tg travels

தொடரும் விபரீதம். தமிழகத்தில் நீலத் திமிங்கிலம் கைத்தொலைபேசியில் விளையாடி கல்லூரி மாணவன் தற்கொலை.

 
தமிழகம்:
புளுவேல் என்ற இணையதள விளையாட்டுக்கு, மதுரையில் கல்லூரி மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புளுவேல் எனப்படும் இணையதள விளையாட்டு உலக அளவில் குழந்தைகளை அடிமையாக்கி வருகிறது. 50 நிலைகளாக விளையாடப்படும் இந்த விளையாட்டு 50வது நிலையில் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புளுவேல் விளையாட்டுக்கான தொடர்பு முகவரிகளை நீக்குமாறு இந்திய  மத்திய அரசு உத்தரவிட்டது. புளூவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து தமிழக போலீசாரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தியாவில் இந்த விளையாட்டினால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக மாணவர் ஒருவர் புளுவேல் விளையாட்டுக்கு உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மொட்டை மலை கிராமத்தில் வசித்து வந்தவர் விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன். இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். புளுவேல் விளையாட்டை தன் கைபேசியில் டவுன்லோடு செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக வீட்டிலும், உறவினர்களுடனும் எதுவும் பேசாமல் ஒருவிதமான குழப்பமான மனநிலையோடு விக்னேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் நேற்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளுவேல் விளையாட்டை விளையாடியுள்ளார். ஆட்டத்தின் முடிவில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் விக்னேஷ் தனது இடது கையில் புளுவேல் எனப்படும் நீலத் திமிங்கலத்தின் படத்தையும், விளையாட்டின் விபரீதம் குறித்தும் எழுதி வைத்துள்ளார்.

மாணவன் தற்கொலை குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலிசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றாக படிக்க கூடிய மாணவன் வலைதளத்தின் மூலமாக விஷம விளையாட்டினால் உயிரிழந்ததைக் கண்டு விக்னேஷின் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொடரும் விபரீதம். தமிழகத்தில் நீலத் திமிங்கிலம் கைத்தொலைபேசியில் விளையாடி கல்லூரி மாணவன் தற்கொலை. தொடரும் விபரீதம்.  தமிழகத்தில் நீலத் திமிங்கிலம் கைத்தொலைபேசியில்  விளையாடி கல்லூரி மாணவன் தற்கொலை. Reviewed by Madawala News on 8/31/2017 07:02:00 AM Rating: 5