Kidny

Kidny

தேவையற்ற வகையில் இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் ..


(வத்துகாமம் நிருபர்)

முஸ்லிம்கள் எதிர்வரும் நாட்களில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்காக சட்டவிதிகளுக்கமைய மாடுகளை இடத்திற்கிடம் எடுத்துச் செல்வதில் எதுவித தடையுமில்லை என்றும் அவ்வாறு யாரும் தேவையற்ற வகையில் இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாடுகளை எடுத்துச் செல்வதில் தேவையற்ற விதத்தில் இடையுறுகள் மற்றும் பொலீஸ் கெடுபிடிகள் ஏற்படுவதாகவும் பலர் மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் அவர்களிடம் முறையிட்டதை அடுத்து மாகாண சபை அங்கத்தவர் மத்திய பிராந்தியத்திற்கான பிரதி பொலீஸ் மா அதிபர் மகேந்திர ஏக்கநாயக்கா அவர்களை சந்தித்து கலந்துரையாடினார் (17.8.2017).


அதன் போது பிரதி பொலீஸ்மா அதிபர் தெரிவித்தாவது-


நாட்டில் நடைமுறையில் சில சட்டவிதிகள் உண்டு. பொது மக்களின் வசதிக்காகவே அவ்வாறான சட்டவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அது பொதுவானதாகும். அதனை மீறுவது தவறான செயலாகும். அதேநேரம் சட்ட விதிதகளுக்கமைய ஒருவர் நடந்துகொள்வதை யாரும் குற்றம் காணவும் முடியாது. இந்நிலையில் இறைச்சிக்காக அல்லது வேறு காரணங்களுக்காக மாடுகளை எடுத்துச் செல்லும் போது அதற்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. 


அனுமதிப்பத்திரத்துடன் மாடுகளை எடுத்துச் செல்வதில் எதுவித தங்கு தடையுமில்லை. அதனை யாரும் தடுக்கவும் முடியாது.

ஆனால் மேற்படி சலுகையை சிலர் துஷ்பிரயோகம் செய்வதாலே சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வருகிறது. குறிப்பிட்ட வாகனத்தில் இத்தனை மாடுகள்தான் ஏற்ற வேண்டும் என்றே அனுமதியளிக்கப்படுகிறது. உதாரணமாக- 10 மாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு 11 மாடுகள் கொண்டு செல்லப்பட்டால் அது சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்படும்.


அதேபோல் குறிப்பிட்ட அனுமதிப்பத்திரத்திற்கு குறிப்பிட்ட கால எல்லை விதிக்கப்படும். அதேபோல் குறிப்பிட்ட பாதையும் ஆரம்பிக்கும் இடமும் முடிக்கும் இடமும் குறிப்பிடப்படும். அப்படியான எல்லைகளை மீறி காலம் தாழ்த்தி அல்லது குறித்த காலத்திற்கு முன்பு எடுத்துச் செல்ல முடியாது.

அதேபோல் குறிப்பிட்ட பயணப்பாதை குறிப்பிடப்பட்டுள்ளபோது வேறு பாதையிலும் எடுத்துச் செல்ல முடியாது. உதாரணமாக மாத்தலையிலிருந்து கண்டிக்கு வரகாமுறைப் பாதை என்று குறிப்பிடப்பட்டிருப்பின் வத்தேகம பாதையாலோ அல்லது கூம்பியன்கொடை வழியாகவோ கொண்டு சென்றால் அதுவும் சட்ட விரோதமாகவே கருதப்படும்.

இது தவிற பொலீஸ் போக்குவரத்து விதிமுறைகள் உண்டு. குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாத வாகனம், அல்லது பொலீஸாரின் சமிக்கையை உதாசீனம் செய்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், அதிக வேகமாக செலுத்துதல் போன்ற காரணங்களுக்காகவும் குறிப்பிட்ட வாகனம் தடுத்து நிறுத்தப்படலாம். அல்லது தக்க காரணம் இன்றி சந்தேகத்தில் பரிசீலணைக்காக மாடுகளை எடுத்துச் செல்லும் ஒரு வாகனம் நிறுத்தப்படலாம். அப்படியான நேரங்களில் பொலீஸ் கட்டளையை மீறிச் சென்றவர்களை பின்னர் துரத்திச் சென்று பிடிபட்ட சம்பவங்களும் உண்டு.

எனவே எதிர்வரும் ஹஜ் காலங்களில் 'குர்பான்' கடமைக்காக மாடுகளை சட்ட ரீதியான அனுமதிப்பத்திரத்துடன் எடுத்துச் செல்வது, அனுமதி அளிக்கப்பட்ட விதத்தில் தேவையான ஆவணங்களைச் சமர்பித்து குர்பான் கொடுத்தல் போன்றவை அனுமதிக்கப்பட்ட விடயங்களாகும்.

இதனை யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி உரிய ஆவணங்கள் இருந்து அனுமதி பெறப்பட்ட சந்தர்ப்பங்களில் தவறான கைதுகள் மேற்கொள்ளப்பட்டால் தன்னுடன் தொடர்பு கொள்ள முடியும் என மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.அல்லது நேரடியாகவே பிரதி பொலீஸ் மா அதிபருக்கு அறிவிக்க முடியும் என்றும் கூறினார்.

தேவையற்ற வகையில் இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் .. தேவையற்ற வகையில் இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் .. Reviewed by Madawala News on 8/18/2017 12:10:00 AM Rating: 5