூழ்நிலையிலேயே இப்போது நாம் இருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் குறித்து தமிழ் மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டியிருக்கின்றது. தமிழ் மக்களில் பெரும்பாலனவர்கள் “புலிகளை புனிதர்களாகவே” கருதுகின்றார்கள், அவர்களுக்கு அதுவிடயத்தில் முழுமையான உரித்தும் நியாயப்பாடுகளும் இருக்கின்றன. எனவே புலிகள் என்ற சொற்பதத்தைப் பிரயோகிப்பதன் மூலம் தமிழ் மக்கள் குறித்த படுகொலைகளை “புலிகள் செய்திருந்தால் அது நியாயமானதாகவே இருக்கும்” என்ற கருத்தை இவ்விடயத்தில் ஏற்படுத்திக்கொள்வார்கள். எனவே ஆயுததாரிகள் என்ற சொற்பதம் குறித்த விடயத்தில் சரியான புரிதலை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். இதுவே எனது உண்மையான எண்ணமாகும். 


இதுவிடயத்தில் என்மீது குற்றம் சுமத்துகின்ற பலர் அவர்களுக்கு விருப்பமான வார்த்தைகளில் நான் பேசவில்லை என்பதாக குறைப்படுகின்றார்கள். அத்தோடு நிறுத்தாமல் அவர்களது எண்ணங்களில் உதிக்கின்ற எல்லாவற்றையும் இவ்விடயத்தை மையப்படுத்தி கொட்டித்தீர்த்திருக்கின்றார்கள். புலி ஆதரவாளான், புலிப் பாதுகாவலன், பதவி மோகம் கொண்டவன், துரோகி, இன்னும்பல வசைபாடல்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய கருத்துக்களுக்கு அவர்களே பொறுப்பாளர்கள். 


மேற்படி முட்டிமோதிய விமர்சன அலைகளுக்கு முன்னால் எனக்குள் எழுந்த எண்ணங்களையும் இங்கு பகிர்வது சிறப்பானது என்று எண்ணுகின்றேன். 1990 ஆகஸ்ட் 03 நாள் நிகழ்ந்த குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் ஒரு உறவினர் தன்னும் ஏதாவது ஒரு நீதிமன்றில் மேற்படி படுகொலைகளைச் செய்த புலிகள் மீது எவ்விதமான வழக்குகளையும் பதிவு செய்யவில்லை; அரசாங்கமும் அவ்வாறு எவ்வித வழக்குகளையும் பதிவுசெய்யவில்லை; அப்போதைய காலசூழ்நிலைகள் சாதகமாக இல்லாத நிலையில் வழக்குகளைப் பதிவு செய்வதற்கு நாம் பின்னின்றமை நியாயமானதுவே. ஆனால் இப்போது அதற்கான சூழ்நிலை இருக்கின்றது. முன்னர் நிகழ்ந்த பல்வேறு அநீதிகளுக்கு மக்கள் நீதி வேண்டி நீதிமன்றங்களை நாடி போராடத் தொடங்கியிருக்கின்றார்கள். இப்போது தன்னும் ஒரு முஸ்லிம் அரசியல் தலைவருக்கோ; அல்லது சமூகத் தலைவர்களுக்கோ; அல்லது முஸ்லிம் பொதுமகன் ஒருவருக்கோ; குறித்த விடயத்தில் நீதிவேண்டி வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு வழக்குத்தாக்கல் செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை.


அதுமாத்திரமின்றி இதுவரை கண்கண்டதாகவும், வாய்ப்பேச்சுக்களிலும், பொதுவழக்கிலும் புலிகளே மேற்படி படுகொலைகளைச் செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது; இது ஒருவேளை உண்மையாக இருக்கும். ஆனால் அவை சமூகத்தளத்திற்கு வெளியில் நிரூபனம் செய்யப்படவில்லை என்கின்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்தல் அவசியம். புலிகளே செய்தார்கள் என்று சொல்லப்படுவதோடு இணைத்து இதிலே வேறு சக்திகள் தொடர்புற்றிருக்கின்றார்களாக என்பதையும் அறியவேண்டியுள்ளது. 


1990 காலப்பகுதியில் கருணா போன்றவர்களே புலிகள் இயக்கத்தின் கிழக்கிற்கான பொறுப்பாளர்களாக இருந்தார்கள், இப்போதும் உயிரோடிருக்கின்ற கருணா போன்றவர்களுக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுக்கமுடியும். அப்போது உண்மை கண்டறியப்படும். புலிகள்தான் இதனைச் செய்தார்கள் என்று உறுதிபடக் கூறமுடியும். இவ்வாறெல்லாம மேற்கொள்ளவேண்டிய காத்திரமான பணிகள் நிறையவே இருக்கின்றபோதும்; வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் காலத்தையோட்டுகின்ற ஒரு கூட்டம் தம்முடைய கூக்குரல்களினால் யதார்த்தங்களை அழித்துவிடப் பார்க்கின்றது. இதனைப் புரிந்துகொள்கின்ற அளவிற்க்கு முஸ்லிம் இளைஞர்களுக்கும், தலைவர்களுக்கும் பக்குவம் இருக்கின்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனாலும் சொல்லப்படவேண்டியவற்றை சொல்லியேதீரவேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். எதையும் நேர்படவே நான் பேசுவேன். என்றும் தெரிவித்தார்.

தகவல் எம்.எல்.லாபிர்

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள் குறித்த எனது கருத்தின் மீதான உணர்ச்சிபொங்கும் கருத்தாடல்களால் உண்மையை மறைக்க முடியாது. காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள் குறித்த எனது கருத்தின் மீதான உணர்ச்சிபொங்கும் கருத்தாடல்களால் உண்மையை மறைக்க முடியாது. Reviewed by Madawala News on 8/04/2017 08:35:00 PM Rating: 5